இந்திய அரசியல் சாசன முகப்புரை சர்ச்சை : பண்டோராவின் பெட்டியும் சரிகைத் தாளும்
2015 ஜனவரி 26 ஆம் தேதி காலை ஒரு கோப்பை காப்பியுடன் செய்தித் தாளைப் படித்த இந்திய மக்கள் பலருக்கும் ஒரு சிறிய அதிர்ச்சி.அதற்குக் காரணம் மத்திய தகவல் தொடர்பு ,ஒளிபரப்பு அமைச்சகம் சார்பாக செய்தி காட்சி விளம்பர இயக்குநரகம் வெளியிட்டிருந்த இந்தியாவின் 66 ஆவது குடியரசு தின விளம்பரம் தான். தேசத்தின் நிகழ்கால, எதிர் கால நலன்களில் அக்கறை கொண்டு இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் ஒரு சிறிய முகப்புரை கொடுத்திருக்கிறார்கள்.
அந்த முகப்புரை இது தான் :
பாரத தேசத்தை சர்வ சுதந்திரமுள்ள,சமதர்ம, மதசார்பற்ற,ஜனநாயகக் குடியரசாக அமைப்பதற்காக மனமுவந்து இந்திய மக்களாகிய நாங்கள் உறுதி பூண்டு அதன் குடிமக்கள் அனைவருக்கும் சமூக ,பொருளாதார,அரசியல் நீதி; சிந்தித்தல், அதை வெளிப்படுத்துதல்,மத நம்பிக்கை,விசுவாசம்,வழிபாடு ஆகியவற்றிற்கு சுதந்திரம்;சமூக நிலையிலும்,வாய்ப்பிலும் சமத்துவம்; ஆகியவை கிடைப்பதையும், தனி மனித நன்மதிப்பையும்,தேசத்தின் ஒற்றுமையையும், நேர்மையையும் உறுதி செய்யும் வண்ணம் அனைவரிடையே சகோதரத்துவம் வளர்வதையும் உறுதி செய்கிறோம்.இந்த அரசியல் சாசனத்தை நம் அரசியலமைப்பு உருவாக்க அவையில் 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி இயற்றி ,பின்பற்ற ஏற்றுக் கொண்டு,ஆணையிட்டு நமக்கே வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
குடியரசு தினத்தன்று வெளியான அரசு விளம்பரத்தில் இந்திய அரசியல் சாசன முகப்புரை இடம்பெற்றிருந்தது.பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகும் படியாக அது ‘சமதர்மம் அல்லது சோஷலிசம்’, ‘மத சார்பின்மை’ ஆகிய இரண்டு சொற்கள் நீக்கப்பட்டு ‘பாரத தேசத்தை சர்வசுதந்திரமுள்ள குடியரசாக....”என வெளியாகி இருந்தது.ஒரு தவறு நடந்துள்ளது; சமதர்மம்,மத சார்பின்மை ஆகிய இரண்டு வார்த்தைகள் விடுபட்டுள்ளன. அதை மறந்து விடுவோம் என்று இருக்க எல்லோரும் தயாராக இல்லை.அதற்குக் காரணம் மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு மீது சில அரசியல் கட்சிகளும்,பொது மக்கள் சிலரும் கொண்ட சிறிய அவநம்பிக்கை தான்.அண்மையில் நடந்த சில நிகழ்ச்சிகளுக்கும் இந்த விளம்பரத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கும் என அவர்கள் சந்தேகிக்கிறார்கள். இப்போது ‘கர் வாப்ஸி’ அதாவது தாய் வீடு திரும்புதல் என்ற மறுமதமாற்ற நடவடிக்கை விஸ்வ ஹிந்து பரிஷத்,ஆர் எஸ் எஸ் போன்ற இந்து அமைப்புகளால் மேற்கொள்ளப்படுகிறது.அதன் மூலம் இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்குச் சென்ற சிலர்,தங்கள் சம்மதத்தோடு தாய் மதத்திற்குத் திரும்பும் நிகழ்ச்சிகள் நாட்டின் பல இடங்களில் நடைபெறுகின்றன.அவை 2014 ஆண்டில் மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கி இருக்கின்றன.அது அடங்குவதற்குள் மத்திய தகவல் தொடர்பு ,ஒளிபரப்பு அமைச்சகம் குடியரசு தின விளம்பரத்தில் இந்திய அரசமைப்பு முகப்புரையை தணிக்கை செய்து வெளியிட்டுள்ளது. விடுவார்களா மத சார்பின்மையில் ஊறித்திளைத்த சில அரசியல் கட்சித்தலைவர்களும், சமூக ஆர்வலர்களும்;கொதித்து எழுந்து விட்டார்கள்.
இப்போது அரசியலமைப்பு முகப்புரைக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பு.1947இல் விடுதலை பெற்ற இந்திய மக்கள் உரிமையோடு பெற வேண்டிய பரிசு இந்திய அரசியல் சாசனம் .ஒரு வகையில் அதன் மேல் சுற்றப்பட்ட சரிகைத்தாள் போன்றது தான் அந்த முகப்புரை.அது இந்திய அரசியல் சாசனத்தின் மற்ற பக்கங்களோடு, ஜபல்பூரைச் சேர்ந்த புகழ் பெற்ற ஓவியர் பியோஹர் ராம் மனோகர் சின்ஹாவால் அலங்கரிக்கப்பட்டது.இந்தியாவின் அரசியல் சாசனம் தயாராகிவிட்டது. அது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைக்கு வரும் போது இந்தியா குடியரசாகிவிடும்.இரு நூறு ஆண்டு கால பிரிட்டிஷ் ஆட்சி; அதற்கு முன்னால் இருந்த சுமார் முன்னூறு ஆண்டு கால முகலாயர் ஆட்சி இவற்றைக் கடந்து ஒன்றுபட்ட இந்தியாவை இந்திய மக்கள் ஆளப்போகிறார்கள்.அதாவது தங்களைத் தாங்களே ஆட்சி செய்யப்போகிறார்கள்.இந்தியாவின் ஜனாதிபதி முதல் கடைசிக் குடிமகன் வரை நம்பிக்கை வைத்திருக்கும் இந்தியாவின் சட்ட வேதமான இந்திய அரசியல் சாசனம் எளிதாகக் கிடைத்து விடவில்லை.ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே அதற்கான விதை போடப்பட்டு அது முளைவிட்டு, துளிர்த்து பல சோதனைகளையும், இடையூறுகளையும் தாண்டி உருப்பெற்றது.
இந்திய அரசயலமைப்பிற்கான கருவறை 1946 இல் அமைக்கப்பட்ட இந்திய அரசியல் நிர்ணய சபை.இந்தியாவிற்கென்று தனி அரசியல் சாசனம் உருவாக்கப்பட ஓர் அரசியல் நிர்ணய சபை தேவை என்று 1934 ஆம் ஆண்டு அதை முன்னெடுத்தவர் எம்.என்.ராய்.அவர் தான் இந்திய கம்யூனிச இயக்கத்திற்கான முன்னோடி.1935 இல் அரசியல் நிர்ணய சபை வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பிரிட்டிஷ் அரசிடம் தனது அதிகார பூர்வமான கோரிக்கையாக வைத்தது.1940 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களை தேர்தல் மூலமாக மாகாண சட்டசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
அரசியல் நிர்ணய சபை இந்திய அரசியல் சாசனத்தின் வரைவை தயார் செய்ய வேண்டும். பிரிட்டிஷ் அரசின் கேபினட் தூதுக்குழு முடிவின் படி அது நடைமுறைப்படுத்தப்படும்.அரசியல் நிர்ணய சபைக்கு மொத்தம் 389 உறுப்பினர்கள் தேவை.மாகாணங்களில் இருந்து 296 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.சமஸ்தானங்களில் இருந்து வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 93.
அரசியல் நிர்ணய சபைக்கு 1946 இல் நடந்த தேர்தலில் சமஸ்தானங்கள் நீங்கலாக மாகாணங்களில் இருந்து காங்கிரஸ் சார்பாக மொத்தம் 208 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் .முஸ்லிம் லீக் சார்பாக் 73 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். எஞ்சிய உறுப்பினர்கள் மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
ஒன்றிணைந்த இந்தியாவுக்காக அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை முதல் முதலாக 1946 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி கூடியது.அதன் முதல் தலைவராக டாக்டர் சச்சிதானந்த சின்ஹா இருந்தார். அதன் பின் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அதன் தலைவரானார்.அப்போது சபையின் முக்கிய உறுப்பினர்களாக ஜவகர்லால் நேரு,ராஜாஜி,சர்தார் வல்லபாய் பட்டேல்,டாக்டர் அம்பேத்கர்,சன்திப் குமார் படேல், மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஷியாம பிரசாத் முகர்ஜி, நளினி ரஞ்சன் கோஷ், பல்வந்த் சிங் மேத்தா ஆகியோர் இருந்தனர். தாழ்த்தப்பட்ட வகுப்பினர், ஆங்கிலோ இந்தியர்,பார்சி இனத்தவர்,கிறிஸ்தவர் போன்ற அனைத்து பிரிவினர் சார்பாக அந்த சபையில் பிரதிநிதிகள் இருந்தார்கள்.
தேர்தலுக்குப் பிறகு முஸ்லிம் லீக் காங்கிரஸோடு ஒத்துழைக்க மறுத்தது.அது அப்போது பிரிட்டிஷ் அரசிடமும் முரண்டு பிடிக்க ஆரம்பித்தது. முஸ்லிம் லீக் தனி நாடு கோரிக்கையை அழுத்தமாக தனது பாணியில் வலியுறுத்தியது.இனக்கலவரமும், வன்முறையும் நாட்டின் பல இடங்களில் வெடித்தன.அவை சில இடங்களில் கொழுந்து விட்டு எரிந்தன.
ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக் தனி பாகிஸ்தான் கொடு;அதற்கு ஒரு தனி அரசியல் நிர்ணய சபை கொடு என்றது.கவர்னர் ஜென்ரல் மவுண்ட் பேட்டன் வம்பே வேண்டாம் என்று ஒன்றிணைந்த இந்தியாவுக்கான அரசியல் நிர்ணய சபையை நீக்கும் தமது முடிவை1947 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி அறிவித்தார். அந்தக் களேபரங்களை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இந்திய விடுதலைச்சட்டம் 1947 அமுலுக்கு வந்தது.அதன் படி இந்தியாவும், பாகிஸ்தானும் விடுதலை பெற்ற இரண்டு தனி டொமினியன்கள் ஆயின.
தேசப்பிரிவினை உறுதியாகி விட்டபடியால் மவுண்ட் பேட்டன் திட்டத்தின் படி 1947 ஜூன் 3 ஆம் தேதி பாகிஸ்தானில் அதற்கென தனி அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டது.இப்போது பாகிஸ்தான் பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் பதவி இழந்தார்கள். அதனால் பாகிஸ்தான் வசம் போன மேற்கு பஞ்சாப்,கிழக்கு வங்காளம் ஆகியவற்றில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.தேசப்பிரிவினைக்குப் பிறகு மாற்றி அமைக்கப்பட்ட இந்தியாவிற்கான அரசியல் நிர்ணய சபையில் 299 உறுப்பினர்கள் இருந்தார்கள்.
தனி இந்தியாவிற்கான அரசியல் நிர்ணய சபை 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி கூடிய போது அது பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்குப் பிறகு இந்தியாவை ஆளும் தகுதி படைத்த சுதந்திரமுள்ள சபையாக மதிக்கப்பட்டது.அப்போது சபை சில குழுக்களைஅமைக்க முடிவு செய்தது.அவற்றுள் ஒன்று தான் இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழு.அதன் தலைவராக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நியமிக்கப்பட்டார்.அந்தக்குழுவில் கோபால்சாமி ஐயங்கார்,அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி. பி. கைதான் ஆகிய ஆறு பேரும் இருந்தார்கள். மேலும் அந்தக் குழுவுக்கு உதவ அரசியலமைப்பு ஆலோசகராக பி.என்.ராவ் நியமிக்கப்பட்டார்.அவர் தான் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை வரைவை தயார் செய்தவர்.
அந்தக் குழு, இந்திய அரசியல் சாசன வரைவை தயார் செய்து அரசியல் நிர்ணய சபையில் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி சமர்பித்தது.சுமார் இரண்டு வருட காலம் பல விவாதங்கள் நடத்தப்பட்டன.அரசியலமைப்பு வரைவில் 2000 திருத்தங்கள் செய்யப்பட்டன.இறுதியாக 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி பணி முடிவடைந்து இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.சபையின் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் உட்பட 284 உறுப்பினர்கள் கையொப்பமிட இந்திய அரசியல் சாசனம் உருவாகிவிட்டது.
இந்த ஆண்டு மத்திய அரசின் குடியரசு தின விளம்பரத்தில் உள்ள அரசியல் சாசன முகப்புரையில் இருந்து நீக்கப்பட்டிருந்த இரண்டு வார்த்தைகளும் 1949 ஆம் ஆண்டில் இருந்து அதில் இருப்பவை அல்ல.சமதர்மம்,மதசார்பின்மை ஆகிய இரண்டு பதங்களும் 1977 ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் அரசு அரசியல் சாசனத்தில் கொண்டு வந்த 42 வது திருத்தத்தின் படி அரசியல் சாசன முகப்புரையில் சேர்க்கப்பட்டன.அதன் காரணமாக ‘சர்வ சுதந்திரமுள்ள ஜனநாயகக் குடியரசு’ என்பது சர்வ சுதந்திரமுள்ள, சமதர்ம ,மதசார்பற்ற ஜனநாயகக் குடியரசு என மாறி விட்டது.42 வது திருத்தம் மேலும் ஒரு மாற்றத்தை முகப்புரையில் கொண்டு வந்தது.அதில் இருந்த ‘தேசத்தின் ஒற்றுமை’ என்ற சொற்றொடர் ‘தேசத்தின் ஒற்றுமை,நேர்மை’ என்றாகியது.அதாவது ‘தேசத்தின் நேர்மை’ ‘தேச ஒற்றுமை’யுடன் சேர்க்கப்பட்டது.இந்த இடத்தில் முக்கியமான ஒன்றை குறிப்பிட வேண்டியுள்ளது.இந்த திருத்தத்திற்குப் பிறகு நம் தமிழ் நாட்டு சட்ட வல்லுனர்கள் சிலராலும்,நூலாசிரியர்களாலும் ஒரு தவறு தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.
நம் தேசத்தின் அதிகார பூர்வமான அரசியல் சாசனம் முதலில் ஆங்கிலத்தில் தான் வெளியிடப்பட்டது. 42 வது திருத்தத்தின் போது அதன் முகப்புரையில் இருந்த ‘uஸீவீtஹ் ஷீயீ tலீமீ ஸீணீtவீஷீஸீ’ என்ற சொற்றொடர் ‘uஸீவீtஹ் ணீஸீபீ வீஸீtமீரீக்ஷீவீtஹ் ஷீயீ tலீமீ ஸீணீtவீஷீஸீ’ என்று மாற்றப்பட்டது.தமிழில் இதனை மொழி பெயர்ப்பவர்கள் ‘தேச ஒற்றுமையையும்,ஒருமைப்பாட்டையும்’ என்று எழுதுகிறார்கள்.இது தவறு.யூனிட்டி என்ற ஆங்கில வார்த்தை தமிழில் உள்ள ஒற்றுமை,ஒருமைப்பாடு ஆகிய இரண்டு வார்த்தைகளையும் ஒரு சேரக்குறிக்கிறது.இன்ட்டெகிரிட்டி என்ற வார்த்தையும் ஒற்றுமை,ஒருமைப்பாடு ஆகியவற்றைக் குறிப்பது தான். அதே வேளையில் இன்ட்டெகிரிட்டி என்ற வார்த்தைக்கு அழுத்தமான ஒழுக்கமுடைமை,நேர்மை,மேன்மை போன்ற முக்கிய பொருள்களும் உள்ளன. ஒன்றையே இரண்டு முறை சொல்ல வேண்டியதில்லை.எனவே முகப்புரையில் உள்ள இன்ட்டெகிரிட்டி என்ற சொல் நேர்மையையே குறிக்கிறது.இதை சிலர் கவனிக்கத் தவறி சுதந்திரமான மொழிபெயர்ப்பு செய்து தேச ஒற்றுமை,ஒருமைப்பாடு என்று எழுதுகிறார்கள்.தேசத்திற்கு நேர்மை தேவை இல்லை என அவர்கள் நினைக்கிறார்கள் போலும்.
மத்திய அரசு விளம்பரத்தில் வெளியான அரசியலைமைப்பு முகப்புரையில் இரண்டு பதங்கள் விடுபட்டுப் போனதைக் கண்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு மின்சார அதிர்ச்சி உண்டாவதற்கு மேலும் ஒரு முக்கிய காரணமிருக்கிறது.அவை இரண்டும் இந்திரா காந்தியின் ஆட்சியில் அவசர நிலை அமுலில் இருந்த போது 1977 இல் சேர்க்கப்பட்டவை.அதனால் பழைய கொடுமை நிறைந்த நாட்கள் மனதில் நிழலாடுகின்றன.இந்த விளம்பரம் அரசியலமைப்பு தொடர்பாக சில முக்கியமான நிகழ்வுகளை மக்கள் நினைவுபடுத்திப் பார்க்க உதவுகிறது. அவசரநிலை பிரகடனத்தைத் தொடர்ந்து அரசியல் சாசனத்தில் இந்திரா காந்தி அரசு கொண்டு வந்த திருத்தங்கள் அவ்வளவு எளிதாக மறந்து விடக்கூடியவை அல்ல.ஏனென்றால்அவற்றில் பலவற்றை பின்னால் வந்த அரசுகளால் மாற்றி அமைக்க முடியவில்லை.
ஓர் அரசியல் தலைவர் எப்படி சர்வாதிகாரியாக மாறுகிறார் என்பதற்கு நல்ல உதாரணம் இந்திரா காந்தியின் அரசியல் வரலாறு.நவ இந்தியாவின் சிற்பி பண்டிதர் ஜவகர்லால் நேரு 1947 முதல் 1964 வரை சுமார் 17 வருட காலம் இந்தியாவை மிகச் சிறப்பாக ஆட்சி செய்தார். நேருவின் நிர்வாகத்தில் அதிகாரம் தலைமையில் குவிந்திருந்தது . அவர் ஆட்சி காலத்தில் தொடர்ந்து இந்திரா மறைமுகமாகவும், சில வேளை வெளிப்படையாகவும் முக்கிய பங்காற்றி வந்திருக்கிறார்.
நேருவின் ஒரே செல்ல மகள் இந்திரா.அவர் நாட்டை ஆள்வதற்காக வளர்க்கப்பட்டவர்.நேரு அரசின் அதிகார மையத்தில் பங்களித்து வந்த இந்திரா 1959 இல் அகில இந்திய காங்கிரஸின் தலைவரானார். 1966 ஆம் ஆண்டு லால்பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் தேர்தல் நடந்தது.அதில் இந்திரா, மொரார்ஜி தேசாயை வென்றார்.அதன் பின், காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்த காமராஜரின் ஆசியோடு இந்தியாவின் பிரதமரானார்.1967 ஆம் ஆண்டு நடந்த நாடளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தாலும் முன்பிருந்த மக்கள் செல்வாக்கு சரிந்து விட்டது தெளிவாகத் தெரிந்தது.இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார்.
அம்முறை இந்திராவின் போக்கு காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பலருக்குப் பிடிக்கவில்லை.இந்திரா காந்தி தனக்கான ஒரு கூட்டத்தை கட்சியில் ஏற்படுத்திக் கொண்டார்.அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த நிஜலிங்கப்பா இந்திரா காந்தியை கட்சியில் இருந்து நீக்கி ஓர் இமாலயத் தவறைச் செய்தார்.இந்திராவின் மக்கள் செல்வாக்கை அவர் தப்பாக எடை போட்டார்.இந்திரா காந்தி ,காங்கிரஸ் கட்சியில் ஒரு தனி அணியை நடத்த ஆரம்பித்தார்.
அறுபத்தி ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் பழைய காங்கிரஸில்[காங்கிரஸ்- -ஓ] நீடித்தார்கள்.மற்ற அனைவரும் இந்திராவின் அணிக்கு வந்து விட்டார்கள்[காங்கிரஸ்--ஆர்]
1971 தேர்தலில் இந்திராவின் காங்கிரஸ்--ஆர் மிகப்பெரிய வெற்றி பெற்றது.இந்திரா இந்தியாவின் தன்னிகரில்லா மக்கள் தலைவராக பிரதமர் பதவியில் அமர்ந்தார்.1971 ஆம் ஆண்டு வங்க தேச விடுதலைக்காக நடந்த இந்திய பாகிஸ்தான் போரில் இந்திரா காந்தியின் சீரிய தலைமையில் இந்தியா உலகே போற்றும்படி பெரும் வெற்றி பெற்றது.எதிர் கட்சித் தலைவர்களே இந்திராவை தீமையை அழிக்க வந்த துர்க்கை என்று வர்ணித்தார்கள்.
1975 ஆம் ஆண்டு ராஜ் நாராயணன் தொடர்ந்த வழக்கில் அலகாபாத் நீதி மன்றம் இந்திராவின் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது.தேர்தலில் தில்லு முல்லுகள் நடந்துள்ளன என்றது. அப்போது இந்திரா காந்திக்கும் ,இந்தியாவுக்கும் சோதனை ஆரம்பித்தது.நான்கு வருடங்கள் நடந்த வழக்கின் முடிவில் அலகாபாத் உயர் நீதி மன்ற நீதிபதி நீதியரசர் ஜக் மோகன்லால் சின்ஹா அளித்த தீர்ப்பின் படி இந்திரா தனது எம்பி பதவியை இழந்தார்.மேலும் அந்தத் தீர்ப்பின் படி ஆறு வருடங்களுக்கு அவர் எந்த அரசு பதவிலும் இருக்க முடியாது.இந்திரா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்றார்;உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.உச்ச நீதிமன்றம் அலகாபாத் நீதி மன்றத்தின் தீர்ப்பை நிலை நிறுத்தியது.எம்பி பதவிக்கான வசதிகளையும், உரிமைகளையும் இந்திரா இழந்தார்.அதே வேளையில் அவர் பிரதமராகத் தொடர அனுமதிக்கப்பட்டார்.நாடு முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தின. தில்லியில் எதிர் கட்சித் தலைவர்கள் பிரதமரின் வீட்டுக்கு அருகே தெருவில் வந்து போராட ஆரம்பித்தார்கள்.
தூங்கி எழுந்த புலியாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த ஜெய பிரகாஷ் நாராயணனும் போராடிக் கொண்டிருந்தார்.அப்போது இந்திரா தன் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள கையில் எடுத்த ஆயுதம் இந்திய அரசியல் சாசனம்.அதை தன் இஷ்டத்திற்கு வளைப்பது என முடிவு செய்து விட்டார். ஜனநாயகத்தைக் காக்கப் போராடிய எதிர் கட்சித்தலைவர்கள் சிறையில் தள்ளப்பட்டார்கள். நாட்டுக்காக சுக போக வாழ்வை தியாகம் செய்த பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் தோன்றிய நேருவின் லட்சிய மகள் இந்திரா.மக்களின் செல்வாக்கைப் பெற்ற அவருக்கு இந்தியாவை ஆள உரிமை இருக்கிறது. மக்கள் ஆட்சி அதிகாரத்தை அவரை நம்பிக் கொடுத்தார்கள்.ஆனால் இப்போது ஒரு சர்வாதிகாரியாக அவர் மாறி விட்டார்.
இந்திரா காந்தி இந்தியாவில் அவசர நிலையைக் கொண்டு வர முடிவு செய்தார். ஜனாதிபதி பக்ருதின் அலி அகமத் உள் நாட்டுக் குழப்பம் காரணமாக அரசியல் சாசன கோட்பாடு 352[1] இன் படி 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி முதல் இந்தியாவில் அவசர நிலை அமுலுக்கு வந்ததை அதிகார பூர்வமாக அறிவித்தார்.அது 1977 மார்ச் 21 ஆம் தேதி வரை 21 மாதங்கள் தொடர்ந்தது.
இந்திரா காந்தி உச்ச நீதிமன்றம் தன்னை பதவி நீக்கம் செய்யப் போவதை நிறுத்த, அரசியல் சாசனத்தில் 1975 ஆம் ஆண்டு 39 வது திருத்தம் கொண்டு வந்தார்.அந்த சட்ட திருத்தத்தின் படி நீதி மன்றங்களின் தலையீட்டிற்கு ஜனாதிபதி,துணை ஜனாதிபதி, பிரதமர்,நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோரின் தேர்வுகள் அப்பாற்பட்டவைகளாயின.அதைத் தொடர்ந்து பல சட்ட திருத்தங்களைக் கொண்டு வந்து அரசியல் சாசனத்தின் பெரும்பாலான முக்கிய உட்பிரிவுகளை இந்திராகாந்தி மாற்றி அமைத்தார்.
அவசர நிலையின் போது இந்திரா அரசு 1977 ஆம் ஆண்டு இந்திய அரசியல் சாசனத்தில் யாரும் மறந்து விட முடியாத 42 வது திருத்தத்தைக் கொண்டு வந்தது.அதற்கு அரசமைப்பு சட்டம் 1976 என்று பெயர். 1977 ஜனவரி மாதத்திற்கும் ஏப்ரல் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அது முழுமையாக அமுலுக்கு வந்தது.அது வரை இந்திய வரலாற்றில் அத்தகைய மிகப்பெரிய திருத்தம் கொண்டு வரப்படவில்லை.அதில் மொத்தம் 41 கோட்பாடுகள்[கிக்ஷீtவீநீறீமீs] திருத்தப்பட்டன.11 கோட்பாடுகள் சேர்க்கப்பட்டன. 4கி,14கி ஆகிய இரண்டு பாகங்கள் இணைக்கபட்டன.மேலும் 7வது அட்டவணை [ஷிநீலீமீபீuறீமீ]திருத்தம் செய்யப்பட்டது.42 வது திருத்தம் பொதுவாக குடிமக்களின் அடிப்படை உரிமைகளைக் குறைத்து, அடிப்படை கடமைகளை அரசியல் சாசனத்தில் புகுத்தியது.அது இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பையே மாற்றி விட்டது.
1975 இல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட போது அதைக் கடுமையாக எதிர்த்தார் ஜெய பிரகாஷ் நாராயணன்.அதனால் அவர் ஒத்தக் கருத்துள்ள பல கட்சிகளை இணைத்து 1977 இல் ஜனதா கட்சியை நிறுவினார்.1977 ஆண்டு மார்ச் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியடைந்தது. ஜனதா கட்சி 271 நாடளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது.அக்காலிதள், ஜனநாயகக் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தது.மொரார்ஜி தேசாய் இந்தியாவின் பிரதமரானார்.
ஆட்சிக்கு வந்ததும் ஜனதா கட்சி அரசு செய்ய வேண்டி முதல் வேலை இந்திரா அரசு வெட்டி எறிந்த ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பது தான்.அதற்காக 1978 ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி அரசியல் சாசனத்தில் 43 வது திருத்தம் கொண்டு வரப்பட்டது.அதன் படி நான்கு கோட்பாடுகள் திருத்தம் செய்யப்பட்டன.ஆறு கோட்பாடுகள் நீக்கப்பட்டன.இந்த 43 வது திருத்தம் மூலமாக இந்தியாவில் அவசர நிலை திரும்பப் பெறப்பட்டது.மேலும்இந்திரா அரசு கொண்டு வந்த 42 வது திருத்தத்தால் அமுல் படுத்தப்பட்ட மக்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் சில சட்டங்கள் நீக்கப்பட்டன.
அதன் பிறகும் வேலை மீதம் இருந்தது.அதனை முடிப்பதற்காக 44 வது திருத்தம் 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி கொண்டு வரப்பட்டது.அது இந்திரா அரசு உடைத்துப் போட்ட ஜனநாயகக் கட்டடத்தின் பல சுவர்களை செப்பனிட்டு மீண்டும் எழுப்பியது.அதன் மூலம் மொத்தம் 35 கோட்பாடுகள் திருத்தி எழுதப்பட்டன.இரண்டு கோட்பாடுகள் புதிதாக சேர்க்கப்பட்டன.மூன்று கோட்பாடுகள் நீக்கப்பட்டன.அரசியல் சாசனத்தின் 12 ஆம் பாகம் திருத்தப்பட்டது.ஒன்பதாவது அட்டவணையும் திருத்தம் செய்யப்பட்டது.இந்தத் திருத்தம் தனி மனித உரிமைகளை பாதுகாக்க உதவியது.ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள்,அரசு அதிகாரிகள் ஆகியோர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதை தடுத்தது.
இவ்வளவு மாற்றங்களை அரசியல் சாசனத்தில் செய்தும் இந்திராவால் கொண்டு வரப்பட்ட புகழ் மிக்க 42 வது திருத்தத்தால் ஏற்பட்ட சேதத்தை முழுமையாக ஜனதா அரசால் சரி செய்ய முடியவில்லை.பாதிப்பு அவ்வளவு ஆழமானது.42 வது திருத்தத்தினால் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தங்கள், புகுத்தப்பட்ட புதிய சட்டங்கள் அனைத்துமே மோசமானவை அல்ல.
மாற்றமே உலகை நகர்த்திச் செல்கிறது.அதனை ஏற்றுக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழி இல்லை.அதற்கு மிகச்சிறந்த சான்று இந்திரா அரசு கொண்டு வந்த 42 வது திருத்தத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட மிக்ஷிகி என்ற பகுதி.அதில் உள்ள 51கி கோட்பாட்டில் இந்தியக் குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் என்று பல குறிப்பிடப்பட்டுள்ளன.அதில் ஒன்று சுற்றுப்புற சுழல், வனபாதுகாப்பு ஆகியவை தொடர்பானது.அதில் காடுகள், ஏரிகள், நதிகள், வனவிலங்குகள், பறவைகள்ஆகியவற்றை பாதுகாத்து அவற்றை மேம்படச் செய்ய வேண்டியதும்,உயிரினங்கள் அனைத்தின் மீதும் அன்பும், பரிவும் கொள்ள வேண்டியதும் இந்தியக் குடிமக்கள் அனைவரின் அடிப்படைக் கடமைகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் அதில் விஞ்ஞான விழிப்புணர்வு,மனித நேயம்,தகவல்களை அறிவதிலும், சீர்திருத்தத்திலும் ஆவல் கொள்ளுதல்;பொது சொத்துக்களை பாதுகாத்து, வன்முறையைப் புறந்தள்ளுதல், ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன. அனைத்து துறைகளிலும் தனி மனித செயல்பாடு, கூட்டு நடவடிக்கை ஆகியவற்றில் மிக உயர்ந்த நிலையை நோக்கி நடைபோட வேண்டும்;அதன் மூலமாக நாடு மிக உயர்ந்த லட்சியங்களையும், சாதனைகளையும் நோக்கி தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்கும்.இவை பொன்ற உன்னதமான விஷயங்கள் அதில் இந்தியக்குடிமக்களின் அடிப்படைக் கடமைகளாக சேர்க்கப்பட்டன. எனவே இந்திரா காந்தி அரசு அமுல்படுத்திய 42 வது திருத்தத்தின் மூலமாக காலத்தின் போக்கை உணர்த்தும், தீர்க்க தரிசனம் மிக்க, மிக முக்கியமான சட்டங்களும் கொண்டு வரப்பட்டன என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
ஜனதா கட்சித் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள்; மோதல்கள் காரணமாக இரண்டு ஆண்டுகளில் ஜனதா ஆட்சி கவிழ்ந்தது.1980 ஆண்டு ஜனவரி மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வேற்றி பெற்றது. தனக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை நிரூபித்து இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். அரசியலமைப்பை மாற்றிக் கொண்டிருப்பதை விட அரசியல்வாதிகள் மக்கள் நலனில் அக்கறை வைத்து தங்களை மாற்றிக் கொள்வது மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்தார் இந்திரா காந்தி.அதனால், துரதிர்ஷ்டவசமாக அவர் கொலை செய்யப்படும் வரை, சிறந்த பிரதமராகவும் மக்கள் தலைவராகவும் பணியாற்றி உயர்ந்தார்.
செய்தித்தாளைப் படித்து காப்பியும் குடித்தாகிவிட்டது.ஆனாலும் மத்திய தகவல் தொடர்பு ,ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட குடியரசு தின விளம்பரத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி நீங்கவில்லை.ஊடகங்களில் சமூக ஆர்வலர்களும், காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் அரசியலமைப்பு முகப்புரை அரசு விளம்பரத்தில் வெளியிடப்பட்டிருக்கும் விதத்தை கடுமையாக கண்டித்து எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள். உடனே மத்திய தகவல் தொடர்பு,ஒளிபரப்பு அமைச்சகம் நடந்ததற்கு வருத்தம் தெரிவித்திருந்தால் பரவாயில்லை.ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் திரு.ரவி சங்கர் பிரசாத் அரசியலைப்பு முகப்புரையில் சோஷலிசம்,மதசார்பின்மை ஆகிய இரண்டு வார்த்தைகளும் இடம் பெற வேண்டுமா என்பதை விவாதிப்பதில் தவறில்லை என்றார்.மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்
“அந்த விளம்பரத்தில் தவறு ஏதுமில்லை;1950 ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்திய அரசியல் சாசனம் எந்த நிலையில் வெளியிடப்பட்டு அமுலுக்கு வந்ததோ அதைக் கொண்டாடும் விதமாகவும், அரசியலமைப்பை உருவாக்கிய முன்னோடிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் அரசையலைப்பின் முகப்புரையை அதன் பழைய நிலையில் வெளியிட்டிருக்கிறோம்”
என்கிறார்.அவரால் இப்படிக்கூட பேசி பிரச்சனையை சமாளிக்க முடிகிறது.
முன்று நாள் சுற்றுப்பயணத்திற்காக இந்திய வந்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தன் பங்கிற்கு தில்லியில் 2000 பேர் கூடி இருந்த கூட்டத்தில் இவ்வாறு கூறிவிட்டுப் போய் இருக்கிறார்.
“இந்தியா மதத்தின் அடிப்படையில் பிளவு படாத வரைதான் அது வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும்.இந்திய அரசியலமைப்பின் 25 வது கோட்பாடு தாங்கள் விரும்பும் மதத்தைக் கடைபிடித்து அதை பரப்ப மக்கள் அனைவருக்கும் சம உரிமை வழங்கியுள்ளது.”
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இனி முகப்புரை, 42 திருத்தத்திற்கு பிறகு இருக்கும் நிலையிலேயே அரசு விளம்பரங்களில் வெளியிடப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்.இருந்த போதும் மத்திய அரசின் மீது மக்கள் பலருக்கும் இருக்கும் சந்தேகம் முழுமையாக நீங்கவில்லை.
பலருடைய உழைப்பில் பல தடைகளைத் தாண்டி உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சாசனம் என்ற பரிசுப்பெட்டி 1950 ஆம் ஆண்டு இந்தியா குடியரசான போது அதன் குடி மக்களுக்கு வழங்கப்பட்டது.அதன் மேல் சுற்றப்பட்ட அழகிய சரிகைத் தாளாக அதன் முகப்புரை உள்ளது. மேலே ஒட்டப்பட்டிருக்கும் சரிகைத் தாளை கிழிக்காமல் பிரித்து அதன் சிறப்பை உணர்ந்து, பெட்டிக்குள் இருக்கும் அரசியலமைப்பின் பலனை நாடு பெற்று வருகிறது.அதில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை.இப்போது மத்திய அரசு ஓர் உள் நோக்கத்தோடு மக்களின் கனவுகள் நெளியும் முகப்புரை என்ற சரிகைத் தாளை கொஞ்சம் பிறாண்டிப் பார்த்திருக்கிறது.
1946 ஆம் ஆண்டு அரசியலைப்பு முழுமையாக உருவாக்கப்படுவதற்கு முன்பே முகப்புரையில் சோஷலிசம், மத சார்பின்மை, ஆகிய சொற்கள் சேர்க்கபட வேண்டும் என்று கே.டி. ஷா ஒரு கோரிக்கை வைத்தார்.அரசியல் நிர்ணய சபை விவாதத்தின் போது அவர் அதை எழுப்பினார்.அதற்கு பதிலளித்தார் டாக்டர் அம்பேத்கர்.
“அரசியல் சாசனம் என்பது நாட்டின் இயக்திற்கான வெவ்வேறு அமைப்புகளின் பணிகளை ஒழுங்கு படுத்தும் ஒரு வழிமுறை.ஒரு நாட்டின் கொள்கைகள்;சமூகம் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களால் சமுதாயம் எப்படி கட்டமைக்கப்பட வேண்டும் போன்றவற்றை எல்லாம் காலத்திற்கும், சூழ்நிலைக்கும் தகுந்தவாறு மக்களே தீர்மானிக்க வேண்டும்.இதை அரசியலைப்பு செய்யமுடியாது.அவ்வாறு செய்தால் ஜனநாயகத்தை முற்றிலுமாக அழித்தது போல் ஆகிவிடும்.இன்றைய சூழ் நிலையில் பெரும்பான்மை மக்கள் முதலாளித்துவத்தை விட சோஷலிசமே சிறந்தது என்று அதை ஏற்க நல்ல வாய்ப்பு உள்ளது.இன்றிருக்கும் சோஷலிச அமைப்பை விடவும்; எதிர் காலத்தில் அமையும் சோஷலிச அமைப்பை விடவும் சிறந்த புதிய சித்தாந்த சமுதாய அமைப்பு மக்கள் சிந்தனையில் உதிக்கவும் நிறைய வாய்ப்பு உள்ளது.சோஷலிசக் கொள்கைகளைப் பொறுத்த அளவில் அவற்றிற்கு நமது அரசியல் சாசனத்தில் ஏற்கனவே அடிப்படை உரிமைகள்,நாட்டின் கொள்கைகள் அகியவற்றின் மூலம் உருவம் கொடுக்கப்பட்டுள்ளது..."
மரக்கன்றுகளை நடும் போது அவை பெரிய மரங்களாக வளர போதிய இடைவெளி விடுவார்கள்.அது போல மக்களின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு எதிர்கால மாற்றங்களுக்கு போதிய இடம் கொடுத்து இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.உலகின் சிறந்த பல நாட்டு அரசியலமைப்புகளில் இருந்து நல்ல அம்சங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.பல விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்ட அந்தத் தொகுப்பு இந்திய அரசியல் சாசனமாக செதுக்கப்பட்டது.மக்களை மதித்து அவர்களுக்காக வாழ் நாள் முழுவதும் சிந்தித்து உழைத்த அக்காலத்து தலைவர்கள் எங்கே;தாங்கள் விரும்பியதை எல்லாம் எடுக்க அரசியல் சாசனம் ஒரு புது வகை ‘பண்டோராவின் பெட்டி’ என நினைக்கும் அரசியல்வாதிகள் எங்கே.
நன்றி : ஆழம் ஏப்ரல் 2015
விதி முகம்
விதியைப் பற்றி பேசாத மக்கள் உலகில் எங்கும் இல்லை என்று சொல்லலாம். நீண்ட உலக வரலாற்றின் எந்தக் கால கட்டத்திற்குச் சென்றாலும் அங்கு விதிக்கு மனிதர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் தெரியும். தன் வாழ் நாளில் எப்போதும் மனிதனுக்கு அதைப் பற்றிய கவலை இருக்கும். நல்லவை கெட்டவை இரண்டையும் விதி கொடுக்கிறது என்பது மக்களின் எண்ணம். அதனால் தான் அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் இரண்டையும் விதி என்ற சொல்லுக்குள் நம்மால் அடக்கி விட முடிகிறது.
விதி என்பது ஒரு வித்தியாசமான வங்கி கணக்கு. வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்க ஒரு சீட்டில் எழுதி கையொப்பமிட்டுக் கொடுத்தால் நமக்குப் பணம் கொடுக்கிறார்கள். அல்லது எப்போதும் பணம் எடுக்கப்பயன்படும் அட்டையைப் பயன்படுத்தி நாம் நேரடியாகவும் நம் கணக்கிலிருந்து பணம் பெறுகிறோம். நம் விதி வங்கியின் மூலமாக நம் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். இந்த வங்கியில் இருக்கும் பிரச்சனை இதுதான். நாம் சீட்டு கொடுக்கும் போது நம் கணக்கில் இருந்து பணம் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். சில வேளை பணம் எடுக்கப்பயன்படும் சீட்டை கொடுக்கும் போது மிகக் குறைந்த நேரத்தில் பணம் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் தொடர்ந்து சில காலம் சீட்டு கொடுக்கும் போது பணம் கிடைத்துக் கொண்டே இருக்கும். உடனே சம்பந்தப்பட்ட நபர் தன் பக்கம் எப்போதும் அதிர்ஷ்டக் காற்று தான் வீசும் என்று நினைத்து விட முடியாது. ஒரு நாள் அவசரத் தேவையின் போது பணம் கிடைக்காமல் போகலாம். ஒரு நாள் நாம் சற்றும் எதிர்பாராத விதமாக நாம் எழுதிக் கொடுத்தத் தொகைவிட பல மடங்கு அதிகமான பணம் கிடைக்கும். ஆனால் இவை எல்லாமே அவர் அவர் கணக்கில் இருந்து தான் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன என்று இந்து மதம் கூறுகிறது.
எல்லாம் மாறி மாறி வரும் என்று சொல்வது ஒரு பொதுவான மேலோட்டமான கருத்து. மாற்றம் இயல்பான ஒன்று என்று நம்பி சிறிய விளையாட்டு போலத்தான் இருக்கிறது வாழ்க்கை என்று சென்று கொண்டிருக்கும் மனிதனை நிலைகுலையச் செய்கிறது ஒரு நிகழ்வு. இப்போது மனிதன் விதியைப் பற்றி நினைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான். இது வாழ்க்கையில் எல்லோரும் என்றாவது ஒரு நாள் சந்திக்கும் ஒன்று தான். அதனால் விதியைப் பற்றி நினைக்காத மனிதனை உலகில் பார்ப்பது மிக மிக அரிது.
விஞ்ஞானம் விதியை நம்புவதில்லை. சில இயற்கை நிகழ்வுகளின் தன்மைகளை ஆராய்ந்து உணர்ந்து கொள்வது விஞ்ஞானத்தின் அடிப்படை. ஒன்றை விதைத்தால் ஒன்று நிகழும் என்று ஆதாரத்துடன் சொல்வது அறிவியல். நிகழ்வில் மாற்றம் இருந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சொல்வதும் அதுதான். சில நிகழ்வுகள் ஏற்பட அதற்கான கால அளவு முடியும் வரை அறிவியல் காத்திருக்கும். அத்தகைய நிகழ்வுகள் தாமே நிகழ்வதை அது ஒப்புக்கொள்கிறது. இதன் காரணமாக அறிவியலும் விதி பற்றிய சிந்தனைக்கு இடம் கொடுக்கிறது என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால் நாம் பேசுகின்ற விதிக்கு அறிவியலில் இடம் கிடையாது.
ஒவ்வொரு மனிதனும் தனக்கான ஒரு நல்ல எதிர்கால வாழ்வை அமைத்துக் கொள்ள நினைக்கிறான். அதில் தன்னைச் சார்ந்தவர்களின் நல்வாழ்வையும் அவன் இணைத்துக் கொள்வது இயல்பு. தன் விருப்பத்தை உணர்ந்து கொண்ட மனிதன் அதற்கு ஏற்றவாறு தன் வாழ்க்கை அமைய வேண்டும் என்று எண்ணுகிறான். அதற்கு முடிந்த மட்டும் அவன் தன் அறிவைப் பயன்படுத்தத் தவறுவதில்லை. மேலும் தன் மேல் அக்கறை உள்ளவர்களின் அனுபவ அறிவைவையும் அவன் கேட்டுப் பெற முயல்கிறான். ஆனாலும் மனிதனுக்கு எதிர்காலம் என்பது கொஞ்சம் புதிராகவே உள்ளது. அதனால் ஜோதிடம், கைரேகை சாஸ்திரம் இன்னும் எத்தனையோ வழிகளை நாடுகிறான். தன் எதிர் காலத்தை எப்படி நன்றாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிந்து கொள்ளும் ஆவல் அதோடு முடிவதில்லை. அதாவது ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து அதில் செல்லும் போதும், தான் செல்லும் வழி சரியானது தானா என்ற சந்தேகம் வருகிறது. இதை விட சிறப்பான வாழ்வை தான் அமைத்துக் கொண்டிருக்க வாய்ப்பிருந்தும் அதைத் தான் நழுவ விட்டதைப் போன்ற உணர்வு தோன்றுகிறது. உடனே எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லும் ஒருவரை அதே மனிதன் மீண்டும் நாடுகிறான். இன்று இந்தியாவில் பெரும்பான்மையான மக்களின் நிலை இது தான். எதிர்காலம் பற்றி எண்ணும் போதே அங்கு விதி பற்றிய சிந்தனை வந்து விடுகிறது. வாழ்வில் ஒரு பின்னடைவு ஏற்பட்டவுடன் அதற்குக் காரணம் விதி என்கிறது மனித உள்ளம். ஏனென்றால் அறிவையும், முழுத்திறனையும், உழைப்பையும் கொட்டி மனிதனால் அவன் வாழ்வின் கனவுக் கோட்டை உருவாக்கப்பட்டது. அது ஒரு நொடியில் உடைந்து போகிறது. இந்த விதியை மாற்ற முடியாதா அல்லது குறைந்த பட்சம் மட்டுப்படுத்த முடியாதா என்ற எண்ணம் மேலிடுகிறது. அதனால் ஒரு வழிகாட்டியை நாடி மனிதன் ஓடுகிறான்.
தனக்கான வழியைத் தேர்ந்தெடுத்து அதில் நடை போடுகிறான் மனிதன். கொஞ்ச காலம் கழித்து திரும்பிப் பார்க்கிறான். தானாகவே ஒரு லாப நஷ்ட கணக்கு போட்டுப் பார்க்கிறான். இந்த வழியில் கிடைத்தது தற்போதைய வாழ்வு. இது வரை அவனுடைய உழைப்பு, முன்னேற்றத்திற்காக அவன் செய்த சிறு தியாகங்கள் இவற்றை அவன் மனம் அசை போடுகிறது. தான் தெரிவு செய்த வழி சரியானது தானா என்ற சந்தேகம் எழுகிறது.
“அவன் அப்போதே சொன்னான் கல்லூரியில் இந்தத் துறையை தெரிவு செய்யாதே என்று. கூடிய விரைவில் அத்துறையின் வளர்ச்சி குறையப் போகிறது என்று அவன் சரியாக எச்சரித்தான். ஆனால் நான் அத்துறையை விரும்பி, பயின்று பட்டம் பெற்றேன். இன்று நல்ல வேலை வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கிறேன்”
இவ்வாறு புலம்பும் நிறைய பேரை நாம் பார்த்திருக்கிறோம். வெளியே சொல்லாதவர்கள் மனதிற்குள் புலம்பிக் கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள். இதற்கு ஒரு வலுவான காரணம் தேவையில்லை. தான் தேர்ந்தெடுத்த வழியில் அமைந்த வாழ்வில், தன் அன்றாட அலுவல்களில், நிறைவையும் மகிழ்ச்சியையும் காண்பவர்கள் ஏராளம். அவர்களும் ஒருநாள் தங்களுக்குள்ளே ஒரு கேள்வியை எழுப்பிக் கொள்கிறார்கள். தான் வேறு ஒரு தொழிலை முன்பே தெரிவு செய்திருந்தால், இப்போது இருப்பதை விட பன்மடங்கு சிறந்த முன்னேற்றத்தை வாழ்வில் பெற்றிருக்கலாமோ என்ற எண்ணம் தான் அது. இத்தகைய எண்ணங்களுக்குத் தீனி போடுபவர்கள் எப்போதும் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் தாம். எனவே மனிதர்கள் தங்களைப் பற்றி புலம்புவதோடு மற்றவர்களையும் அந்த வலைக்குள் இழுப்பார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால் அவர்களில் பலர் பாதிக்கப்படுபவர்களின் நலம் விரும்பிகளாக இருப்பது தான். சூழல்களை, நிகழ்வுகளை, மனிதர்கள் எடுக்கும் முடிவுகளை பல வகையில் மாற்றிப் போட்டு அதில் சில விளைவுகள் தோன்றி இருக்கும் என்று தாங்களாகவே கற்பனை செய்து கொள்வது மனிதர்களின் இயல்பு. இதில் முக்கிய விவாதப் பொருளாக இருப்பது ஒருவருடைய விதி.
அந்த மூன்று நட்சத்திர ஓட்டலில் ஒரு பெரும் அறையில் சிறப்பான விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நண்பர்கள் பலர் கூடி விருந்து சாப்பிடுகிறார்கள் என்று சாதாரணமாக அதைச் சொல்லி விட முடியாது. அது ஒரு ஆச்சரியமான உணர்வு பூர்வமான விருந்து. பள்ளியில் ஒரு காலத்தில் ஒன்றாகப் பயின்று பல திசைகளில் சென்று விட்ட தோழர்கள் இன்று ஒன்றாகக் கூடி இருக்கிறார்கள். ஒரு சிலரைத் தவிர அனைவரும் அங்கு வந்திருந்தார்கள். அந்த ஓட்டல் இருந்த நகரத்தில் அவர்கள் பயின்ற பள்ளியும் இருந்தது. பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அனைவரும் பள்ளிக்குள் சென்று தாங்கள் அமர்ந்து பயின்ற வகுப்பறையை மீண்டும் பார்த்தார்கள். அன்று பள்ளி விடுமுறை ஆதலால் காவலாளியைத் தவிர அங்கு யாருமில்லை. நண்பர்கள் பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தார்கள். அவற்றில் நகைச்சுவை மிக்க நிகழ்வுகள் ஏராளம். சிலர் தாங்கள் அமர்ந்திருந்த இருக்கையில் மீண்டும் அமர்ந்து பார்த்தார்கள். வகுப்பறை மட்டுமல்ல பள்ளிக்குள் நின்று கொண்டிருக்கும் மரங்கள் கூட பழைய இனிமையான நாள்களை மனக் கண்முன் கொண்டு வருகின்றன. நினைவுகள் அலை மோதுகின்றன. சிலர் அவற்றை பேசித் தீர்க்க முயன்று தோற்கிறார்கள். சிலர் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கி நிற்கிறார்கள். ஒரு நிமிடம் காலம் பின்னோக்கிச் செல்வது போலிருந்தது. சிறார்கள் ஓடி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆசிரியை ஒருவர் அந்த வகுப்பறைக்குள் வருகிறார். மேசையைத் தட்டி “அமைதி” என்கிறார். வகுப்பு தொடங்க இருக்கிறது. இப்போது எல்லாம் மறைந்து விடுகின்றன.
“என் முன்னே நிற்கும் இவனை எத்தனை முறை அறைந்திருப்பேன் என்று நினைவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் அவனிடம் சென்று மன்னிப்பும் கேட்டிருக்கிறேன். ஆனால் இன்று அவனை ஒருமையில் “வாடா” என்று அழைக்கத் தயங்குகிறேன். காலம் எல்லாவற்றையும் எப்படி மாற்றிப் போட்டிருக்கிறது. நம் பிரபாவைப் பாருங்கள். முழுக்க முழுக்க ஓர் அமெரிக்கனாகவே மாறி விட்டான். அவன் குழந்தைகள் தமிழ் பேசக் கஷ்டப்படுகிறார்கள். நாமெல்லாம் ஏன் பிரிந்தோம். நாம் அனைவரும் ஒரே இடத்தில் பணியாற்றி ஒன்றாக வாழ்ந்திருக்க முடியாதா? நம் அனைவரையும் வெவ்வேறு திசைகளுக்கு இழுத்து சென்றது எது?”
அந்த முப்பது இளைஞர்களில் இப்படி எண்ணிப் பார்க்காத ஒருவன் இல்லை என்று சொல்லலாம்.
விருந்தை ஏற்பாடு செய்தவன் பிரபா. அவனுடைய மிக நெருக்கமான நண்பர்கள் லோகேஷும், பிரசன்னாவும் அவனுக்கு உதவினார்கள். விருந்து நடைபெற்ற ஓட்டல் பிரபாவின் மாமா மதிவாணனுக்கு சொந்தமானது. வாழ்வில் மிக ஏழ்மை நிலையிலிருந்து கடுமையான தன் உழைப்பால் இன்று இந்த நிலைக்கு அவர் உயர்ந்துள்ளார். சென்ற வாரம் தான் ஓட்டலின் மற்ற இரு பெரும் பங்குதாரர்களிடமிருந்து முழுமையாக ஓட்டலின் பங்குகளைப் பெற்று தனிப்பெரும் முதலாளி ஆனார். விருந்து முடிந்த பின் நண்பர்கள் அனைவரும் விடைபெற்றார்கள். மதிவாணனின் தனி அறையில் நண்பர்கள் மூவரும் அமர்ந்திருந்தார்கள். ஒரு முக்கியமான கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு மதிவாணன் அறைக்குள் நுழைந்தார். அவர்கள் மூவரும் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்கும் நிலையைப் பார்த்தவுடன் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
“டேய் பயல்களா என்ன இது. நீங்கள் மூவரும் உயிர் நண்பர்கள். ஆனால் ஆண்டில் ஒருமுறை கூட நீங்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதில்லை என்று என் மனைவி சொல்லித்தான் எனக்குத் தெரியும். பிரபா அமெரிக்காவில் சாஃப்ட்வேர் என்ஜினியர். லோகேஷ் கோவையில் தன் பெற்றோர் மருத்துவமனையில் வாரிசு டாக்டராகி விட்டான். பிரசன்னா நீ என்ஜினியரிங் படித்துவிட்டு உன் அப்பா பண்ணையில் மாடு மேய்க்கிறாயா?”
“படித்தவர்கள் பெரிய அளவில் விவசாயமும், பண்ணைத் தொழிலும் பார்க்கக் கூடாதா? அடுத்தவர்களிடம் கைகட்டி நின்று என்னால் சம்பளம் வாங்க முடியாது.”
“சரி அதை விடு. நீங்கள் மூவரும் எப்படிப்பட்ட நண்பர்கள் என்பதை நான் அறிவேன். மனிதன் ஒருவனுக்கு ஓர் உண்மையான நண்பன் கிடைப்பது அபூர்வம். உங்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு உயிர் நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளக் கூட முடியாத வாழ்க்கையை தெரிவு செய்து கொண்டிருக்கிறீர்கள்.”
அவர்கள் மூவருக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. மதிவாணன் அடுத்த நாள் தன் வீட்டில் நடக்கும் மாலை விருந்துக்கு அவர்கள் மூவரையும் அழைத்திருந்தார். அப்போது அவர்கள் மூவருக்கும் தன் வீட்டில் இருக்கும் சுவாரசியம் மிகுந்த ஒன்றை காட்டுவதாகக் கூறி இருந்தார். மறு நாள் இரவு மதிவாணன் விருந்துக்குப் பின் தன் பிரத்தியேக தனி அறைக்கு அவர்கள் மூவரையையும் அழைத்துச் சென்றார். தன் மனைவி, மகன்ஆகியோர் கூட தன் அனுமதி இல்லாமல் அந்த அறைக்குள் நுழைவதில்லை என்று சொன்னார்.
“விர்ச்சுவல் ரியாலிட்டி சிமுலேஷன் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதில் நிஜ உலகில் இருப்பதை போன்ற நாம் விரும்பிய சூழல் ஒன்று நம் கண் முன்னே விரியும். நாம் இருப்பது இந்த அறைக்குள் தான் இருந்தாலும் அமேசான் காட்டுக்குள் பிரவேசிக்கலாம். நியூயார்க் நகர சாலையில் நடந்து செல்லலாம். இன்னும் நினைத்த சூழலை ஏற்படுத்திக் கொள்ளலாம். அங்கு நீங்கள் காரோட்டலாம், விமானியாக மாறி மலைகளிண் மேல் விமானத்தில் பறக்கலாம். எல்லாம் கம்யூட்டர் புரோகிராம்களால் உருவாக்கப்படுபவை. மேலும் அமர்ந்திருக்கும் இருக்கையின் அதிர்வுகள், அசைவுகள், ஓசைகள் இவற்றின் மூலமாக நாம் பார்க்கும் சூழலில் நாம் ஐக்கியம் ஆகிவிடுகிறோம். நான் வைத்திருக்கும் கருவி சற்று வித்தியாசமானது. இதில் உள்ள கம்பூட்டர் புரோகிராம்கள் மிகவும் சிறப்பானவை. இதில் நீங்கள் இருக்கும் சூழல் மட்டுமல்ல நீங்களும் வேண்டிய உருவம் பெற்று மாறிக் கொண்டிருப்பீர்கள். விளையாடிப் பாருங்கள் இதன் சிறப்பு உங்களுக்குப் புரியும். நான் சென்ற முறை அமெரிக்கா போன போது ஒரு நண்பர் தான் இதை வாங்கும் படி கூறினார். அங்கு வசிக்கும் பிரபா கூட இதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தக் கருவி இன்னும் முழு வீச்சில் சந்தைக்கு வரவில்லை.”
லோக்கேஷ் இருக்கையில் அமர்ந்தான். அவன் கண்களில் பிரத்தியேக கண்ணாடியை மாட்டிக் கொண்டான். அவன் கண்டது ஒரு தீவு. அந்தத் தீவில் இருக்கும் விலங்குகள் எல்லாம் அவனை தங்கள் எஜமானரைப் போல் பார்க்கின்றன. அவைகளுக்குத் தேவையான உணவை எடுத்து வழி எங்கும் வீசிக்கொண்டே செல்கிறான். கொடிய மிருகங்கள் கூட அவனுடைய செல்லப் பிராணிகளாக அவன் அருகில் வந்து நிற்கின்றன. அவற்றின் உடலை அவன் அன்பாகத் தடவிக் கொடுக்கிறான். தீவைச் சுற்றி வருகிறான். ஒரு ஜீப் இருக்கிறது. அதையும் அவன் பயன்படுத்துகிறான். தீவைச் சுற்றி வந்து ஓய்ந்து போகிறான். கண்முன்னே நீலக்கடல் மெல்லிய அலைகளை வீசிய படி விரிந்து கிடக்கிறது. நீந்த எண்ணி கடலுக்குள் பாய்கிறான். அவன் விரும்புவது ஒரு சாதாரணக் குளியல் அல்ல. அவன் கடலை முடிந்த மட்டும் சுற்றி வர வேண்டும். ஆழத்திற்கு செல்ல வேண்டும். சுறா மீன்களுக்கிடையே நீந்தி சென்று வெளியே வர வேண்டும். திமிங்கலத்தின் அருகே சென்று ஒரு பசுவைத் தட்டிக் கொடுப்பதைப் போல் அதைத் தட்டிக் கொடுக்க வேண்டும். அவன் மனிதனாக மட்டும் இருக்கும் வரை இவை எல்லாம் சாத்திமாவது மிகவும் கடினம். அதனால் அவன் உடலெங்கும் செதில்கள் முளைக்கின்றன. அவன் கால் விரல்களுக்கிடையேயும் கை விரல்களுக்கிடையேயும் தோலோடு ஜவ்வு வளர்கிறது. அவன் மீன் மனிதனாகி விட்டான். இப்போது அவனால் நீண்ட நேரம் நீருக்கு அடியில் நீந்த முடிகிறது. காலையில் காட்டு விலங்குகளுக்கு உணவு தருவது அவற்றின் சிறு காயங்களுக்கு மருந்து பொடுவது ஆகியவற்றில் தொடங்குகிறது அவன் அன்றாடப்பணி. மாலையில் கடலுக்கு அடியில் சென்று மீன்களுடனும், ஆமைகளுடனும் அவன் பேசுகிறான். அவற்றோடு விளையாடுகிறான். இரவில் உறங்கும் போதும் நரிகள் ஊளை இடும் சத்தத்தில் கண் விழிக்கிறான். அவை என்ன சொல்ல முனைகின்றன என்று கவனிக்கிறான். இந்தத் தீவு அவன் தந்தையின் மருத்துவமனையையே அவனுக்கு நினைவு படுத்துகிறது. இந்தத் தீவில் அவன் சுற்றி வருவது போல, பல மாடிகள் உள்ள அந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவன் என்ற முறையில் லிப்டில் மேலும் கீழும் சென்று பணியாற்றுகிறான். மருத்துவமனையும் ஒரு தீவு தான். அதில் இருக்கும் உயிர்கள் போல நோயாளிகள் அங்கு காணப்படுகிறார்கள். அனைவரும் மருத்துவரின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். அவர் தரும் சிகிச்சையும் அவர் அறிவுரை வார்த்தையும் அவர்களின் முக்கிய தேவைகளாக இருக்கின்றன. சுழன்று சுழன்று பணியாற்றும் மருத்துவர் அந்த மருத்துவமனையின் சொந்தக்காரராக இருந்தாலும் அவர் நீருக்குள் நீந்தி வரும் மீனாக மாறிவிடுகிறார்.---------------
அதற்கு பிறகு அந்த வினோத கருவியின் சிறப்பை அறிந்து கொள்ளும் ஆவலோடு பிரபா இருக்கையில் அமர்ந்தான். பிரபா நுழைந்தது மரங்கள் குறைவாக இருக்கும் ஒரு வறண்ட பூமி. குன்றுகள் நிறைய இருக்கும் மலைப் பிரதேசம். மலையில் ஆவலோடு அவன் ஏறுகிறான். புவி ஈர்ப்பு விசை அவனைக் கீழே தள்ளப் பார்க்கிறது. இன்னும் உற்சாகமாக மேலே ஏற முயல்கிறான். கால்கள் ஒத்துழைக்க மறுக்கின்றன. வெகு சீக்கிரத்திலேயே அவன் கால்கள் மலை ஆட்டின் கால்களாக மாறுகின்றன. மரக்கிளைத் துண்டு போல உறுதியாக இருக்கும் அவற்றின் உதவியோடு பாறைகளுக்கிடையே தாவி ஓடுகிறான் பிரபா. அவன் ஓய்வெடுக்கும் மர நிழலில் மண்ணில் விழுந்து கிடக்கும் கனிகளில் ஒன்றை எடுத்து சுவைக்கிறான்.சோர்வு மறைந்து போகிறது. மீண்டும் மலையில் ஏறுகிறான்.
அவன் அமெரிக்காவில் பணி செய்யும் அலுவலகம் வானுயர்ந்த ஒரு கட்டடத்தில் கண்ணாடிச் சுவர்கள் கொண்ட அறையில் இயங்குகிறது. அங்கிருந்து பார்த்தால் நகரத்தின் அழகிய காட்சி தெரிகிறது. ஆனால் அவன் அலுவல் ஒரு வகையில் வறண்ட பூமி தான். கணினித் திரையில் அவன் உள்ளம் ஒரு மலையாட்டைப் போல் ஒடுகிறது. அவன் தனக்குக் கொடுக்கப்பட்ட வார அலுவல் இலக்கை சீக்கிரம் முடித்து விட்டால் நண்பர்களோடு வார இறுதியை மகிழ்ச்சியோடு கழிக்க இன்னும் ஒரு நாள் கூடுதலாகக் கிடைக்கும். ஒரு சிறு இலக்கை அடைந்தவுடன் அவன் மகிழ்ச்கி அடைகிறான். அலுவலக நண்பர்கள் வாழ்த்து சொல்கிறார்கள். இங்கு மலையில் ஏறும் ஆடு ஒரு பெரும் பாறை மீது போராடி ஏறிவிட்டது. அதன் மேல் பெருமிதத்தோடு சிறிது நேரம் நிற்கிறது. மலையாட்டின் கால்களாக விரல்கள் கீபோர்டில் ஓடுகின்றன. கணினிக்குள் பயணிக்கிறார்கள் அலுவலர்கள். சொர்க்க புரியாக இருக்கும் ஒரு நகரத்தில் ஓர் உயர்ந்த கட்டடம். அதில் நவீன வசதிகள் கொண்ட அறையில் ஒரு குட்டியான வறண்ட பூமியை பணி செய்யும் கணினி உருவாக்குகிறது. பணிச்சுமை தான் அந்த வறண்ட பூமி. அதில் மனித உடலும் மலையாட்டின் கால்களும் கொண்டு, தான் சுற்றி வருவதை உணர்கிறான் பிரபா.
பிரசன்னா விர்ச்சுவல் ரியாலிட்டி சிமுலேஷன் கண்ணாடியை அணிந்ததும் தான் வானத்தில் மிதப்பதை உணர்ந்தான். கைகளை அசைக்க அவை உடனே சிறகுகளாக மாறுகின்றன. வயல் வெளிகளை ஒட்டிய காட்டின் மேல் அவன் பறக்கிறான். அவன் காண்பதெல்லாம் பச்சை மரங்கள். அவன் தொடர்ந்து பறக்கிறான். அவன் அருகே சிறு பறவைகள் பறந்து வந்து ஏதோ சொல்ல முற்படுகின்றன. அதைக் அவன் கேட்க விரும்பவில்லை. அழகிய மலர்களையும் ரசிக்கவில்லை. அவன் எதையோ தேடிப் பறக்கிறான். அவன் விரும்பும் இடம் விளையாட்டு மைதானம் போன்ற வெட்ட வெளி. அதன் மேல் விழும் தன் நிழலை, பறந்து செல்லும் அவன் பார்க்க விரும்புகிறான். வாழ்வில் எந்தக் கஷ்டத்தையும் காணாமல் வளர்ந்தவன் பிரசன்னா. மிகப் பெரிய அளவில் விவசாயம் செய்பவர் அவன் தந்தை. சொந்தமாக பல சர்க்கரை ஆலைகளும் அவருக்கு உள்ளன. இவற்றை நிர்வகிப்பதில் தந்தைக்கு உதவியாக இருக்கிறான் பிரசன்னா. அவன் வேறு ஒருவருக்குக் கீழே பணியாற்றி சம்பளம் பெற்றதில்லை. அவனைப் பொறுத்த அளவில் அது கனவில் தான் நடக்கும். அந்த அனுபவம் ஒரு நிழல் என்றால் பறவையாக பறக்கும் அவன் அதை ‘நிஜமாக’க் காண விரும்புகிறான். அவன் பார்க்கும் இடமெல்லாம் பச்சையாக இருக்கின்றன.
அவன் வீட்டிலும் ஆலையிலும், சொல்லுவதற்கு முன்னரே பணியாட்கள் தேவையான வேலைகளை முடித்து விடுகிறார்கள். அவன் தன்னுடைய உண்மையான திறனை அறிந்து கொள்ள நினைக்கிறான். போராட்டம் நிறைந்த உலகத்தில் தான் எந்த அளவுக்கு தன் சொந்தத் திறனைப் பயன்படுத்தி வெற்றியடைய முடியும் என்பதை அறியும் ஆவல் அவனிடம் மேலோங்கி இருக்க வேண்டும். அதனால் அவன் வெட்ட வெளியை நாடி சிறிது நேரம் பறவையாக பறக்கிறான்.
விதி பற்றிய அழுத்தமான கோட்பாடுகளும் அதைப் பற்றிய நம்பிக்கைகளும் மக்களிடையே நிறைய உள்ளன. இருந்த போதும் ஒருவர் தெரிவு செய்யும் வாழ்க்கைப் பாதையைத் தான் நாம் விதி என்று சொல்ல வேண்டியுள்ளது. இந்த நவீன உலகத்தில் திறமையும், ஆர்வமும் இருந்தால் யாரும் எந்தத் துறையையும் தெரிவு செய்து படிக்கலாம். அந்தத் துறையில் பணியாற்றி முன்னேரலாம். எனவே ஒரு மனிதனின் முன்னால் பல வழிகள் உள்ளன. அவை அவனை அழைக்கின்றன.
மருத்துவத்துறை, தொழில் நுட்பத்துறை, கலைத்துறை என்று ஒருவரின் முன்னே பல துறைகள் அவர் தெரிவு செய்வதற்காக இருக்கின்றன. அவற்றில் அவர் உள்ளம் விரும்பும் ஒன்றை தெரிவு செய்து தன் பயணத்தைத் தொடர்கிறார். ஒருவருக்கு குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு வழிகள் அவர் தெரிவு செய்வதற்கு ஏற்றவாறு இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். அவரால் எந்தத் துறையிலும் பிரகாசிக்க முடியும் அல்லது காலம் தள்ள முடியும். ஒவ்வொரு வழியும் விதி என்கிற போது அவர் முன்னே ஒரு விதி இல்லை. அவருக்கு ஏற்றவாறு முன்று, அல்லது நான்கு விதிகள் சேர்ந்த விதித் தொகுப்பு இருக்கிறது. அதில் ஒன்றை அவர் தெரிவு செய்து கொள்கிறார். எனவே வாழ்வில் விதியும் இருக்கிறது நமக்கான சுதந்திரமும் உள்ளது.
அவர்கள் மூவரும் கற்பனை உலகில் நிஜத்தில் உலவுவது போல ஒரு சுற்று மிதந்து விட்டு அமர்ந்திருந்தார்கள். மூன்று பேரும் சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டபடியால் அன்று மகிழ்ச்சியாக இருக்க எங்காவது செல்ல வேண்டும். குறைந்த பட்சம் ஒரு திரைப்படமாவது பார்க்க வேண்டும். அதனால் தாங்கள் புறப்படுவதாகச் சொன்னார்கள்.
“கொஞ்சம் பொறுங்கள். இந்தக் கருவியின் சிறப்பை இன்னும் நீங்கள் காணவில்லை. நீங்கள் விரும்பிய உருவம் பெற்று கற்பனை உலகில் இருக்கும் போது உங்கள் உருவத்தை வேறு ஓர் உருவமாகவும் மாற்றிக் கொள்ளலாம்.”
மதிவாணன் இவ்வாறு கூறியதும். அவர்களும் ஆவலோடு அடுத்த சுற்று விளையாட்டுக்குத் தயாரானார்கள். அதில் பல வினேதங்கள் நிகழ்ந்தன. அவற்றில் பல அதிர்ச்சி நிறைந்தவைகளாக இருந்தன. லோக்கேஷ் மீன் உடலோடு மலை மேல் ஏறி பாறை மீது அமர்ந்தான். இதமான வெயிலில் அமர்ந்திருப்பது சுகம் என்றான். பிரபாவிற்கு சிறகுகள் முளைக்க, பறக்கும் மலை ஆடாக மாறுகிறான். கடல் வரை பறந்து போன பிரசன்னா கடலுக்குள் மீனைப் போல நீந்தினான். சிறகுகளை அசைத்து நீரைத் தள்ளி கடலின் ஆழத்திற்குப் போகிறான்.
பாட்டுப் பாடியபடி பாறை மீது இருந்த லோகேஷை கழுகுக் கூட்டம் சூழ்ந்து கொள்கிறது. கைகளால் அவற்றை விரட்டப் பார்க்கிறான். அவை எல்லாம் சேர்ந்து அவன் உடலைக் கொத்திக் கிழிக்கின்றன. அவனை எல்லா கழுகளும் சேர்ந்து விரல் நகங்களால் பற்றி தூக்கிச் செல்ல முயல்கின்றன. பிரபா சிறகுகள் கிடைத்த மகிழ்ச்சியில் காட்டை வட்ட மிட்டுப் பறக்கிறான். சிறிது நேரத்தில் அவன் சிறகுகள் ஓய்ந்து போகின்றன. தன் உடல் மிகவும் கனமானது போன்று உணர்கிறான். வானில் இருந்து கீழே வருகிறான். ஒரு முட்புதரின் மேல் விழுந்து மயக்கமடைகிறான். கடலின் தரையில் பல அதிசயங்களையும், அழகிய காட்சிகளையும் ரசித்துக் கொண்டிருக்கிறான் பிரசன்னா. திடீரென அவனுக்கு முதுகில் ஒரு பாறை விழுந்தது போல் இருக்கிறது. கடலுக்கு அடியில் இருக்கும் அளவுக்கு அதிகமான நீரின் அழுத்தத்திற்கு ஈடுகொடுக்கும் விதமாக ஆழ்கடல் மீன்கள் இயற்கையில் உருவாகி உள்ளன. அவை மகிழ்ச்சியாக நீந்தியபடி கடல் மண்ணில் புரண்டு எழுகின்றன. நீரின் அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் உடல் நடுங்கி திணறிக் கொண்டிருந்த அவனைப் பார்த்து சிறிய மீன்கள் சிரிப்பது போல இருந்தது.
இவர்கள் மூவருக்கும் தாங்கள் தெரிவு செய்ததை விட வேறு ஒரு நல்ல துறையை நாடி அதில் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்திருக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது. அதுவே அவர்களை விசித்திரமான உருவங்களைப் பெற்று முரண்பட்ட சூழலில் விளையாட வைத்துப் பார்க்கிறது. அந்தக் கருவி அவர்கள் ஆழ் மன எண்ணங்களுக்கு உருவம் கொடுக்கிறது. அக்கரை பச்சை என்பது ஒரு பொதுவான வாசகம். இதில் விதிக்கு இடம் இல்லை. மனிதனின் மனம் மிகவும் சிக்கலான வலைப்பின்னல். அதில் விதி பற்றிய நம்பிக்கைகள், அனுபவங்கள் சேரும்போது அது இன்னும் சிக்கல் நிறைந்ததாக மாறுகிறது. பிரபா, லோகேஷ், பிரசன்னா ஆகிய மூவரும் படித்தவர்கள். நவீன உலகத்தில் வாழும் இளைஞர்கள். இருந்த போதும் அவர்கள் இந்தியர்கள். இயற்கையாகவே விதி பற்றிய நம்பிக்கை அவர்களிடம் வேரூன்றி இருக்கிறது. மேலும் சுற்றி இருப்பவர்களோடு அவர்கள் உள்ள பூர்வமாக பகிர்ந்து கொள்ளும் கருத்துகளும் சேர்ந்து அவர்கள் அந்தக் கருவியில் கண்ட காட்சிகளாக மாறின. மதிவாணன் அந்தக் கருவியை ஒரு விளையாட்டு சாதனமாகவே கருதுகிறார். அவர்களை மகிழ்விப்பதற்காகவே அவர்களை அந்த விளையாட்டில் பங்கேற்கச் சொன்னார். ஆனால் கற்பனை விளையாட்டில் நிகழ்ந்தவை அவர்கள் மூவரின் சற்று குழம்பிய மன நிலைகளை பிரதிபலிப்பவைகளாகவே மாறிவிட்டன.
ஒவ்வொருவரும் தன் வழியைத் தானாகவே தெரிவு செய்கிறார். முழுக்க முழுக்க யாரோ ஒருவரின் வற்புறுத்தலின் பேரில் ஒரு வழியில் தான் செல்லுவதாக யாரும் கூற முடியாது. சிறிதளவாவது தன்னுடைய சொந்த விருப்பம் இல்லாமல் ஒருவர் தனக்கான வழியை ஏற்க சம்மதிக்க மாட்டார். மனிதனின் மகிழ்ச்சியும், நிறைவும், நிம்மதியும் அவன் முன்னே இருக்கும் வழிகளை பொறுத்துள்ளன என்பதை விட அவனுடைய உள்ளத்தைப் பொறுத்து இருக்கின்றன என்பதே உண்மை. அர்த்தமுள்ள ஒரு வழியில் செல்லும் போது மனிதனின் உள்ளம் அதற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்கிறது. அப்படியானல் தனிப்பட்ட லட்சியத்திற்கும், தனித்துவத்திற்குமான இடம் வாழ்க்கையின் வழியில் எங்கே உள்ளது என்ற கேள்வி எழுவது இயல்பு. மனிதன் ஒருவன் பிறந்து வளர ஆரம்பித்தவுடன் அவன் தன் உள் உணர்வின் காரணமாக தான் செல்ல வேண்டிய அல்லது விருப்பமான வழி அமைப்பதற்கான ஆயத்த வேலைகளை ஆரம்பித்து விடுகிறான். மரபணுக்கள் மூலமாகவோ அல்லது இன்னும் வேறு சில காரணங்களினாலோ தான் செல்லும் பாதைக்கான திட்டமிடல்களை தொடங்கிவிடுகிறான். அனிச்சை செயலாகவே இது நடைபெறலாம். தான் அடிப்படையில் விரும்பும் ஒரு பணியில் மனிதன் ஒருவன் ஈடுபடும் வாய்ப்பைப் பெற்றுவிட்டால் அவன் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பான் என்பது ஒரு பொதுவான கருத்து. அதில் உண்மை இருக்கத் தான் செய்கிறது. அதே போன்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. மனிதன் ஒருவனுக்கு அவன் அதிகமாக விரும்பும் துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. அவன் சூழ்நிலை காரணமாக வேறு ஒரு துறையில் பணியாற்றுகிறான். அதே வேளையில் அவன் விருப்பம் மாறவில்லை. அவன் துறை மாறினாலும் தன் ஆற்றலை வெளிப்படுத்தும் பாணியில் அவன் விருப்பம் ஒட்டிக் கொண்டிருக்கும்.
பழைய ஆவணப்படம் ஒன்றில் சில தொழிலாளர்கள் அகலமான மெல்லிய உலோகத் தகடுகளை நேர்த்தியான கம்புகளை வைத்துக் கொண்டு நகர்த்துகிறார்கள். ஒருவர் உலோகத் தகடு ஒன்றை தள்ளிவிடுவதும் அதை மற்றவர் தொடர்ந்து நகர்த்துவதும், எதிர்முனையில் இருப்பவர் அதை நகர்த்துவதில் பங்கேர்க்க தொடர்கிறது அவர்கள் பணி. அவர்கள் அந்த உலோகத் தகடுகளை நெம்பி நகர்த்துவதிலும் அவை சற்று வளைந்து விழுவதிலும் மிகச்சிறந்த ஒருங்கிணைப்பு தெரிகிறது. பின்னணி இசை கேட்கத் தொடங்குகிறது. இசையோடு அந்தத் தொழிலாளர்களின் கையசைவும் மெல்லிய உலோகத்தகடுகள் சற்று நெளிந்து பின் சரியாகி விழும் காட்சியும் இணைந்து கொள்கின்றன. ஒரு நிலையில் அவர்கள் வேலை செய்கிறார்களா அல்லது நகர்ந்து விழும் அந்த உலோகத் தகடுகளுடன் நடனம் ஆடுகிறார்களா என்ற சந்தேகம் பார்ப்பவர்களுக்கு வந்து விடுகிறது. இது அங்கு பணி செய்யும் ஒவ்வொருவரிடமும் இருந்து வெளிப்படக் காத்திருக்கும் கலைத் திறனையும் விருப்பத்தையும் காட்டுகிறது. இது மீன் ஒன்று மலைமேல் ஏற முயலும் செயல் அல்ல. தான் செல்லும் வழியை விட்டு விட்டு வேறு ஒன்றைப் பற்றி எண்ணி அதில் விதியையும் சேர்த்து சிந்தித்ததால் ஏற்பட்ட தடுமாற்றத்தின் வெளிப்பாடல்ல. நிகழ்வில் ஒன்றி அதில் நிறைவைக் காணும் செயல். ஏற்ற சூழலும் சந்தர்ப்பமும் அமைத்திருந்தால் அவர்களில் சிலர் சிறந்த கலைஞர்களாக மேடையேறி புகழ்பெற்றிருக்கலாம்.
மனிதர்களுக்கு இரத்தத்தின் நிறம் பொதுவானது, இன்னும் பசி, தூக்கம் இவை எல்லாம் பொதுவானவை என்று சொல்கிறோம். இவற்றை எல்லாம் விட பொதுவான ஒன்று உள்ளது அதுதான் நிம்மதி. மன நிறைவுக்குப் பிறகு வரும் இது உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவானது. உலகம் ஏற்றுக் கொண்ட எல்லா வழிகளிலும் இது கிடைக்கும். இதன் அளவு வேறுபடாது. எவரெஸ்ட்டு சிகரத்தில் ஏறி நின்றால் அதை லட்சியமாக கொண்டவருக்கு உண்மையில் தனிமகிழ்ச்சி கிடைக்கிறது. ஆனால் அதைத் தொடர்ந்து வரும் நிறைவின் நிம்மதிக்குள் அவர் பிரவேசிக்கும் போது உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் பெருவதைத் தான் பெறுகிறார்.
உள்ளத்தின் நிறைவு தான் உலகில் ஒருவருக்கு விலை மதிக்க முடியாத ஒன்றாக இருக்க முடியும். அதைப் பெறுவதற்கு ஒருவர் ஆகாயத்தைப் பார்ப்பதை விட தன்னைப் பார்ப்பது சிறந்த வழியாக இருக்கும். ஹாரிசன் ஃபோர்டு இரண்டு தலைமுறை ரசிகர்களின் தன்னிகரற்ற ஹாலிவுட் கதாநாயகன். ஒரு திரைப் படத்திற்கு சில நூறு கோடிகளை சம்பளமாகப் பெறுபவர் அவர். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஓர் ஆங்கிலப் பத்திரிகைக்குக் பேட்டி கொடுத்தார். அதில் நடிக்கும் நேரத்தைத் தவிற மற்ற நேரங்களில் அவருக்கு அதிக நிறைவைக் கொடுப்பது எது என்ற கேள்விக்கு இவ்வாறு பதிலளிக்கிறார்.
“எனக்கு ஒரு தச்சர் முழு ஈடுபாட்டோடு வேலை செய்வதை கவனித்துக் கொண்டிருப்பது மிகவும் பிடித்த ஒன்று. அவர் செய்யும் ஒவ்வொரு நுட்பமான வேலையையும் பார்த்துக் கொண்டே இருப்பேன். அவர் மரத்துகள்களை அள்ளி ஒரு கூடையில் எடுத்துப் போட்டு சுத்தம் செய்வதையும் நான் கவனித்துக் கொண்டே இருப்பேன். எனக்கு அது பெரும் மன நிறைவை அளிக்கும்.”
அவர் நினைத்தால் உலகின் தலை சிறந்த ஓவியர் ஒருவரை அழைத்து ஒரு மேடையில் படம் வரையச் சொல்லி அதை நேரடியாகப் பார்க்கலாம். ஆனால் அவர் உள்ளம் நாடுவது நம்மில் பலர் சாதாரணமானதாகவோ அல்லது எளிமையானதாகவோ நினைக்கும் ஒன்று.
ஒரு சிலரால் விதி தொடர்பான அலட்சியமான கருத்துகளை ஏற்க முடிவதில்லை. அவர்களுள் இரண்டு வகையானவர்கள் இருக்கிறார்கள். முதல் வகையினர் விதியை தாங்கள் வளர்க்கும் நாயாகப் பார்க்கிறார்கள். இந்த நாய் விலை உயர்ந்த வெளிநாட்டு செல்லப் பிராணியல்ல. நகர் புறங்களிலும், கிராமங்களிலும் பல வீடுகளில் நாய் வளர்ப்பார்கள். இந்த நாய் அத்தகைய நாட்டு நாய். ஒரு வீட்டிற்கு ஒரு நாய் இருக்கும். இப்போதெல்லாம் தமிழ் நாட்டில் யாரும் நாட்டு நாய்களை வளர்ப்பதாகத் தெரியவில்லை. அதனால் இப்போது இருக்கும் நாட்டு நாய்கள் எல்லாம் தெரு நாய்கள் தாம். முன்பு மக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்த நாட்டு நாய்கள் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும். வேறு எங்கும் அவை செல்லாது. நாயை வளர்ப்பவன் ஒரு மன நிலையில் அதற்கு உணவிட்டு, அதைத் தடவிக் கொடுப்பான். வீட்டிற்குள் தவறி அது காலடி எடுத்து வைத்தாலோ அல்லது தெருவிலிருந்து எதையாவது கவ்விக் கொண்டு வந்தாலோ கோபம் கொள்வான்.
“ சீ நாயே”
என்று கத்தியபடி அதன் முதுகில் ஓங்கி ஓர் அடி அடிப்பான். அது ஒரு முறை கத்தி விட்டு பயந்து சிறிது தொலைவு ஒடும். பிறகு மீண்டும் வீட்டு வாசலில் வந்து படுத்துக் கொள்ளும். பெரும்பாலானவர்கள் விதியை வீட்டு நாய் போல் தான் கருதுகிறார்கள். அது இவர்கள் கற்பனை செய்வது போல் இருக்கிறதோ இல்லையோ தங்கள் மனதிற்குள் உணவிட்டு நினைவுகளால் அதை வளர்க்கிறார்கள். ஒரு நல்ல விஷயம் நடந்தால் அதைக் கொஞ்சுகிறார்கள். ஏதாவது நஷ்டம் ஏற்பட்டால்
“எல்லாம் உன்னால் வந்தது. தொலைந்து போ”
என்று விரட்டுவார்கள். அதே போல ஏதோ தீமை தனக்கோ தன் குடும்பதுக்கோ நிகழப் போகிறது என்று ஒருவருக்கு உள்ளே சந்தேகம் எழுகிறது. அந்த நேரம் பார்த்து நாய் ஊளையிடுகிறது.
“சனியனே ஊளை போடாதே”
என்று திட்டுவார். இந்த விதி நாய் வளர்ப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மிகுதியாக இருக்கும் நடுத்தரவர்க்கத்தினர் தாம்.
அடுத்து நாம்மால் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுபவர்கள் விதியை நம்பும் மக்களுள் இருக்கும் இரண்டாம் வகையினர். எல்லா மனிதர்களிடமும் விதி இல்லை என்று எளிதாக நாம் கூறிவிட முடியாது. முக்கியமாக அந்த இரண்டாம் வகையினரிடம் அதைச் சொல்ல முடியாது. அவர்களை, எதையும் கூறி சமாதானம் செய்து விட முடியாது. அவர்களின் புகார்கள் இவைதான்.
“நான் எதைச் செய்தாலும் அதற்கு ஒரு தடை வருகிறது. வாழ்க்கை ஒடுகிறது. முன்னேற்றம் இல்லை. முயன்று ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி உயரப் பார்க்கிறேன். பரமபத விளையாட்டில் பாம்பு கடிப்பதைப்போல் ஒரு சிக்கல் வந்து முதல் கட்டத்திற்கு வந்து விடுகிறேன்.”
இப்படி கூறுபவர்கள் தங்கள் மூன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது விதிதான் என்று உறுதியாகக் கூறுகிறார்கள். அவர்களாகவே மாறி அவர்களின் மனத்தாங்கல்களை உணர்ந்தால் தான் அவர்கள் வேதனையை மற்றவர்களால் புரிந்து கொள்ள் முடியும்.
இந்த பரந்த உலகம் மிகவும் நவீன மயமான காலத்தில் உள்ளது. இங்கு மகிழ்ச்சிக்கு குறைவே இல்லை. அதே வேளையில் புதிய சிக்கல்களும் மனிதர்களின் மனதாங்கல்களும் பெருகுவது நிற்கவில்லை. ஆய்வாளர்கள் விஞ்ஞான பூர்வமாகப் பார்க்கிறார்கள். சாலையில் வாகனங்கள் பெருகினால் அதற்கு ஏற்றவாறு விபத்துகளும் நிகழும். இதில் விதி எங்கிருந்து வந்தது.
இங்கு மக்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதே வேளையில் மக்கள் தொகையும் பெருகியுள்ளது. பல்வேறு வகையான விருப்பங்கள் கொண்ட மக்கள் இருக்கிறார்கள். மாற்றமும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. எல்லா துறைகளிலும் போட்டி பெருகிவிட்டது. ஒரு லட்சியத்தை நோக்கி செல்லும் மனிதன் போராட வேண்டியுள்ளது. இதில் முக்கியமான ஒன்று காலம். காலம் போய்விட்டால் அதை ஈடு கட்டுவது மிகக்கடினம். இப்படிப்பட்ட சிக்கல் நிறைந்த ஒரு வலைப்பின்னல் உலகத்தில், தானே விரும்பி விழுகிறான் மனிதன். அதில் ஒரு நிலையில் வானத்திலிருந்து புறப்பட்ட மின்னல் மரத்தருகே இருக்கும் மனிதனைத் தேடிவந்து தாக்குவது போல் விதி தன்னை தாக்குவதாக நினைக்கிறான்.
பகுத்தறிவையும், அனுபவத்தையும் பயன்படுத்தி விஞ்ஞான பூர்வமாக எல்லாவற்றையும் ஆராய்ந்தாகி விட்டது. எல்லாம் பார்த்து ஓய்ந்த பின்னும் கண்ணில் ஒரு கண்ணாடித்துகள் இருந்து கொண்டு உறுத்துகிறது. அதை வெளியே எடுக்க முடியாது என்ற நிலையில் அது தான் உண்மையான விதி என்று முடிக்க வேண்டியுள்ளது. மறுபிறவியை நம்பாத மேலை நாட்டவரும் அழுத்தமான ஒரு விதி பற்றி பேசுகிறார்கள். அத்தகைய விதி என்று ஒன்று இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதிலும் அதன் இரண்டுவகைத் தன்மைகளில் ஒன்றை கவனத்தில் எடுத்துக் கொள்வோம். மனிதனின் விதிக்கு இரண்டு முகங்கள் உள்ளன. ஒன்று அவனுக்கு நன்மை தருவதாக இருக்கிறது. இதைப் பற்றி அவனுக்கு அதிக கவலை இல்லை. இது கொடுக்கிறது. அதை மகிழ்ச்சியோடு துய்க்கிறான். அதன் மறுபக்கத்தில் ஒரு கடுமையான முகம் உள்ளது. பெரும்பாலும் மக்கள் அதைத்தான் விதி என்று குறிப்பிடுவார்கள். தொடர்ந்து ஒரு மனிதனுக்கு சோதனைகளையும் துன்பத்தையும் அது தருகிறது. அதனால் பாதிக்கபடுபவர்கள் இயங்க முடியாத ஒரு சுழற்சிக்குள் இருப்பதைப் போல் உணர்கிறார்கள். இப்போது நம் கவனம் எல்லாம் அத்தகைய விதியைப் பற்றி மட்டும் உள்ளது. அந்த விதி இயங்குகிறது என்றால் அதற்கு ஒரு துணை தேவைப்படுகிறது. அது தான் மனிதனின் மனம்.
ரசாயன மை ஒரு வேதியல் வினை நிகழ்ந்து முடிந்து விட்டது என்பதை தன்னுடைய நிற மாற்றத்தைக் கொண்டு தெரியப்படுத்துகிறது. விசேஷத் தன்மை கொண்ட அதை தேவையான இடத்திலோ, பொருளிலோ இடும் போது அங்கு ஒரு வினை நிகழ்ந்ததா இல்லையா என்பதை நமக்குக் காட்டுகிறது. அத்தகைய ரசாயன நிகழ்வு காட்டி போல நம் மனம் செயல்படுகிறது. அதை வாழ்கை நிகழ்வுகளின் மேல் இடும் போது விதி தென்படுகிறது. உள்ளத்தை ஒன்றில் அதிகமாக ஈடுபடுத்தி அதில் உழல்வதைப் போன்ற செயல் அது. உள்ளம் விதியின் செயலில் அதிக கவனம் செலுத்தும் போது, ரசாயன மை நிறம் மாறி ஒன்றை வெளிக் காட்டுவது போல் உள்ளம் விதியின் செயல்பாடுகளை பூதாகரமாகக் காட்டும். அதில் உள்ளம் ஈடுபடாத போது அது இருப்பதே தெரிவதில்லை.
வானின் நிறமும், மேகங்களால் அதன் வடிவமும் மாறிக் கொண்டே இருக்கின்றன. பறப்பதில் ஆனந்தம் இருக்கும் போது பறவைகளுக்கு அவைகளைப் பற்றி என்ன கவலை இருக்க முடியும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வால்டர் செம்கியின் ‘உயிரின் தொடக்கமும் மறுபிறப்பின் நோக்கமும் ’ நூல் ஓர் ஆய்வு
நாமெல்லாம் இந்த உலகில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நடித்து விட்டுப் போகும் நடிகர்களாக இருக்கிறோம் என்கிறார் ஷேக்ஸ்பியர். உண்மையில் மனிதர்கள் அனைவரும் யாரோ எழுதிய நாடகத்தில் வேஷம் ஏற்று நடிப்பவர்களா என்ற கேள்விக்கு பதில் கூற விழைகிறார் டாக்டர் வால்டர் செம்கி. சான்ஃபரான்சிஸ்கோவைச் சேர்ந்த மருத்துவரான அவர், தன்னுடைய இரண்டு நூல்கள் மூலம் உலகப் புகழ் பெற்று விட்டார்.2006 இல் எழுதிய ‘பார்ன் அகைன்’ நூலுக்குப் பிறகு 2011 இல் அவர் எழுதிய ‘ஆரிஜின் ஆஃப் சோல் அன்ட் பர்பஸ் ஆஃப் ரீ இன்கார்னேஷன்’ என்ற நூல் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சியின் மூலமாக அவர் மனிதனின் உயிர் ஒரு கருவில் தங்கி தன் பழைய விருப்பு வெறுப்புகளோடு இந்த உலகிற்கு வருகிறது என்பதை கண்டறிந்திருக்கிறார்.மறு பிறப்பு பற்றிய ஆய்வில் நிபுணரான அவர் ஆய்வுகள் மூலம் கூற விழைவது இதுதான்.
“நான் ஒரு விஞ்ஞானி என்ற முறையில் மனிதர்களின் முன் பிறப்புகளை சில ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு செய்தேன்.அவை ஒரு மனிதரின் இரண்டு பிறப்புகளிலும் உள்ள குணாதிசயங்கள்,முக அமைப்பு,சிந்தனை,எழுதும் முறை ஆகியவையாகும்.அவை ஒரு மனிதனின் பல பிறப்புகளில் பெரும்பாலும் மாறுவது கிடையாது.”
செம்கியின் கருத்துபடி உலகில் பிறக்கும் மனிதர்கள் பெரும்பாலும் தாங்கள் எப்படி இருக்க வேண்டும் எந்த சூழலில் வாழ வேண்டும் என்பதை முடிவு செய்பவர்களாக இருக்கிறார்கள்.இது நம்மில் பலருக்கு வியப்பை அளிப்பதாக இருக்கும்.முன் பிறப்பில் ஒரு உயிர் கொண்ட விருப்பங்களை விடாமல் தன்னோடு வைத்துக் கொண்டிருப்பதே அதற்குக் காரணம்.மனிதனின் விருப்பு வெறுப்புகள் மிகவும் வலிமையானவை.
இவருடைய கருத்தை புரிந்து கொள்ளும் முன்பாக நாம் சில அடிப்படைகளை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.எளிமையாக சொன்னால் மனிதன் என்பவன் உடல், உயிர் ஆகிய இரண்டைக் கொண்டவன்.தனியாக ஒரு மனிதனுக்கு உயிர் என்ற ஒன்று இருப்பதை மறுப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.இந்தக் காலத்தில் ஒன்றைப் பற்றி பேசினால் விஞ்ஞான பூர்வமான ஆதாரம் இருக்கிறதா என்று பலரும் கேட்கிறார்கள்.இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் மனிதனிடம் தனியாக உயிர் என்ற ஒன்று இருப்பது விஞ்ஞான பூர்வமாக ஒரு மருத்துவமனையில் நிரூபிக்கப்பட்டது.இது நடந்தது டென்மார்க்கில்.உயிர் இருப்பதை நிரூபிப்பதற்காக யாரும் எந்த முயற்சியும் அங்கு செய்யவில்லை. ஒரு முப்பது வயது பெண்மணிக்கு செயற்கை இதயம் பொருத்துவதற்காக அந்த அறுவை சிகிச்சை நடை பெறுகிறது.மற்ற உறுப்புகளை செயற்கையாக தயாரிக்கப்பட்ட ஒன்றால் மாற்றிக் கொள்வதற்கும் இதயத்தை அவ்வாறு மாற்றிக்கொள்வதற்கும் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது.ஏனென்றால் இதயம் தான் உடலுக்குள் இரத்தத்தைத் தள்ளி பாய்ச்சுகிறது.ஒரு குறிப்பிட்ட உறுப்பை எடுத்துவிட்டு செயற்கையான உறுப்பைப் பொருத்தும் போது இரத்த ஓட்டம் தற்காலிகமாக அந்த உறுப்புக்கு மட்டும் நிறுத்தப்பட்டு பின்னர் தரப்படுகிறது.உடல் முழுவதும் இரத்தம் பாய காரணமாக இருக்கும் இதயத்திற்கு பதிலாக செயற்கை இதயம் பொருத்தும் போது உடலின் மற்ற பகுதிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவு இரத்த ஓட்டம் முழுமையாக இருக்காது.இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் அப்போது மூளைக்கும் இரத்தம் செல்லாது.இதை தவிர்க்க முடியாது.செயற்கை இதயம் உடலுக்குள் வைக்கப்பட்டு இரத்த குழாய் இணைப்புகள் கொடுக்கும் அந்த முக்கியமான குறுகிய கால அளவில் அந்தப் பெண்ணின் மூளைக்கு இரத்தம் செல்லவில்லை. அதாவது மூளை செயல் இழந்த நிலைக்கு அவள் செல்ல வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து அவள் செயற்கை இதயம் செயல்படத் தொடங்கிவிட்டது.கண் விழித்த அந்த பெண் கூறியது மருத்துவர்கள் உட்பட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தன் உடலை பார்த்ததாகவும், அதில் மருத்துவர்கள் செயற்கை இதயத்தைப் பொருத்துவதை சிகிச்சை அறையில் தான் கண்டதாகவும் அவள் கூறினாள்.இதை ஹாலுசினேஷன் என்று சொல்லப்படுகின்ற கற்பனை செய்யப்பட்ட அல்லது பொய் உணர்வு என்று மருத்துவர்களால் சொல்ல இயலவில்லை. மயக்கம், தூக்கம் இரண்டிலும் மனம் வேலை செய்ய வாய்ப்புள்ளது.அப்படி இருந்தால் அவள் கண்டதாகக் கூறியவற்றை கற்பனை செய்து கொண்டிருக்கிறாள் என்று எளிதாகக் கூறிவிடலாம்.அவள் இருந்த நிலை மயக்கமும் இல்லை தூக்கமும் இல்லை.மனம் வேலை செய்தால் தான் எதையாவது கற்பனை செய்ய முடியும்.மனம் வேலை செய்ய மூளை இயங்கும் நிலையில் இருக்க வேண்டும். மூளைக்கு ஒரு குறிப்பிட்ட கால அளவு இரத்த ஓட்டம் இல்லாமல் அது செயல்லற்று இருந்தது மருத்துவர்கள் அறிந்த ஒன்று. ஆதலால் அவர்கள் அவளுக்கு ஏற்பட்ட ஒன்று தங்களால் புரிந்து கொண்டு விளக்க முடியாத ஒன்று என்று திட்ட வட்டமாக கூறிவிட்டார்கள்.அந்தப் பெண் அறுவை சிகிச்சையின் முக்கிய நிகழ்வுகளை தான் நேரில் பார்த்தது போன்று விவரித்த விதம் அதை பொய் என்று அறையில் இருந்த யாராலும் மறுத்துக் கூறிவிட முடியாதபடி இருந்தது.நடந்தது இது தான். மூளைக்கு இரத்தம் பாய்வது நின்ற தருணத்தில் அவள் உயிர் அவள் உடலை விட்டு நீங்கிவிட்டது.அது, உடல் மீண்டும் இயங்கும் நிலைக்கு வந்தவுடன் திரும்பி நுழைந்து விட்டது. அந்தப் பெண் போல மரணத்தை பார்த்துவிட்டு மீண்டும் தங்கள் உடலுக்குத் திரும்பி வந்தவர்கள் ஏராளம்.உலகம் முழுவதும் பல இடங்களில் இத்தகைய நிகழ்வுகள் தக்க ஆதாரங்களுடன் பதிவாகி உள்ளன.அவற்றில் டென்மார்க்கில் நடந்த நிகழ்வு மிகவும் முக்கியமானது.ஏனென்றால் அது விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.
இது போன்ற அபூர்வ நிகழ்வுகளுக்கெல்லாம் அழுத்தமான விளக்கங்களைத் தருகிறார் டாக்டர் செம்கி.அவருடைய விளக்கங்கள் விஞ்ஞான ஆய்வுகள் மூலமாக தரப்படுபவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
உலகில் பல மதங்கள் மறுபிறப்பை ஏற்றுக்கொள்வதில்லை.இந்து மதம் மனிதனுக்கு மட்டுமல்ல எல்லா உயிரினங்களுக்கும் மறுபிறப்பு உண்டு என்கிறது.அதுமட்டுமல்லாமல் ஓர் உயிரானது புழுவாக, பறவையாக, மிருகமாக பல பிறப்புகளைத் தாண்டி மனிதனாகப் பிறக்கிறது என்று கூறுகிறது.இந்து மதத்தின் வேர்களைக் கொண்ட வேதங்கள் பிறப்பு,இறப்பு உயிர்களின் தன்மை ஆகியவை பற்றி உறுதியான கருத்துகளைச் சொல்கின்றன.மனிதன் ஒருவன் இறந்தவுடன் அவன் உயிர் அவன் உடலை விட்டு செல்கிறது அப்போது அது மட்டும் பிரிந்து செல்வதில்லை.அது தன்னோடு விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றால் உருவான மனம்,பிராணன் என்ற சக்தித் தொகுப்பு,உடலோடு இருந்த போது ஒட்டிக்கொண்டிருந்த ஐம் புலன்களின் உணர்வுகள் இவை அனைத்தையும் கொண்டு செல்கிறது.
வெகு காலத்திற்கு முன்னால் மறைமலை அடிகள் இறந்த பிறகு மனித உயிர்களின் நிலை,செயல்பாடுகள் பற்றி ஒரு நூல் எழுதினார்.கடவுள் நம்பிக்கை சிலரிடம் அருகி வந்த காலம் அது.அப்போது விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட சக்திகள் பற்றி அனைவரும் அறிந்து கொள்வது அவசியம் என்ற நோக்கத்தில் துணிவோடு சில கருத்துகளை அவர் மக்களிடம் கொண்டு சேர்த்தார்.
டாக்டர் செம்கி மனித உயிர் பற்றிய இந்து மதகோட்பாடுகளை ஏற்பதாகவே தெரிகிறது.ஏனென்றால் அவர் மனிதனின் கர்மவினைகளுக்கும் தன் விளக்கங்களில் இடம் அளித்துள்ளார்.அவருடைய கருத்துபடி மனிதன் இறந்தவுடன் உயிரானது மீண்டும் பிறக்கும் தருணம் வரும் போது தன் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் ஆவலோடு செயல்படுகிறது.தாயின் வயிற்றில் கரு உருவானதும் உயிர் தன்னைச் சுற்றி ஒரு சக்தி வளையத்தை உருவாக்குகிறது.அதன் மூலமாக உயிர் தன்னுடைய பழைய உருவத்தை கருவில் பதியச் செய்கிறது.ஓர் எலும்பியல் நிபுணர் மெல்லிய எலும்பு முறிவை மின்சாரம் பாய்ச்சி சரி செய்வது போன்ற நிகழ்வு இது என்கிறார் செம்கி.அதனால் முற்பிறப்பில் உயிர் கொண்ட முக அமைப்பு இந்த பிறப்பிலும் இருக்கும் என்று உறுதியாக கூறுகிறார்.உயரம், உடல் எடை இவை மாறுபட்டாலும் முக அமைப்பு மாறாது என்கிறார்.மேலும் கை, கால் அசைவுகள், குரல் இவை முற்பிறவி போலவே இருக்கும் என்கிறார்.இவற்றை கண்டறிவதற்கு பல ஆய்வக ஆராய்ச்சிகளையும்,நூல் ஆய்வுகளையும் அவர் மேற்கொண்டிருக்கிறார்.பல்லாயிரம் பேர்களை பேட்டி கண்டுள்ளார்.முக்கியமாக மூவாயிரம் குழந்தைகளிடம் பேசி இருக்கிறார். அவர்கள் எல்லாம் வயதுக்கு மீறிய வியத்தகு ஆற்றல்களை குழந்தை பருவத்தில் வெளிப்படுத்தியவர்கள்.அவர்களில் பலர் தங்கள் முற்பிறப்பு நிகழ்வுகளை விவரித்திருக்கிறார்கள்.குழந்தைகள் பொய் கூறுதில்லை. இருந்த போதும் அவர், அவர்கள் கூற்றிற்கான ஆதாரங்களையும் திரட்டி இருக்கிறார். தன்னுடைய ‘பார்ன் அகைன்’ நூலில் அவர் டாக்டர் அப்துல் கலாம் முற்பிறப்பில் திப்பு சுல்தானாக வாழ்ந்தார் என்று உறுதியாக தெரிவித்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்.அவர் கூற்றுக்கு ஆதாரமாக இருவரின் முக ஒற்றுமையைக் காட்டுகிறார்.அடுத்து திப்புசுல்தானின் தனிதன்மை வாய்ந்த விருப்பத்தைக் கூறுகிறார்.திப்பு சுல்தான் மிகப்பெரிய போர் வீரன் மட்டுமல்ல ராக்கெட் தொழில் நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவன்.அவன் வெள்ளைக்காரர்களை எதிர்க்க ஆரம்ப கால ராக்கெட் தொழில் நுட்பத்தை வளர்ப்பதில் பெரும் ஆர்வம் காட்டினான் என்கிறார்கள் வரலாற்றுவியலாளர்கள் .ஏவுகணை தொழில் நுட்பத்தில் இந்தியா பெற்ற வெற்றிகளில் பெரும் பங்கு வகிப்பவர் அப்துல் கலாம் என்பது அனைவரும் அறிந்ததே.
மனித உயிரானது ஒரு கருவில் தன் உருவ அமைப்பை பதிவு செய்வதோடு தன் விருப்பங்களையும், லட்சியங்களையும் பதிவிறக்கம் செய்கிறது என்கிறார் டாக்டர் செம்கி.இங்கு ஒரு பெரிய சக்திப் பரிமாற்றம் நிகழ்கிறது. அதாவது பெற்றோரிடம் இருந்து கருவுக்கு வந்த ஜீன்கள், பிறக்கப் போகும் மனிதனின் அத்தனை குணாதிசயங்களின் குறுந்தொகுப்பாக இருக்கின்றன. அவற்றோடு ஆன்மாவனது தான் கருவைச் சுற்றி ஏற்படுத்திய சக்தி வளையத்தின் மூலமாக ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்கிறது.ஜீன்கள் உடல் பருமனான மனிதனை உருவாக்குகிறது என்று வைத்துக் கொள்வோம்.உயிரின் பழைய உருவமோ சற்று ஒல்லியானது.பருமனான புது உருவத்தை ஏற்றுக்கொள்ளும் உயிர் ஒரு சில மாறுதல்களை வலியுறுத்துகிறது.அதனால் முகத்தில் கண்களும்,மூக்கும் பழைய உருவத்தை ஒத்து இருக்கும் படியாக உருவாகின்றன.உடல் அமைப்பைப் போன்றே குணாதிசயங்ககள்,தனித் திறமைகள் ஆகியவற்றை பதிவு செய்வதிலும் ஒரு புரிந்துணர்வு ஏற்படுகிறது.அதன்படி பெற்றோரிடம் இருந்து சில குணங்கள் பதிவானாலும், அதிகமாக உயிரின் முற்பிறவி விருப்பங்களே புதிதாக உலகுக்கு வரும் மனிதனிடம் ஒட்டிக் கொள்கின்றன.இங்கு உலகில் பிறக்கும் மனிதர்கள் ஏற்கனவே யாரோ எழுதி வைத்த நாடகத்தில் சொன்னபடி நடித்துவிட்டு போகும் நடிகர்களா அல்லது தாங்கள் விருப்பம் போல் செயல்படுபவர்களா என்ற கேள்விக்கான விடை ஒளிந்துள்ளது.
மனிதர்கள் எல்லோரும் உலகமென்ற நாட மேடையில் நடிகர்கள் என்ற ஷேக்ஸ்பியரின் கருத்தை யாரும் மறுக்க முடியாது.மனிதன் அன்றாடம் இந்த வேகமான உலகில் சூழ்நிலைகளால் ஆட்டுவிக்கப்படுகிறான்.இதனை உணர்ந்து கொண்ட யாருக்கும் அந்த மாபெரும் கவிஞனின் கூற்றில் இருக்கும் உண்மை புரியும்.டாக்டர் செம்கி போன்ற சுதந்திரமான ஆய்வாளர்கள் அந்த வரிகளில் ஒளிந்திருக்கும் உண்மைக்கான ஆதாரங்களை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து வாசகர்களுக்கு தர முயல்கிறார்கள்.
டாக்டர் செம்கி கருத்துகளில் அவருடைய மறுபிறவிக் கோட்பாடுகளில் அவருக்கு இருக்கும் அளவு கடந்த ஆர்வம் தெளிவாகத் தெரிகிறது. மனிதர்களின் அடுத்து அடுத்து வரும் பிறப்புகளில் நாடு, இனம் மொழி இவைகளைப் பொறுத்த வரையில் அவை எப்படிவேண்டுமானாலும் மாறி இருக்க வாய்ப்புள்ளது.அதாவது மனிதன் ஒருவன் இந்தப்பிறவியில் ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறான்.அவன் அடுத்துவரும் பிறவியில் அதே நாட்டில் அதே இனத்தில் பிறப்பான் என்பதற்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை.செம்கி இதனை பல முன் ஜென்ம நினைவுகள் மாறாத மனிதர்களைப் பேட்டி கண்டு திரட்டிய ஆதாரங்களுடன் விளக்குகிறார்.
எனவே இனம், மொழி, நாடு எல்லாமே மனிதர்கள் ஒரு பிறவியில் ஏற்கும் வேடங்கள் தாம்.செம்கி போன்ற மேதைகளின் கூற்றுபடி மனிதர்கள் தங்களுக்கான வேடத்தை தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள்.அவர்கள் குறிப்பிட்ட ஒரு சூழல், நடிக்க வலியுறுத்தும் கதாபாத்திரத்தை நடித்து விட்டுப் போகிறவர்கள் அல்ல.
செம்கி போன்ற ஆய்வாளர்கள் முற்பிறவி நினைவு வந்தவர்களைத் தாம் மிகுதியாக தங்கள் ஆய்வுக்கு உட்படுத்துகிறார்கள்.உலகின் மொத்த மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக் கொண்டால் இவர்கள் மிகவும் குறைவானவர்களே.செம்கி ஒரு மனோதத்துவ நிபுணர்.அவர் தன்னிடம் வருகின்ற நோயாளர்களை அதாவது முற்பிறவி நினைவுகளால் சற்று குழப்பம் அடைந்தவர்களை குணப்படுத்தும் சிகிசைக்கு தன் ஆய்வு முடிவுகளை பயன்படுத்துகிறார்.ஒரு புகழ் பெற்ற ஓவியர் மீண்டும் பிறந்து தற்செயலாக தன் ஓவியங்கள் வைக்கப்பட்ட அரங்கைக் காண்கிறார்.இப்பிறவியிலும் அவர் ஓவியர்.அவர் எளிதாக அரங்கத்தில் கண்ட ஓவியங்களின் மாதிரிகளை வரைகிறார்.செம்கி அவரிடம் மறுபிறப்பு என்பது உண்மை என்று விளக்குகிறார். மேலும் அவர் குழப்பம் அடையாமல் தனக்கு விருப்பமான பணியை இப்பிறவியிலும் தொடரலாம் என்கிறார்.இது ஒரு மகத்தான மனோதத்துவ சிகிச்சை.
மனித உடல்களை ஆராய்கினற விலங்கியலாளர்களும், மருத்துவர்களும் தங்கள் ஆய்வுக்கு ஒரு சில மனித உடலகளைத் தான் அறுத்துப் பார்க்கிறார்கள்.அதன் மூலம் மனித இனத்திற்கு பொதுவான நல்ல முடிவுகளைக் கண்டு மக்களின் நோய்களையும், உடல் குறை பாடுகளையும் நீக்குகிறார்கள்.அது போலவே டாக்டர் செம்கி போன்றவர்கள் சில ஆயிரம் மக்களின் உயிர் பற்றிய ஆய்வு முடிவுகளை வைத்து பல புதிர்களுக்கு விடை காண முயன்று வெற்றி அடைந்திருக்கிறார்கள். அவர்கள் முடிவுகளும் கருதுகோள்களும் விஞ்ஞான பூர்வமானவை.
மனிதன் ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.அது நாம் எல்லோரும் இந்த வாழ்க்கையை நாமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதுதான்.நாம் அறியாத போதும் இந்த வாழ்க்கை சூழலோடு நமக்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது.எனவே இந்த மேடையில் நாம் ஏற்றுக் கொண்ட பாத்திரத்தில் ஓர் ஆழமான அர்த்தம் உள்ளது.அதலால் நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட வாழ்வில் ஒரு பொறுப்புணர்வு நமக்குள் நுழைந்து விடுகிறது.இந்த உலக வாழ்க்கை என் மேல் திணிக்கப்பட்டுள்ளது.படைத்தவனுக்கு பொழுது போகாமல் இருக்கலாம் அதனால் என்னைப் படைத்து விளையாடுகிறான்.என்றெல்லாம் சொல்வதில் எந்தப் பொருளும் இல்லை.உலக வாழ்வின் மேடைகளை மனிதர்கள் உருவாக்குகிறார்கள்.பிறகு அதை மாற்றி அமைக்கிறார்கள். ஒரு நாள் தற்காலிகமாக மேடையை உடைத்துப் போடுகிறார்கள்.மீண்டும் புத்துணர்வோடு எல்லோரும் சேர்ந்து ஒரு காலகட்டத்தில் உலகம் என்ற மேடையை மீண்டும் நிர்மாணிக்கிறார்கள். இடை இடையே இறைவனையும் அதில் சேர்த்துக் கொள்கிறார்கள். கடவுள் எல்லையில்லா சக்தி படைத்தவர் அவர் ஏற்கச் சொன்ன பாத்திரத்தில் அவர் உருவாக்கிய உலக மேடையில் நான் ஒரு சாதாரண நடிகன் என்று பேசுபவர்கள் ஏராளம். ஆனால் இவர்கள் எல்லோரும் உண்மையில் தங்கள் விருப்படியே அனைத்தையும் செய்வார்கள்.இதனை நிரூபிப்பது மிக எளிது.உலக வரலாற்றை பார்த்தாலே இது உண்மை என்பது புரிந்துவிடும்.மனிதர்கள் பெரும்பாலும் முன்னோர்கள் வகுத்த நெறிமுறைகளையோ அல்லது ஒரு மதம் வகுத்த வழிகளிலோ உறுதியாக இருப்பதில்லை.அப்படி இருந்தால் உலகில் போர்களே நடக்காது.
இந்த உலகில் புதிதாக பிறக்கும் மனிதன் தூர் வரை வெட்டப்பட்ட மரத்தின் தண்டில் துளிர்க்கும் இலை போல உள்ளான்.அவன் பழைய விருப்பங்கள், லட்சியம் எல்லாம் அவனுடன் இருக்கின்றன.ஆனால் முதலில் அவனுக்கு அவை தெளிவாக இல்லை.அவன் இப்பிறவியில் முதலில் இருந்து தொடங்கி வரவேண்டி இருந்தாலும்,தூரும் வேரும் அப்படியே இருக்கின்றன.அவை மனிதனின் விருப்பங்களின் உறுதியைக் காட்டுகின்றன. அவன் தான் இருக்கும் சுழலுக்கு தகுந்தவாறு தன்னை தகவமைத்துக் கொள்கிறான். அவன் அடிப்படை அபிலாசைகள் லட்சியம் எல்லாம் வாழ்வின் ஒரு நிலையில் நிறைவேறுகின்றன.
“கிளைகள் எல்லாம் வெட்டப்பட்ட மரம் மீண்டும் எப்படி வளர்கிறது பாருங்கள்.அதன் உயிர் அழிக்கப்படாதவரை அது மீண்டும் வளரும்.அதே போல மனிதனின் திறன்களும் ஆற்றலும் இறப்பில் அவன் இதயத்திற்கு திரும்பி மறைந்து கொண்டாலும் அழிந்து போவதில்லை.இவ்வாறே உயிர்கள் மறு பிறவி எடுக்கின்றன”.
என்கிறார் ரமணமகரிஷி.
நன்றி : புதுப்புனல் புத்தாண்டு சிறப்புமலர் 2013 ஜனவரி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இயற்கை செயற்கை ரசவாதம்
பூமியின் மேல் பரப்பில் எங்கும் காணமுடியாத உயரமான மலையாக இமயமலை இருக்கிறது.மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாக நயகரா நீர்வீழ்ச்சி இருக்கிறது.உலகம் முழுவதும் பல மலைகள் உள்ளன.அவற்றில் அழகான வளமான மலைகள் நிறைய உள்ளன.ஆனால் அவற்றுள் இமயமலை முதன்மையானதாக இருக்கிறது.அது போலவே நயகரா நீர்வீழ்ச்சி அருவிகளுக்கெல்லாம் அரசியாக உள்ளது.இயற்கையின் படைப்பில் உள்ள அனைத்திலுமே மிகசிறந்த ஒன்று இருக்கும்.அது சிறந்த மலராக இருக்கலாம் அல்லது அழகிய பறவையாகவும் இருக்கலாம்.எல்லாமே தற்செயலாக நடந்தவை அல்லது நடப்பவை என்று நாம் கூறலாம்.அதே வேளையில் இயற்கை தான் வெளிப்படுத்துகின்ற சிறப்புத் தன்மைகளை ஒரு சில இடங்களில் குவித்து தன் உச்ச பட்சத் தன்மையைக் காட்ட முனைகிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது.அழகை மட்டுமல்ல இன்னும் பல தன்மைகளை அது ஓரிடத்தில் குவித்து அவற்றின் உச்ச நிலைகளை வெளிபடுத்த முனைகிறது.மற்ற மிருகங்களை வேட்டையாடி உண்ணும் ஒரு மிருகத்திடம் வலிமையும், விழிப்புநிலையும், சாதுர்யமும் வியத்தகு அளவில் மிக அதிகமாக இருப்பதற்கு காரணம் இயற்கை.இத்தன்மையின் தொடர்ச்சியாகவே பகுத்தறிவோடு கூடிய மனிதனை இயற்கை பரிணாம வளர்ச்சி மூலமாக உருவாக்கியுள்ளது.மனித இனமே அறிவாற்றலின் உச்ச நிலையைக் காட்டும் இயற்கையின் படைப்பு.இந்த மனித இனத்தில் ஒரு துறையிலோ சில துறைகளிலோ மிகப்பெரிய அளவில் வற்றாத திறனை வெளிப்படுத்தும் மனிதர்கள் இருக்கிறார்கள்.இயற்கை என்ற கலைஞனின் தலை சிறந்த படைப்புகளாகவே அவர்கள் இருக்க வேண்டும்.
மனிதன் மிருகத்திலிருந்து பரிணாம வளர்ச்சியினால் பகுத்தறியுள்ள மனிதனாக மாறி இருக்கிறான். அதற்கு முக்கிய காராணியாக இருந்தது மூளையின் அளவு. விஞ்ஞானிகள் கொரிலா குரங்குகளைத் தான் மனிதனின் மூதாதையர்களாகக் கருதுகிறார்கள்.பல லட்சம் ஆண்டுகள் தொடர்ந்த பரிணாம வளர்ச்சியில் அவற்றின் மூளை அளவைக் காட்டிலும் மனிதனின் மூளை அளவு பெரிதாகி இருக்கிறது.அறிவுத்திறன், கலைத்திறன் ஆகியவை மனிதர்களை மிருகங்களிடமிருந்து சரியாக வேறுபடுத்திக் காட்டுகின்றன.இவற்றில் அறிவுத்திறன் வளர்ச்சி மனித இன வரலாற்றில் முக்கியமான அதிசயத்தக்க திருப்புமுனை.ஏனென்றால் மனிதனின் அறிவாற்றல் வெளிப்பாட்டில் பூமி இதுவரை கண்டிராத வினோதமான ஒன்று முளைத்தது.அது இயற்கையிலிருந்து சற்று மாறுபட்டது.மனிதனோடு மட்டுமே தொடர்புடைய ஒன்று.அதுதான் செய்கை தன்மை.ஒரு குரங்கானது மழை தன் தலை மீது விழுவதைத் தவிர்க்க ஒரு பெரிய இலையை எடுத்து தலைமேல் வைத்துப் பிடித்துக்கொண்டால் அது செயற்கை அல்ல.ஆனால் ஒரு மனிதன் உலோகத்தாலும், துணியாலும் இன்னும் சில பொருள்களாலும் செய்யப்பட்ட ஒரு குடையைப் பிடித்துக்கொண்டு நடந்தால் அவன் செல்லும் பாதை செயற்கையின் பாதை.செயற்கைத் தன்மையைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளும் போதுதான் மனிதனின் அளப்பரிய அறிவாற்றலின் தன்மையை நுட்பமாக ஆராய முடியும்.
மனிதனின் அறிவு பெரும் வளர்ச்சி கண்ட போது மனமும் வளர்ந்து அதன் தேவைகள் விரிவடைந்து செயற்கைதன்மை அதிகமாக பரவியது.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு மனிதன் இந்த நவீன உலகத்திற்கு வருவதாக வைத்துக் கொள்வோம்.அவன் இது, தான் வாழ்ந்த உலகமே அல்ல என்று கூறுவான்.நாம் பயன்படுத்தும் கைக்கெடிகாரம் முதல் பயணிக்கும் வாகனங்கள் வரை எல்லாமே செயற்கையானவை.நாம் உண்ணும் உணவும் முழுக்க முழுக்க இயற்கையானது கிடையாது.செயற்கை நிறமிகள், தண்ணீரில் சேர்க்கப்படும் குளோரின் இவைகளைத் தவிர்த்து நம்மால் உண்ணவோ நீரைப்பருகவோ இயலாது.அந்த அளவுக்கு செயற்கைப் பொருள்கள் நம் வாழ்வில் கலந்துள்ளன.நாம் அணிகின்ற ஆடைகள் அவற்றில் உள்ள பொத்தான்கள்,வாசனை திரவியங்கள்,இன்னும் மருந்து மாத்திரைகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
மனிதன் இயற்கையின் படைப்பு.மனிதன் இயற்கையால் செதுக்கப்பட்டு உருவாக்கப்பட்டவன்.ஆகையால் மனிதன் கண்டுபிடிப்பது, உருவாக்குவது, உற்பத்தி செய்வது எல்லாம் இயற்கை என்று சிலர் வாதம் செய்யலாம்.அது மேம்போக்கானது.அதை ஏற்றுக்கொள்ள முடியாது.ஒரு மரம் விதையிலிருந்து வளர்கிறது.அது செடியாகி பின் வளர்ந்து கிளைகளைப் பரப்பி மரமாகிறது.திடீரென்று ஒருநாள் அதன் கிளைகளின் நுனியில் மின்சார விளக்குகள் ஒளிர்கின்றன என்று வைத்துக்கொள்வோம்.அந்த மின்சார விளக்குகள் மின் கம்பிகளை இணைத்து மின்சாரம் பாய்ச்சப்பட்டு எரியும் விளக்குகள் அல்ல.அவை மலர் போல கனிபோல கிளையில் முளைத்து எரியவும் செய்கின்றன என்று கற்பனை செய்வோம்.இப்படிப்பட்ட வினோத வளர்ச்சி தான் பரிணாமச் சங்கிலியின் தற்போதைய கடைசிக் கண்ணியாக இருக்கும் மனிதனால் வெளிப்படுத்தப்படுகிறது.மனிதன் சுவாசிப்பது உண்ட உணவு செரித்து இரத்தமாக மாறி உடலெங்கும் பாய்வது போன்று அனைத்தும் இயற்கையாகத்தான் நடைபெறுகின்றன.அதே வேளையில் மனிதனின் அதிசயத்தக்க அறிவாற்றல் அதன் விளைவுகள் இயற்கையிலிருந்து துருத்திக் கொண்டிருக்கின்றன.அவை மரத்தில் முளைத்த மின்சார விளக்கு பூக்கள் போல உள்ளன.இதை யாராலும் மறுக்க முடியாது.
செயற்கை, இயற்கை ஆகியவற்றின் வேறுபாடுகள் பற்றிய சந்தேகங்கள் நமக்கு எழுவதற்கு ஒரு அடிப்படைக் காரணம் உள்ளது.மனிதன் அறிவு வளர்ச்சியில் மிகுந்து மற்ற உயிரனங்களைவிட மேம்பட்டவனாக மாறினான்.அப்போது மனிதனிடம் முளைத்த பகுத்தறிவால் ஒரு விபத்து நிகழ்ந்தது. அது உலகம் என்பது முழுக்க முழுக்க மனிதனுக்குச் சொந்தமான இடம் என்ற கருத்து அவனிடம் ஆழமாக வேரூன்றியது தான். இது சிறிது சிறிதாக அவனை இயற்கையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க வைத்தது.தனக்கு கிடைத்த அபூர்வமான பகுத்தறிவின் மூலமாக எல்லாவற்றையும் ஆழமாக ஆராய்ந்து தொகுத்துப் பார்க்க வேண்டியவன் மனிதன்.அவன் மற்ற உயிரினங்களைக் காட்டிலும் இன்னும் தெளிவாக தான் இயற்கையால் படைக்கப்பட்டு அதனோடு எப்போதும் கலந்திருப்பவன் என்பதை உணர வேண்டியவன்.ஆனால் இவற்றிற்கு மாறாக அவன் சிந்தனையும் செயலும் எதிர் திசையில் சென்றது மிகவும் வியப்பான ஒன்று.மனிதன் பல வேளைகளில் முரண்டு பிடிக்கும் இயற்கையைக் கட்டியாளும் ஒரு எஜமானாகத் தன்னை எண்ணிக் கொண்டான்.அதை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு கொஞ்சம் வெற்றியும் கண்டான்.அப்போது முதல் முழுக்க முழுக்க தன்னை இயற்கையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கத் தொடங்கினான்.அங்கே எது இயற்கை எது செயற்கை என்ற ஐயப்பாட்டிற்கான விதை விதைக்கப்பட்டது.அது காலம் செல்லச் செல்ல சிறிது சிறிதாக வளர்ந்தது.பின்னர் விஞ்ஞான அறிவின் வியத்தகு வளர்ச்சி நவீன மனிதனை ஒரு பெரும் போதையில் தள்ளியது.அதில் அகந்தை கலந்த ஒரு வித புது ஆனந்தத்தை மனிதன் உணர்கிறான்.அதன் மயக்கத்தில் அவன் எண்ணத்தில் உதிப்பது ஒன்றுதான்.மனிதன் என்பவன் செயற்கையாக ஒரு பிரமாண்ட உலகத்தை இந்த பூமியில் படைத்த நவீன பிரம்மா.இது சிலரின் பிரகடனமாகக் கூட இருக்கலாம்.ஆனால் இது ஒரு வித மயக்கத்தில் வெளிவரும் வார்த்தைகள்.அதனால் மனிதன் ஒன்றை கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறி இருக்க வாய்ப்புள்ளது.பிரமாண்டமான கட்டமைப்பு வளர்ச்சியை ஏற்படுத்தி,மேலும் அது உலகம் முழுவதும் பரவுவதற்கும் வழிமுறைகளைக் காண்பவன் மனிதன்.இவற்றிற்கு என்றுமே குறையாத விருப்பங்களும், ஆவலும் கலந்த எரிபொருள் ஒன்று மனிதன் என்ற என்ஜினுக்குத் தேவை.அதை யார் அவனுக்கு தருவது?இயற்கை ஒன்றால் மட்டுமே மனிதனுக்கு அதை வழங்க முடியும்.ஏனென்றால் மனிதன் என்பவன் இயற்கையின் படைப்பு.இதுவே நவீன உலகின் வளர்ச்சி மயக்கத்தில் மனிதன் அடிக்கடி மறந்து போவது.
மனிதன் செயற்கையாக பலவற்றை உருவாக்குவதும் அதைக் கண்டு மகிழ்வதும் தானே விரும்பி கலந்து கொள்ளும் ஒரு வித விளையாட்டு.நீர் ஆவியாகி மேகமாக மாறுகிறது.அது நீராக விழும் போது துளிகளாக பூமியை நோக்கி வருகின்றன.இந்த நீர்த் துளிகள் தான் மனிதனும் அவன் சிந்தனகளும்.இயற்கையிலிருந்து புறப்பட்டு அறிவாற்றலில் உயர்ந்து மேகமாக திரண்டு இருக்கிறது மனித இனம்.அது துளியாக மாறும் போது தன்னை பூமியிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கிறது.அதே வேளையில் பயணிக்கிறது.அது மீண்டும் பூமியில் உள்ள நீரில் கலக்கிறது.அது போல மனிதனும் தன்னை வேறுபடுத்திப் பார்த்த தன் சிந்தனைகளோடு மீண்டும் மரணத்தில் இயற்கையோடு கலந்துவிடுகிறான்.அப்போது அவன் தன் ஆயுள் முழுவதும் வளர்த்த எண்ணங்களும் கருத்துகளும் அறிவுதிறன் வெளிபாடுகளும் வீணாவதில்லை.மழைத் துளியானது பூமியை நோக்கி வரும் போது மிக சிறிய அளவிலாவது வெப்பத்தாலும் காற்றாலும் கொஞ்சம் ஆவியாகி மிதக்கும்.அது போல உயர்ந்த மனிதர்களின் சிந்தனைகள் நிலைத்து அடுத்த தலைமுறைக்குச் செல்லும்.
ஒரு தெரு நாய் ரப்பர் துண்டு ஒன்றை மாமிசம் என்று தவறாகக் கருதி அதை விழுங்கிவிட்டு வயிற்று வலியல் அவதிப்படுகிறது.அதே தெருவில் ஒரு காகம் ஒரு மின்வயர் துண்டைக் கண்டெடுக்கிறது.அதைத் தன் கூட்டில் வைத்து அதை பலப்படுத்துகிறது.ஒரு சரணாலயத்தில் பார்வையாளர் ஒருவர் வீசிவிட்டுப் போன பாலித்தின் பையில் கொஞ்சம் உணவுப் பொருள் மிச்சம் இருக்கிறது.ஒரு குட்டியானை அதை தின்று அடுத்த நாள் சாலையோரம் இறந்து கிடக்கிறது.உயிரியல் பூங்கா ஒன்றில் அழிந்து வரும் இனத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி அபூர்வக் கரடிகள் உள்ளன.அதில் ஒன்று நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் கிடந்தது.மருத்துவர்களும், உதவியாளர்களும் அதற்கு சிகிச்சை அளித்தார்கள்.அது அதிசயத் தக்க வகையில் மறுவாழ்வு பெற்றது.அது மட்டுமல்ல சென்ற வாரம் ஓர் அழகிய குட்டியை ஈன்றிருக்கிறது.செயற்கைக்குத் தொடர்பில்லாத மிருகங்களும், பறவைகளும் மனிதன் உண்டாக்கிய செயற்கை உலகில் தங்களை தகவவமைத்துக் கொண்டு வாழத் தொடங்கி விட்டன.இதில் ஒன்றை இயற்கை மற்றொன்றை செயற்கை என்று பிரித்துக் காண்பது கொஞ்சம் சிக்கலான வேலை.நாம் கேட்கும் இசையில் இரண்டு இசைக்கருவிகள் இணைந்து ஒலிக்கின்றன.அந்த இசையை நாம் வாழும் வாழ்க்கையாக உணர்கிறோம்.இசையில் லயித்திருக்கும் போது இரண்டு இசைக்கருவிகளின் ஓசைகளை சற்று தனித்தனியாக நம்மால் கேட்க இயலும்.அது போல இந்த அவசர உலகில் இயற்கையையும்,செயற்கையையும் ஒருவரால் பிரித்து உணர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது.அப்படி இருந்தும் நாம் சில வேளைகளில் பூமியில் நடக்கும் எல்லாமே இயற்கை தான் என்று சொல்லத் துணிகிறோம். விஞ்ஞான பூர்வமான ஆதாரங்களுடன் மனிதர்களாகிய நாம் இயற்கையிலிருந்து வந்தவர்கள் என்று நிறுவுகிறோம். நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் இயற்கை ஆற்றலின் புதிய வடிவங்கள் தான் என்று வாதிடுகிறோம்.ஆனால் விண்ணில் சீறிப்பாய்ந்து செல்லும் ஒரு பிரமாண்டமான ராக்கெட்டைப் பார்க்கும் மனிதன் ஒருவனால் இவற்றை ஒப்புக்கொள்ள இயலாது.அவன் இதுவரை கொண்ட கருத்து அங்கே உடைந்து போகிறது.
ஒரு நிலையில் செயற்கை என்பது எது என்று உறுதியாகச் சொல்ல வேண்டிய கட்டாயம் மனிதனுக்கு ஏற்படுகிறது.குறைந்த பட்சம் இயற்கைக்கும், செயற்கைக்கும் உள்ள அழுத்தமான வேறுபாட்டையாவது சொல்ல வேண்டும்.பொதுவாக ஏதாவது ஒன்றைச் சொல்லி தப்பிக்க இயலாது. செயற்கை என்று அழைக்கபடுகின்றவைகளுக்குள் நிச்சயமாக ஏதோ ஒரு மாறுபட்ட விஷயம் அடங்கி இருக்கிறது.மனிதனின் வியத்தகு அறிவாற்றலுக்கும், அதற்கும் ஒரு முக்கியமான தொடர்பு இருக்கிறது.
மனிதனின் செயற்கை படைப்புக்கு, விமானம் ஒரு சிறந்த உதாரணம்.ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் உலகை பல கோடி ஆண்டுகளாக ஆட்சி செய்து கொண்டிருந்த டைனோசர் இனம் அழிந்து போனது.பல நூறு வகையான டைனோசர்கள் உலகம் முழுவதும் வாழ்ந்திருக்கின்றன.ராட்சத எரிகல் ஒன்று பெரும் வேகத்தோடு பூமியைத் தாக்கியது.அப்போது எழுந்த வெப்பத்தினாலும் அதன் பின் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பூமியை சூழ்ந்த தூசி,மேகப் படலத்தினாலும் டைனோசர் இனம் அழிந்து போனது.ஆனால் டைனோசர் இனம் அற்புதமான ஓர் எச்சத்தை பூமியில் விட்டுச் சென்றது.அது தான் பறவை இனம்.ஒரு சில விஞ்ஞானிகள் இந்த கருத்தை விவாதத்திற்கு உட்படுத்தினாலும், பறவைகளின் மூதாதையர்கள் டைனோசர்கள் தான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பூமியில் முதல் உயிர் சுமார் 300 கோடியாண்டுகளுக்கு முன்னால் தோன்றியது.ஒரு கணிசமான எடை உள்ள ஓர் உயிரினத்தை பரிணாம வளர்ச்சியில் பறவையாக உருப்பெற வைத்து வானில் பறக்கச் செய்ய இயற்கைக்கு கிட்டத் தட்ட 294 கோடி ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. வெறும் 45 லட்சம் ஆண்டுகள் புமியில் இருக்கும் அறிவாற்றல் மிக்க மனிதன் விஞ்ஞான வளர்ச்சி காரணமாக விமானத்தைப் படைத்துவிட்டான்.இதில் இயற்கை நிகழ்வுக்கும் செயற்கை என்று சொல்லப்படும் நிகழ்வுக்கும் இடையே உள்ள மெல்லிய வேறுபாடு அடங்கியுள்ளது.இயற்கை ஒன்றை நிகழ்த்திக் காட்ட எடுத்துக்கொள்ளும் கால அளவோடு ஒப்பிடும் போது மிக குறைந்த கால அளவில் அதை நிகழ்த்திக் காட்டுவது செயற்கை.மனிதன் சாதித்துக் காட்டிய இன்னும் சிலவற்றை ஆராய்ந்தால் கால அளவு இன்னும் மிகக்குறைவாக இருப்பதைப் பார்க்கலாம்.தாவரங்களிலும் மிருகங்களிலும் புது இனங்கள் இயற்கையில் உண்டாவதற்கு மரபணுவில் ஏற்படும் திடீர் மாற்றமே காரணம்.இதன் மூலமாகவே பூமி முழுவதும் பல வகை தாவரங்கள் பல வகை மிருகங்கள் எல்லாம் வந்தன.ஒரு தாவரத்தில் மியூட்டேஷன் அதாவது மரபணு மாற்றம் ஏற்பட்டு புதுவகைத் தாவரம் தோன்ற பல லட்சம் ஆண்டுகள் கூட பிடிக்கலாம்.ஆனால் அதை மனிதர்கள் மரபணுவியல் மூலம் ஒரு ஆராய்ச்சிக் கூடத்தில் ஒரு சில நாள்களில் நிகழ்த்திக் காட்டுகிறார்கள்.உலகில் இது வரை இல்லாத புதிய நிறத்தில் அதிக இதழ் அடுக்குகளோடு அழகிய புது ரக ரோஜாவைப் பூக்க வைத்துவிடுகிறார்கள்.மிருகங்களிலும் மரபணுமாற்றம் செயற்கையாக உண்டாக்கப்படுகிறது.அதன் முலமாக விஞ்ஞானிகள் தூரிகை எடுத்து ஓவியம் தீட்டுவது போல தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வண்ணங்களோடு அலங்கார மீன்களைப் பிறக்க வைக்கிறார்கள்.எனவே செயற்கை என்பது விரைவாக,விருப்பப்படி,வேண்டிய மாற்றங்களோடு மனிதனால் உருவாக்கப்படுவது.இதற்கு அணு விஞ்ஞானத்தில் நிகழ்த்திக் காட்டப்படும் சாதனைகள் சிறந்த சான்றுகளாக உள்ளன.
பிக்பேங் என்று சொல்லப்படும் மிகப் பெரிய வெடிப்பு வெளியில் நிகழ்ந்து பிரபஞ்சம் தோன்றியது.அதற்கு முன்னால் எங்கும் ஒரே இருள் மட்டும் இருக்கவில்லை. அங்கு ஹைட்ரஜன், ஹீலியம் ஆகியவற்றின் மூலக்கூறுகள் நிறைந்திருந்தன.மிக அதிகமான அடர்த்தியுள்ள பொருள்கள் அதிக வெப்பநிலையில் சிறிய அளவில் கூடித்திரண்ட போது ஏற்பட்ட வெடிப்பில் பிரபஞ்சம் தோன்றியது என்பது விஞ்ஞானிகளின் கூற்று.அப்போது திரண்ட வாவு மேகத்தில் இருந்தவை ஹைட்ரஜனும் வாயுவும் கொஞ்சம் ஹீலியம் வாயுவும்.சூரியனில் நிகழ்வது அணுப்பிணைவு.நான்கு ஹைட்ரஜன் அணுக்கருக்கள் மித மிஞ்சிய வெப்பத்தில் இணைந்து ஒரு ஹீலியம் அணுக்கருவாகும்.அப்போது மிகவும் அதிக மான அளவு சக்தி வெளிப்படும்.இதுவே அணுப்பிணைவு. இதனால் தான் சூரியன் மிதமிஞ்சிய ஒளியையும், வெப்பத்தையும் உமிழ்ந்து கொண்டே இருக்கிறது.ஒரு சூரியன் உருவாவதற்கு இயற்கை கற்பனை செய்து பார்க்க முடியாத காலம் காத்திருக்க வேண்டும்.ஆனால் இதை விஞ்ஞானிகள் உடனே நமக்கு நிகழ்த்திக் காட்ட முடியும்.பெரும் நாசத்தை விளைவிக்கக் கூடிய ஹைட்ரஜன் குண்டின் அடிப்படை அணுப்பிணைவுதான்.
செயற்கை அதிசயங்கள் காலத்தை குறுக்கி விடுகின்றன. வேகமாக செயலாற்றுவது செயற்கையின் இயல்பாக உள்ளது.செயற்கையாக அரிய செயலை செய்து காட்டுகின்ற மனிதனின் அறிவாற்றலும், திறனும் இதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன.அறிவுத்திறனும், ஆற்றலும் இயற்கையை விஞ்சும் வகையிலேயே வேகமாக வெளிப்படுகின்றன.விஞ்ஞானம் என்பது இயற்கையை கண்டுதெளிவது.அதாவது இயற்கையை வாசித்துப் பார்ப்பது என்ற ஒரு கருத்து பல காலமாக உள்ளது.கண்டுபிடிப்புகள் எல்லாம் இயற்கையின் இயல்பை வேறு ஒரு வடிவில் வெளிப்படுத்திக் காட்டுகின்றன என்பதையே அது நமக்கு உணர்த்துகிறது.அது ஒரு வகையில் உண்மைதான். ஆனால் செயற்கை என்று நாம் குறிப்பிடும் மனிதனின் செயல்கள் வியத்தகு அளவில் மிகக்குறைந்த கால அளவில் நிகழ்த்தப்படுகின்றன.இதுதான் இயற்கைக்கும் செயற்கைக்கும் உள்ள மிக நுட்பமான வேறுபாடு.இதனால் தான் மனிதன் காலப்பயணம் செய்யும் கற்பனையை விஞ்ஞான அடிப்படைகளோடு வளர்த்துக் கொள்கிறான்.காலப் பயணத்தில் பின்னோக்கி சென்று பழைய வரலாற்று நிகழ்வுகளைக் காண்பது,முன்னோக்கி சென்று வருங்கால உலகில் இப்போதே வாழ்வது போன்று பல கதைகள் உள்ளன. இவற்றில் உள்ள நுட்பமான விஞ்ஞானப் பார்வைக்கு முக்கிய காரணியாக இருப்பது மனிதனின் அறிவாற்றல் தான்.அது எப்போதும் குறுகிய காலத்தில் அதிசயங்களை நிகழ்த்திக் காட்டும் நோக்கத்தில் செயல்படுகிறது.
மனிதனின் தனித்துவம் மிக்க மிகச்சிறந்த அறிவாற்றலின் உச்சமாக இருப்பது கணிதவியல்.பல்லாயிரம் ஆண்டுளுக்கு முன்னரே மனிதன் இதனை வளர்த்து தன் திறனை வெளிப்படுத்தியுள்ளான்.இப்போது கணிதம் பல்கிப் பெருகி இருக்கும் எல்லாத்துறைகளிலும் இரத்தம் போலப் பாய்ந்து உயிர் தருகிறது.கணிதத்தில் மிகுந்த புலமை கொண்ட ஒருவர், ஆய்வில் தனக்கு இருக்கும் ஆர்வம் காரணமாக கணிதவியலில் புதியவற்றைப் படைக்க முடியும்.மனிதனின் அறிவாற்றல் திறன் வெளிப்பாட்டிற்கு இது மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.இந்தத் திறன் மனிதனுக்கே உரித்தான, மனிதனால் மட்டுமே வெளிப்படுத்தக் கூடியது.மனிதனாய் மாற்றம் அடைந்ததோடு மற்ற உயிர்களிடமிருந்து ஒரு வகையில் முற்றிலும் தனியாக பிரிந்து விட்டவன் மனிதன்.மனித இனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக இருப்பது அதன் கணிதத்திறன் தான்.மிக குறைந்த காலத்தில் இயற்கையின் இயல்புகளை நிகழ்த்திக்காட்டுவது நவீன மனிதன் அமைக்கும் செயற்கை அரசாங்கம்.அதன் செங்கோலாக இருப்பது கணிதவியல்.
அறிவாற்றல் பொங்கிப் பெருகி பிரவாகமாக மாறுவது தனிப்பட்ட மனிதர்கள் மூலமாகத்தான்.இதற்கு சரியான சான்றாக அழியாப்புகழ் பெற்ற கணித மேதை ராமானுஜன் இருக்கிறார்.அரிய மனிதர் ஒருவரிடம் அறிவாற்றல் திரண்டு வெளிப்படுகிறது.அதனை அவர் மிகச் சரியாக சாதனையின் உச்சம் நோக்கி செல்ல வைக்கிறார்.இவற்றைத்தான் நாம் ராமானுஜன் வாழ்க்கையைப் படிப்பதன் மூலமாக அறிகிறோம்.ராமானுஜன் முப்பத்திரண்டு வயதிலேயே இறந்து விட்டார்.ஆனால் அந்த குறைந்த காலத்தில் அவர் நிகழ்த்திய சாதனைகள் வேறு எந்த கணித மேதையும் செய்யாதவை. உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை தலை சிறந்த கணித மேதைகள் கொண்ட ஒரு பட்டியல் தயார் செய்தால் அதில் நூறுக்கும் மேலானவர்கள் இருப்பார்கள்.அதில் முதல் இருபத்தி ஐந்து மேதைகளின் பெயர்களுக்குள் ராமானுஜனின் பெயர் இடம் பெறும் என்பது பெருவாரியான கணித மேதைகளின் கருத்தாக இருக்கும்.
ராமானுஜன் தனக்கு சாதகமான ஒரு காலத்தை எதிர் நோக்கி இருக்கவில்லை.பள்ளி நாள்களிலேயே கணிதத்தில் தன்னை வேகமாக வளர்த்துக் கொண்டார்.தாமாகவே மேலைநாட்டு கணித நூல்களைக் கற்றார்.அதன் மூலமாக பல புதிய கணிதத் தேற்றங்களை உருவாக்குவதற்கு ஊக்கம் பெற்றார்.குடும்ப சூழல் காரணமாக சென்னை இந்திய துறைமுகக் கழகத்தில் குமாஸ்தாவாக பணியாற்றினார்.அதே வேளையில் கணிதவியல் பயணத்தை வெறியோடு தொடர்ந்தார்.1913 இல் அங்கு தலைமைக் கணக்கராக இருந்த எஸ்.என் ஐயர் ஒரு சிறந்த கணித வியலாளராகவும் இருந்தார்.1913 இல் அவர் ராமானுஜனின் பிரைம் எண்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார்.அதே ஆண்டு ராமானுஜத்திற்கு இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இருந்த கணிதவியலாளர் ஜி.ஹெச்.ஹார்டியின் நட்பு கிட்டியது.ராமனுஜன் இவருக்கு அனுப்பிய கடிதத்தில் தான் ஒரு குமாஸ்தாவாக பணியாற்றுவதாகவும்,பள்ளிக் கல்விமட்டும் தான் பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.மேலும் தனக்கு கணிதத்தின் மீது இருக்கும் தணியாத ஆர்வத்தின் காரணமாக தனக்கென கணிதத்தில் ஒரு பாதை அமைத்துக் கொண்டதாகவும் எழுதியிருந்தார்.அந்த கடிதத்தோடு தான் உருவாக்கிய நூற்றுக்கும் அதிகமான தேற்றங்களையும் அனுப்பி வைத்தார்.முதலில் ஹார்டி இவைகளைப் பார்த்தவுடன் சந்தேகம் அடைந்தார்.அவை வேறு ஒருவருடையவைகளாக இருக்கும் என்று எண்ணினார்.ஆனால் தேற்றங்களை முழுமையாக ஆராய்ந்தவுடன் நிச்சயமாக அனுப்பியவர் ஒரு மேதை என்பதை உணர்ந்து கொண்டார். அனுப்பப்பட்ட தேற்றங்களில் பல முற்றிலும் புதியவை என்று கடிதம் மூலம் ராமானுஜனுக்குத் தெரிவித்தார்.பிறகு 1914 இல் ராமனுஜனை இங்கிலாந்துக்கு வரவழைத்தார். அப்போது ராமானுஜனுக்கு கணிதத்தில் அடிப்படை கல்வி முழுமையாக இல்லாததால் அதனை போதிக்கும் பணி லிட்டில் உட் என்பவரிடம் தரப்பட்டது. கணிதவியலாளர் லிட்டில் உட், ராமானுஜனுக்கு கடினமான கணிதமுறைகளை பயிற்றுவித்த அதிசய அனுபவத்தை பற்றி ஹார்டி இவ்வாறு கூறுகிறார்
“ ராமானுஜனுக்கு சொல்லித் தருவது லிட்டில் உட்டுக்கு மிகக்கடினமாக இருந்தது.ஒரு புதிய விஷயத்தை கட்டாயம் அவர் அறிந்து கொள்ள வேண்டும் என்று எந்த நேரத்தில் குறிப்பிட்டாலும் அது தொடர்பான ராமானுஜனின் சொந்த சிந்தனைகள் கட்டுக்கடங்காமல் பொழியத் தொடங்கிவிடும்.இதனால், தான் சொல்ல நினைத்ததை வலியுறுத்துவது லிட்டில் உட்டுக்கு மிகக்கடினமாக இருந்தது.”
ராமானுஜன் ஒரு கணிதக் கடல் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.1915 இல் கேம்பிரிட்ஜ் பலகலைக்கழகத்தில் ராமானுஜன் விஞ்ஞான இளங்கலைப் பட்டம் பெறுகிறார்.துரதிருஷ்டவசமாக 1917 இல் அவர் கடுமையாக காச நோயால் பாதிக்கப்படுகிறார்.இந்நிலையில் அவருக்கு 1918 கேம்ப்ரிட்ஜ் ஃபிலசொஃபிகல் சொசைட்டியில் ஃபெல்லோஷிப் வழங்கப்படுகிறது.அந்த வருடத்திலேயே ஹார்டி, லிட்டில் உட் போன்ற பல சிறந்த கணித வியலாளர்களின் பரிந்துரையின் பேரில் லண்டன் ராயல் சொசைட்டியிலும் மிகக் கௌரவமான ஃபெல்லோஷிப் வழங்கப்படுகிறது.அதன் பிறகு கேம்ப்ரிட்ஜ் ட்ரினிட்டி கல்லூரியில் அவருக்கு ஃபெல்லோஷிப் வழங்கப்படுகிறது.ஓரளவு உடல் நலம் தேறிய ராமானுஜன் 1919 இல் இந்தியா திரும்பி, 1920 இல் இறந்து விடுகிறார்.ஆறாம் நூற்றாண்டிலேயே பூமியின் சுற்றளவை கணக்கிட்டுச் சொன்ன மாமேதை ஆரியபட்டா. பனிரெண்டாம் நூற்றாண்டில் கணிதத்தில் பல சாதனைகளைச் செய்தவர் கணித மேதை பாஸ்கரா.அவர் நிகழ்த்திய அதே சாதனைகள் பல நூற்றாண்டுகள் கழித்து புதிய கண்டுபிடிப்புகள் போல ஐரோப்பாவில் பல மேதைகளால் மூலம் வெளிப்பட்டன.பாஸ்கராவின் ஆய்வுக்குறிப்புகள் பல ஐரோப்பாவில் ரகசியமாக கசிந்து விட்டன என்று ஆய்வாளர்கள் இப்போது கருதுகிறார்கள். ஆரியபட்டா, பாஸ்கரா போன்ற இந்தியக் கணித மேதைகளின் வழித்தோன்றலாக உதித்த ராமானுஜன் அவர்களையும் விஞ்சி கணித உலக வரலாற்றில் நிலைப்பார்.
ராமானுஜன் 1914 இல் இருந்து 1920 க்குள் ஆறு வருடங்களில் கணிதவியலில் தன் அரிய மேதமையை உலகிற்கு நிரூபித்துவிட்டார்.அதனால் தான் ஹார்டி
“ ராமானுஜன் இந்தியாவில் இத்துறையில் யாரும் அடையாத புகழோடு இந்தியா திரும்புகிறார்.இவர் இந்தியாவின் பொக்கிஷம்…” என்றார்.
மேதைகளாக பலர் உலகில் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள்.அந்த மேதைகளின் அறிவுத் தாகமும் அவர்கள் தங்கள் தனித் திறனை வெளிப்படுத்தும் வேகமும் இயற்கை அதிசயங்களுக்கு ஒப்பானவை.மிதமிஞ்சிய அறிவாற்றல் தனித்தன்மையோடு பொங்கி வருவதற்கு ராமானுஜனின் கணிதத்திறன் சான்றாக இருக்கிறது.கல்லூரிக் கல்வி பெறாத காலத்திலேயே மிகக்கடினமான அரிய கணிதத் தேற்றங்கள் அவரிடமிருந்து ஊற்றெடுத்து வெளிப்பட்டன.இன்னும் சரியாகச் சொன்னால் மிக இயல்பாக இயற்கையாக அவரிடமிருந்து திறன் பொழிந்து கொண்டிருந்தது.முழுக்க முழுக்க மனிதனால் வளர்க்கப் பட்ட செயற்கை அறிவாற்றலோடு நுட்பமாக இயற்கை இணைவதை நாம் அங்கே காணமுடிகிறது.
நன்றி : கவ்யா - தமிழ் ஜனவரி – மார்ச் 2013
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அறியாத வாழ்வியல் மேதமை
ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு இந்த உலகமே தன் கைகளில் இருப்பது போல நினைப்பது அறியாமை.அதற்கு கொஞ்சமும் குறைவானதல்ல இந்த உலக வாழ்க்கை போலியான ஒன்று என்ற எண்ணம்.உண்பது, உறங்குவது, ஆணும் பெண்ணும் கூடி மகிழ்வது, வாழ்நாள் முழுவதும் பொருளீட்டுவது, பின் ஒரு நாள் இறந்து இந்த உலகை விட்டு மறைவது. இவை தானே வாழ்க்கை என்பது.இதற்காக மனிதன் என்னவெல்லாம் செய்கிறான்?உடலை வருத்தி உழைக்கிறான்.சிலநேரங்களில் அவமானப் படுகிறான்.எந்த நேரமும் ஆபத்து இருந்தும் கொடிய உள்ளம் படைத்தவர்களோடு வாழ்கிறான்.இப்படி கஷ்டத்தோடு வாழ்வதை விட கிடைத்த உணவை உண்டுவிட்டு ஒரு தனி இடத்தில் இருந்து மாண்டு போகலாம்.ஒவ்வொரு நாளும் மனிதன் செய்கின்ற காரியங்களை எண்ணிப் பார்த்தால் ஓர் அடி முட்டாளுக்கும் அல்லது ஒரு பைத்தியக்காரனுக்கும் அவனுக்கும் எந்த வேறுபாடும் இருக்காது.
மகிழ்ச்சியாக ஒரு நாள் விருந்து சாப்பிட்டு விட்டு சிலர், பத்து நாள்களுக்கு உடல் நலம் கெட்டு,அதற்காக மருந்து சாப்பிடுவார்கள்.நாம் ஆடைகளை பல நிறங்களில், பல வடிவங்களில் காலத்திற்கு ஏற்ப உருவாக்கி துன்பத்தையே வரவழைத்துக் கொள்கிறோம்.ஆடைகளை துவைத்து இஸ்திரி போட்டு அடுக்கி வைத்துக் கொள்கிறோம்.அவை எப்போதும் தற்கால நாகரிகத்தோடு ஒத்து இருக்க வேண்டும்.கொஞ்சம் மாறி இருந்தாலும் பார்ப்பவர்கள் நகைப்பார்கள்.அதனால் சில ஆடைகள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி விடுகிறோம்.ஆனால் அப்படி பழையது என்று ஒதுக்கப்பட்ட ஆடை இருபது வருடங்கள் கழித்து நவீன ஆடையாக மீண்டும் வருகிறது.இது என்ன பேதமை என்ற எண்ணமே அடி மனதில் எழுகிறது.
சிலருடைய வாழ்க்கை இன்னும் முட்டாள்தனமாக நமக்குத் தோன்றுகிறது.கோதை அந்த உயிரியல் பூங்காவில் தான் பல காலம் பணியாற்றுகிறாள்.அவள் தினமும் சிங்கங்களின் கூண்டையும், புலிகள் இருக்கும் கூண்டயும் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.அவைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும்.ராதிகா என்ற பெண்புலி உயிரியல் பூங்காவிற்கு வந்து இப்போது நான்கு மாதங்கள் ஆகி விட்டன . அது மேற்கு வங்காளத்திலிருந்து கொண்டு வரப்பட்டது.முதல் இரண்டு நாள்களுக்கு அது மற்ற எந்த புலியுடனும் சேராமல் தனியாகக் கிடந்தது. உணவை வைத்தால் அதன் அருகில் கூட வராமல் இருந்தது.மூன்றாவது நாள் கோதை எப்படியும் அதை உணவு உண்ண வைத்து விடுவாள் என்று பூங்காவில் இருந்த அனைவரும் நினைத்தார்கள்.
மூன்றாம் நாள் கோதை வேலைக்கு வரவில்லை.மற்ற உயிரியல் பூங்கா பணியாளர்களுக்கும், மேலாளருக்கும் என்ன செய்வதென்று தெரிய வில்லை.அன்று கோதை விஷ ஜுரத்தால் பாதிக்கப்பட்ட தன் சகோதரியை அழைத்துக் கொண்டு பொது மருத்துமனைக்குச் சென்றிருந்தாள்.அடுத்த நாள் வேலைக்கு வந்த கோதை ஒரு மணி நேரத்தில் ராதிகாவை, மாட்டு இறைச்சி உண்ண வைத்தாள்.ஒரு வாரத்தில் , கூண்டை சுத்தம் செய்யும் போது அதன் அருகில் போய், தடவிக் கொடுக்கும் அளவிற்கு அதனோடு பழகிவிட்டாள்.
மிருகங்களைப் பார்க்க வரும் மக்களுக்கு அவற்றைப் பராமரிப்பவர்களின் கஷ்டம் புரியாது.அவர்கள் எத்தகைய ஆபத்தான வேலையை மேற்கொள்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.அதைப் பார்ப்பவர்கள் நிச்சயமாக அது ஒரு பைத்தியக்காரத்தனமான வேலை என்றே சொல்வார்கள்.கோதை மற்ற பணியாளர்களிடம் சொல்வாள்
“என் கணவன் இறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன.எனக்கு ஒரு மகன் இருக்கிறான்.அவனும் இங்கு என்னோடு தான் இருக்கிறான். இந்த மிருகங்களைப் பராமரிக்கும் வேலையை விரும்பி ஏற்றுக் கொண்டான். என்னிடம் பலர் அதைப்பற்றி குறைபட்டுக் கொள்வார்கள்.ஆனால் நான் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.ஏனென்றால் நான் இந்த இடத்தில் இருக்கும் மிருகங்களை எல்லாம் என் குழந்தைகளாகவே நினைக்கிறேன்.அப்படி இருக்கும் போது நான் பெற்ற மகன் அவைகளோடு பழகுவதை எப்படித் தடுப்பேன்?”
அன்று காலை போலீஸார் சிலர், புலிக் கூண்டினருகே நின்றிருந்தார்கள்.உயிரியல் பூங்கா முழுவதும் பரபரப்பாக இருந்தது.காவலாளி ஒருவன் போலிசாரிடம் சொன்னான்
“எப்போதும் போலத்தான் அந்த அம்மா புலிக் கூண்டை சுத்தம் செய்யப் போனார். புதிதாக வந்த புலி என்ன நிலையில் இருந்ததோ தெரியவில்லை. தீடீரென அது அவர் மேல் பாய்ந்தது. கீழே சாய்ந்த அவர் கழுத்தை கடித்துக் கொன்று விட்டது.”
இங்கே நாம் விவாதிப்பது எல்லோருடைய பணிகளும் ஆபத்தில்லாமல் நல்ல ஒரு சூழலில் இருக்க வேண்டும் என்ற பொதுவான கருத்தைப் பற்றியதல்ல. நாம் காண முற்படுவது உண்மையில் சிலருடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது, அதை அவர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள், மற்றவர்களின் பார்வையில் அது எப்படி தென்படுகிறது, போன்றவைகளைத்தான்.
சூதாட்டத்தின் கடைசி சுற்று என்பது போல ஒரு பெரும் தொகையைத் திரட்டி ஒரு தொழிலில் முதலீடு செய்து விட்டு பின் தோல்வியில் நிரந்தரமாக ஓய்ந்து போகிறவர்கள் ஏராளம்.அவர்கள் அதற்கு முன் பல கடுமையான சோதனை முயற்சிகளை செய்து வெற்றியடைந்தவர்கள் தான்.ஆனால் ஒரு முறை பெரும் வீழ்ச்சியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை அமைந்து விடுகிறது.அவர்களில் சிலர் தங்களை மாய்த்துக் கொள்ளத் துணிவதும் உண்டு.அத்தகையவர்களின் சதுரங்க விளையாட்டு சூழலுக்கும்,கொடிய விலங்குகளோடு பணிசெய்யும் பெண்ணின் நிலைக்கும் அதிக வேறுபாடு இல்லை.பொருளற்ற வாழ்க்கை என்று எதுவும் உலகில் கிடையாது.பார்ப்பவர்களும், விமர்சிப்பவர்களும் புரிந்து கொள்ள முடியாத ஒன்று சிலர் வாழ்க்கையில் இருக்கிறது.ஏனென்றால் அது வாழ்பவர்களால் உணரப்படுவது.அங்கே பேதமை, சாமர்த்தியம் ஆகியவை பற்றிய ஆய்வுகளுக்கு அதிக இடமில்லை.அங்கே இருப்பது ஒன்று தான் அது வாழ்வின் அனுபவம்.
இந்த உலகில் வெவ்வேறு வாழ்க்கை முறைகளைக் கொண்ட மக்கள் இருக்கிறார்கள்.அவர்களில் வாழ்வை முழுவதுமாக உணர்ந்து கொண்டவர்கள் யாருமில்லை.அனைவருக்கும் பொதுவான ஒரு வாழ்க்கை முறையை ,நெறிகளை யாராலும் உருவாக்க முடியாது.மாறிக் கொண்டே இருக்கும் இந்த உலகில் ,செம்மையான, சிறிதும் தடுமாற்றம் இல்லாத , நிரந்தரமான வாழ்க்கை முறை ஒன்று இருக்க வாய்ப்பே இல்லை.மனிதர்கள் அனைவரும் போற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றும் மக்களை உலகமெங்கும் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்.ஏனென்றால் அப்படி ஒரு வாழ்க்கை முறை இருக்கவே முடியாது.அனைவரின் வாழ்க்கை நிலையும் அதுதான்.அதனால் பிறருடைய ஜீவிதத்தை நாம் எவ்வகையிலும் குறை கூற இயலாது.
உண்மையில் எல்லோருடைய வாழ்க்கைக்குள்ளும் நிறைவு என்ற அழகு இருக்கிறது.எல்லாவற்றையும் தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்ட தரக்கட்டுப்பாட்டுடன் பார்க்கும் கண்களுக்கு அனைத்துமே முட்டாள்த்தனமாக, அர்த்தமற்றவைகளாகவே தெரியும்.மனிதனின் மகிழ்ச்சியையும், நிம்மதியான வாழ்வையும், அடிப்படையாக அல்லது நோக்கமாகக் கொண்டே வாழ்க்கை முறைகள் உண்டாயின.உலகின் ஓரிடத்தில் கடை பிடிக்கப்படும் வாழ்க்கை முறையானது பூகோள அமைப்பில் தொடங்கி இன்னும் பல வகையான காரணிகளின் பாதிப்பால் உருவாக்கப்படுவது.அவற்றை சரியாக புரிந்து கொள்ளாதவரை பலருடைய வாழ்க்கை முறை நமக்கு நகைப்புக்கு உரியதாகவும்,கிறுக்குத்தனமாகவும் தெரியும்.
மகாபாரதத்தில் வருகின்ற முக்கிய பாத்திரம் பாஞ்சாலி.அவள் ஐந்து சகோதரர்களுக்கும் மனைவியானதற்கு இதிகாசமும், புராணக்கதைகளும் கூறுகின்ற காரணங்கள் ஒருபுறம் இருக்கட்டும்.அந்தக் கதையைப் படிக்கும் போது ,ஒரு பெண் பல ஆண்களை மணந்து கொள்ள சம்மதிப்பது சாத்தியம் தானா என்ற கேள்வி எழுகிறது.மத்திய ஆசியாவிலிருந்து இடம் பெயர்ந்த ஆரியர்கள் கி.மு.1500 வாக்கில் இந்தியாவிற்கு முதல் முறையாக நுழைந்தார்கள்.மாக்ஸ் முல்லர்[1823-1900] போன்ற பெரும் மொழிஇயலாளர்களும் பல சரித்திரவியலாளர்களும் இதை ஒப்புக் கொள்கிறார்கள். 1920 இல் ஹரப்பா நகரமும் அடுத்த ஆண்டு மொகன்ஜதாரோவும் இப்போதைய பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டன. பல தொல்லியல் ஆதாரங்கள், ஆரியர்களின் வருகையை நிரூபிப்பவைகளாக உள்ளன.ஓர் ஆண் பல பெண்களை மணப்பதும்,சற்று அரிதாக ஒரு பெண் பல ஆண்களை மணக்கும் பழக்கமும் ஆரியர்களிடம் இருந்திருக்கின்றன.அவர்கள் இந்தியவிற்குள் நுழைவதற்கு முன் தொடங்கிய நெடிய பயணத்தில் அதிகமாக பெண்களை அழைத்து வர இயலவில்லை.ஆதலால் ஒரு பெண் பல ஆண்களை மணக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம்.பாஞ்சால நாட்டின் இளவரசியான திரௌபதியை சுயம்வரத்தில் நடந்த போட்டியில் வென்றவன் அர்ஜுனன்.அவனுக்கு மட்டுமே அவள் மாலையிடுகிறாள்.அவள் அவனுடைய சகோதரர்களுக்கும் மனைவியாக சம்மதித்ததன் காரணம் அக்காலத்தில் குறைந்து கொண்டு வந்த ஒரு சமுதாய வழக்கமாக இருக்கலாம்.
இதிகாசங்களும், புராணங்களும் கற்பனை கலந்து எழுதப்பட்டாலும் வரலாறு அவற்றிற்குள் மறைந்திருக்கிறது.அக்காலத்தில் இருந்த ஒரு வழக்கத்தின் எச்சமே திரௌபதி ஐவருக்கு மனைவியானதாக மகா பாரதத்தில் பதிவாகியுள்ளது.ஆனால் மேம்போக்கான பார்வையில் ஒரு பெண் ஐவருக்கு மனைவியாவது வக்கிரமாகத் தோன்றுகிறது.அதுபோலவே உலகில் பல்வேறு வகையான வாழ்க்கை முறைகள் பல காலகட்டங்களில் பலவகை மக்களிடையே இலங்குகின்றன.அவற்றில் சிலவற்றை பேதமை என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை.
பண்பாடு, பழக்கவழக்கங்கள் எல்லாமே மனிதனின் நல்வாழ்விற்காக சேர்த்தும், கழித்தும் பார்த்து உருவாக்கப் பட்டவைகளின் தொகுப்புகள் தான்.அவற்றில் எல்லாமே எக்காலத்திலும் நன்மை பயப்பவைகளாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை.பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கிய தொழில் புரட்சி உலகை சொர்க்கமாக மாற்றும் என்று எல்லோரும் நம்பினார்கள். ஆனால் அதனோடு அசுர வளர்ச்சியடைந்து பரவலான விஞ்ஞான முன்னேற்றம் ஒரு வகையில் உலகுக்கு இப்போது ஒரு சாபமாக காட்சியளிக்கிறது. எல்லவற்றையும் தொகுத்து எதனையும் அலட்சியம் செய்யாத பார்வையே அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
கடற்கரையை அசுர வேகத்தில் வந்து தாக்குகின்ற பேரலைகளால் வருகின்ற பாதிப்பு இந்திய மக்களைப் பொறுத்தவரை புதியது.சில ஆண்டுகளுக்கு முன்னால் அத்தகைய பேரழிவை இந்தியாவின் தென் பகுதி சந்தித்தது.நில அதிர்வுகளை அறிந்து பதிவு செய்கின்ற கருவிகளும், இயற்கையின் போக்கை துல்லியமாக கண்டறியும் செயற்கைக் கோள்களும் நிறைந்த நவீன யுகத்தில் நாம் இருப்பதாக எண்ணி பெருமிதம் கொள்கிறோம்.ஆதலால் அந்தமான் போன்ற தீவுகளில் இன்னும் அடர்ந்த காடுகளுக்குள் வாழும் ஆதி மனிதர்களின் வாழ்க்கை நமக்கு வியப்புக் குரியதாக உள்ளது.எழுதப் படிக்கக் கூட தெரியாத ஆதிவாசிகள் கடலில் பொங்கி வரும் நுரையின் தன்மையை வைத்தே சுனாமி என்ற பேரலைகள் வரப்போவதை அறிந்து கொள்ளும் திறன் படைத்தவர்கள்.அதனால் அந்தமானிலும் அதைப் போன்ற இன்னும் பல தீவுகளில் வாழும் ஆதிவாசிகள் சுனாமி வருவதை முன்னமே அறிந்து வனத்தின் மையப் பகுதிக்கு பாதுகாப்பாக சென்று விட்டார்கள்.அவர்களில் யாருமே பாதிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை.
நாகரிக வளர்ச்சியடைந்து விட்டதாக எண்ணி பெருமைப்பட்டுக் கொள்ளும் நம்மால் அலட்சியமாகப் பார்க்கப்படும் அந்த ஆதிவாசிகளின் வாழ்க்கை முறை இயற்கையோடு கலந்தது. இயற்கையை நேசிப்பதோடு அதனை நெருங்கி தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பது.சுனாமி தாக்கிய போது அந்தமான் தீவின் கடற்கரையில் மக்களைக் காப்பாற்ற முடியாமல் அரசு அதிகாரிகளும், ராணுவத்தினரும் திணறினர்.சிலர் எல்லாம் முடிந்த பிறகு ஹெலிகாப்டர் ஒன்றில் ஆதிமனிதர்கள் வாழும் பகுதியில் சுற்றி வந்தார்கள்.அவர்கள் ஆதிவாசிகளின் நிலை என்னவென்று அக்கறையோடு அறிந்து உலகத்துக்குச் சொல்லப் புறப்பட்டவர்கள்.அங்கே அவர்களுக்கு வித்தியாசமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த ஆதிவாசிகள் நலமாக இருந்ததோடு தங்களை ஏன் சிலர் தொந்தரவு செய்கிறார்கள் என்று சினெந்தெழுந்தார்கள்.
தீவு ஒன்றைச் சுற்றி நோட்டமிடப் பறக்கும் ஹெலிகாப்டரின் படம் ஆங்கில நாளிதழ்கள் உட்பட எல்லா நாளிதழ்களிலும் வெளியானது.அந்தப் புகைப்படத்தின் சிறப்பு என்னவென்றால் ஹெலிகாப்டருக்கு அருகில் நிலத்தில் தெரிந்த ஒரு ஆதிவாசியின் நிழல்.அதில் அந்த மனிதனின் கையில் விடுவதற்கு தயாராக இருந்த அம்பும் வளைக்கப்பட்ட வில்லும் தெளிவாகத் தெரிந்தன.இதில் கவனிக்க வேண்டிய அம்சம், துளியும் அச்சம் இல்லாமல் நிமிர்ந்தபடி, தடுமாற்றமின்றி, அற்புதமாக ஹெலிகாப்டரை குறிவைத்துக் கொண்டு நிற்கும் அந்த மனிதனின் நிலைதான்.இது எத்தனை பேருடைய கவனத்தை ஈர்த்தது என்று தெரியவில்லை.ஆனால் அந்த நிழல் தெளிவாக ஒரு செய்தியை உலகுக்கு அறிவிக்கிறது.வில்லை வளைத்து குறிபார்ப்பவன் ஒரு வேற்று இன மனிதனையோ அல்லது ஒரு கூட்டத்தை நோக்கியோ அம்பைச் செலுத்த முனையவில்லை.ஹெலிகாப்டரில் பறந்து வரும் நவீன உலகத்து மனிதர்களை அவன் எதிர்க்கிறான்.அவனைப் போன்ற மனிதனுக்கு மிரட்சியைத் தரக்கூடிய ஓசையுடன் பறந்து வட்டமிடுகிறது ஓரு ஹெலிகாப்டர்.அவன் அதை நோக்கி துணிவோடு தன்னுடைய நம்பிக்கையைத் திரட்டி தாக்க முற்படுகிறான்.
“சுற்றுச் சூழலையும் பண்பாட்டையும் அழிக்கும் வாழ்க்கை முறை உங்களோடு இருக்கட்டும்.எங்களுடைய நிம்மதியைக் குலைக்காதீர்கள்.எங்கள் இடமும் வாழ்வும் உங்களுடையவைகளை விட எந்தவகையிலும் தாழ்ந்தவைகளோ, ஏளனத்திற்குரியவைகளோ அல்ல”
என்று தெளிவாக அறிவிக்கும் பிரகடனமாக அந்தப் புகைப்படம் இருக்கிறது.
சிலர் தங்களுக்குப் பிடித்தவர்களின் நினைவாக பாதுகாத்து வைத்துக் கொள்கின்ற சில பொருள்கள் நமக்கு சிரிப்பை வரவழைக்கலாம்.ஆனால் அவர்களைப் பொறுத்தவரை அவை உலகில் விலைமதிக்க முடியாதவைகள்.அவை காதலினால் மட்டும்தான் சேர்த்து வைக்கபட வேண்டும் என்ற அவசியமில்லை.அன்பு, பாசம், நட்பு என்று எத்தனையோ உணர்வுகளின் குறியீடுகளாக அந்தப் பொருள்கள் இருக்கலாம்.ஆனால் அவற்றின் சிறப்பு சம்பந்தப்பட்ட நபர்களுக்கே புரியும்.பல தரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை முறைகளையும் நம்பிக்கைகளையும் நாம் அவ்வாறே பார்க்க வேண்டியுள்ளது.
உலகில் எல்லாவற்றிற்கும் நம்மால் உடனே அர்த்தத்தை கண்டுவிட முடியாது.அதனால் அவை எல்லாம் பொருளற்றவை என்று புறக்கணிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. உலகில் பல தரப்பட்ட வாழ்க்கை முறைகள் இருக்கின்றன. அவற்றை அறிந்து கொண்டால் மட்டும் போதாது ,வாழ்ந்து உணர்ந்தால்தான் அவை மற்றவர்களுக்கு முழுமையாகப் புரியும்.வாழ்க்கை என்பதன் நோக்கம் மனிதர்கள் அனைவரையும் அறிவு ஜீவிகளாக மாற்றுவதல்ல.அது மற்றவர்களைப் புரிந்து கொள்ள முற்படுவது.மேலும் தன்னையும் தன் நல்வாழ்வையும் அவர்களோடு முடிந்தவரை பகிர்ந்து கொள்வது.இது எண்ணற்ற விருப்பங்களையும் கருத்துகளையும் கொண்ட பரந்த உலகம்.அவற்றில் உள்ள அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்பது ஆரோக்கியமானது.அங்கே வாழ்வின் தேக்க நிலை உடைந்து போகிறது.
“மக்களிடம் செல்லுங்கள்,அவர்களோடு வாழுங்கள்,அவர்களிடம் இருந்து அறிந்து கொள்ளுங்கள்,அவர்களுக்கு தெரிந்தவற்றில் இருந்து தொடங்குங்கள்,அவர்களிடம் உள்ளவற்றை மேம்படுத்துங்கள்…”
என்கிறார் சீனாவின் ஞானி லாஉட்சா [Lao Tzu]
பல விதமான கருத்துகளை, நம்பிக்கைகளை அறிந்து கொள்ளும் மனிதனிடம், எப்போதும் நேசத்தின் இழையோடி இருக்க நகர்கிறது வாழ்க்கை.வானத்தின் பல்வேறு வண்ணங்கள் ஒப்பனை அல்ல; மாற்றத்தை ஏற்கும் வாழ்வின் ஒப்பற்ற அழகு.
~~~~~~~~~~~ ~~~~~~~~~~ ~~~~~~~~~~~
எல்லோர் மனதிலும் உள்ள கேள்வி
ஒருவாறு வாழ்கைக்குள் அர்த்தம் உள்ளது என்பதை உண்ர்ந்து பயணத்தை தொடர்ந்த போதும் இறுதியாக ஒரு கேள்வி மனதில் நிற்கிறது.வாழ்க்கை ஏன் எப்போதும் கடினமாக தென்படுகிறது?இதற்கு யாரும் விதி விலக்கு இல்லை.படிப்பதற்கும் எழுதுவதற்கும் ஒன்று வாழ்வில் உண்மையாக காண்பது வேறு ஒன்று என்ற நிலையை மாற்றி இரண்டுக்குமான இடை வெளியைக் குறைக்க வேண்டும்.அப்போது தான் இந்தக் கேள்விக்கு விடை காணவியலும்.ஒருவர் வாழ்க்கையில் எந்த நிலையில் இருந்தாலும் அவர் எப்போதும் தன்னோடு போராடுபவராகவே இருக்கிறார்.அதனால்தான் வாழ்க்கை எப்போதும் கடினமாகத் தோன்றுகிறது.ஒருவர் தன்னை எந்த கவலையும் இல்லாதவராக காட்டிக்கொள்வதன் முலம் அவர் தன்னை ஏமாற்றிக் கொள்கிறார்.இது ஒரு வகையான கனவு உலகம்.அங்கிருந்து அவரால் ஒரு அடி கூட, தன்மனஆழுமையில் முன்னேற முடியாது.கடினம் என்பதை ஏற்பதுதான் விவேகம்.இப்படி அதனை ஏற்பது நம்மை தெளிவான ஆய்வுப்பாதையில் நகர வைக்கிறது.போலியான மகிழ்ச்சியில் திளைப்பது ஏதாவது ஒன்றில் அடிமைபோல் இருப்பது இவை எல்லாம் சிலர் தமக்குத்தாமே போட்டுக்கொள்ளும் திரைகள்.இவைகளை நீக்காத வரை மனதின் முன்னேற்றம் என்பது கானல் நீராகத்தான் இருக்கும்.கடினம் இல்லாத ஒரு மிகமிக எளிய மகிழ்சியை மட்டுமே கொண்ட வாழ்வை கதைகளில் மட்டுமே காணமுடியும்.முதலில் வாழ்வை கடினமாக உண்ர்வது தாழ்வு மனபான்மையால் ஏற்படுவது அல்ல.இது பிற்போக்கு குணமும் அல்ல.இதைத்தான் வழ்க்கையை அப்படியே ஏற்பது என்று ஞானிகள் கூறுகிறார்கள். இயல்புத் தன்மைகளை கண்டும் காணாதிருக்க கற்றுக்கொடுப்பதையே பல நூறு ஆண்டுகள் செய்து வந்ததன் காரணமாக சிந்திப்பது என்பது நெருடலாகத் தோண்றுகிறது.மனம் சிந்திக்க மறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ அதில் சிக்குண்டு விட்டால் அதில் இருந்து விடுபடுவது கடினமானதாக இருக்கும்.வாழ்க்கையின் தன்மையை கண்டுணர்ந்து அதனை ஏற்பது நாம் சிந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.இதில் அச்சப்படுவதற்கோ நெருடலாக உணர்வதற்கோ ஒன்றுமில்லை.நாம் வாழ்க்கையின் உண்மையான இயல்பான தன்மையையே கண்டுணர்கிறோம் என்ற எண்ணம் மேலெழும் போது குழப்பங்கள் விலகும்.பிறரின் மன நிலையை புரிந்துகொள்வதும் எளிதாகிறது.அதன் பிறகும் பெருவாரியானவர்களின் மனதில் கேள்வி ஒன்று எழுகிறது. வாழ்க்கை ஏன் எப்போதும் கடினமாக உள்ளது?
நாம் ஒரு பாய்மரக்கப்பலை செலுத்துவதை போல் உண்ர்கிறோம்.நம் இலக்கையும் ஒருவாறு நாம் அறிந்து வைத்திருக்கிறோம். உற்சாகம் குன்றாமல் நாம் பயணிக்கிறோம்.உடலும் உள்ளமும் சேர்ந்து பயணிக்கின்றன.நம் அனுபவ அறிவை நாம் எப்போதும் பயன்படுத்த தவறவில்லை.அறிவும் உழைப்பும் கப்பலின் இரு பாகங்களாக இருக்கின்றன.கப்பலை எத்திசையிலும் நம்மால் திருப்ப முடியும்.கப்பலை ஒரிடதில் நிருத்தவும் முடியும்.கப்பலின் பயணம் பாய்மரத்தையும் நேர்த்தியான கம்பங்களையும் சார்ந்திருக்கிறது. எது நமக்கு இடையூறாக தெரிகிறதோ அதன் இயல்பையே பயன்படுத்தி நாம் ஒன்றை சாதிக்கிறோம்.இங்கே நாம் எதையும் கட்டுப்படுத்தவில்லை மாறக அதன் போக்கை அறிந்து வெற்றி கொள்கிறோம்.பிரச்சனைகள் ஒன்றன்பின் ஒன்றாக வருகின்றன.அலைகளும் பெருங்காற்றும் இல்லாத கடலை எங்கும் காணமுடியாது.இயற்கையின் இயல்பை அறிவது நம் பார்வையை செம்மைப்படுத்தும்.எது நமக்கு உண்மையில் வேதனை தருவது என்பது விவாததுக்கு உரியது.எல்லாவற்றையும் வேதனையாகவோ பிரச்சனையாகவோ பார்க்க முடியாது. எளிதாக தவிர்க்க வேண்டியவை நிறைய இருக்கலாம்.நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியவைகளை அவை அழுத்திக் கொண்டு இருக்கலாம்.அவற்றை நீக்காத வரை ஆய்வுக்கு உட்படுத்தி விலக்க வேண்டிய பெரிய பிரச்சனைகளை நாம் நிரந்தரமாக தங்க அனுமதிக்கிறோம்.பிரச்சனைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் போது சிதைந்து உதிர்ந்து விடுகின்றன.சில நம் ஊக்கத்திற்கு உரமாகின்றன. விஞ்ஞானத்தின் அடிப்படையை உணர்ந்தவர்கள் இதை எளிதாக அறிவார்கள்.மலை ஏற்றம் பயிலும் போது வியர்த்துக் கொட்டுகிறது வியர்ப்பது உடலுக்கு நன்மையா அல்லது தீமையா? பிரச்சனைகளை எதிர் கொள்வதற்கு முதலில் அவற்றை நன்கு அறிந்து கொள்வது தலையாய ஒன்று.வாழ்வின் கடினத்தன்மையை உடைக்கும் சூத்திரம் அங்கே மறைந்து இருக்கிறது.அறிவின் தொடக்கம் மிக எளிதான ஒன்று .அது எல்லாவற்றையும் விலக்கி தெளிவாவது.அதனால் தான் உலகிற்கு வந்து சில நாட்களிலேயே மனிதன் ஒரு மொழியை பேசுவதற்கு வேகமாக கற்றுக் கொள்கிறான்.சுத்தமான தேவையற்ற பொருள்கள் இல்லாத கலம் தான் நீரை முழுவதும் நிரப்ப அனுமதிக்கிறது.மேலும் கடினமான பிரச்சனைகள் நம்மை இயங்க வைக்கின்றன.நம் உள்ளத்தை முழுமையாக திறக்கின்றன.உண்மையில் வாழ்க்கை எளிதானதும் இல்லை கடினமானதும் இல்லை.நாம் ஒரு கப்பலில் பயணிக்கிறோம்.அனுபவ அறிவைப்பெற்று சிக்கல்களை எதிர்கொள்ள கற்றுக்கொள்கிறோம்.வாழ்க்கை சுவாரசியம் மிக்கதாக மகிழ்ச்சிகரமானதாக மாறுகிறது.முதிற்சியின் முன்னே அலைகள் மண்டியிடுகின்றன.மனிதன் இப்போது பெரும் வியப்பில் ஆழ்ந்து போகிறான்.ஆனால் இது முடிவல்ல ஒரு சிறப்பான தொடக்கம்.இன்னும் மனதிற்குள் ஆழ்ந்து சென்று சிக்கலின் காரணங்களை கண்டுணர வேண்டும்.மனதை கனமாக்குபவைகளை ஒவ்வொன்றாக நீக்க மனிதனின் இனிய இயல்புநிலை தென்படுகிறது.இப்போது அலையும் இல்லை பெருங்காற்றும் இல்லை.அதுமட்டுமல்ல அங்கே கப்பலுமில்லை.எந்த உதவியும் இன்றி உங்கள் உடல் நீரில் வேகமாக நகர்வதை உணர்வீர்கள்.இப்போது முதலில் எழுந்த கேள்விக்கான உங்கள் பதில் என்ன?வாழ்க்கை எளிதானதா? கடினமானதா?
விருப்பத்தின் விழுதுகள்
நயகரா நீர் வீழ்ச்சி குதித்தெழும் பாதாளத் தரையைத் தொட்டு வருகிறோம்.பிரமிட்டின் பிரமாண்டத்தை அதன் முனையில் அமர்ந்த கழுகின் கண்வழியே பார்க்கிறோம்.உலகின் மிகப்பெரிய அதிசயம் அங்கெல்லாம் தென்படுமா?நிச்சயமாக தென்படாது.ஒன்றை கண்டு நாம் வியந்து கொண்டிருக்கும் போதே இயற்கையின் வேறொரு அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.மனிதனின் கைகள் ஒன்றை உருவாக்கி முடித்து விலகுவதற்குள் அதை விஞ்சும் ஒன்றின் நிழலை அவன் கையே வரைந்து வைத்து விடுகிறது.எனவே உண்மையான அதிசயம் வேறு ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.அது உலகில் நாம் வரும் போது நம் உடன் வரும் ஆசைகள்.இது நம்மில் பலருக்கு வியப்பை தரலாம்.உலகில் மிக ஆபத்தானது கடலில் வாழும் ஒரு வகை நத்தை என்றால் நம்மால் நம்ப முடியவில்லை.அது ஒரு சில நொடிகளில் மனிதனின் உயிரை போக்க வல்ல கொடிய விஷம் கொண்டது.ஆனால் உலகில் மிக ஆபத்தானது என்றவுடன் நம் நினைவுக்கு வருவது வலிமையான பெரிய மிருகங்கள்தான்.அதே போல வியத்தகு ஒன்றை வெளி உலகில் காணும் நமக்கு நம்முள் இருக்கின்ற ஆச்சரியம் புலப்படுவதில்லை.நமது விருப்பங்கள் ஆழமானவை.அவையே உண்மையில் மிக அதிசயமானவை.பளிங்குக் கல்லால் கனவைச் செதுக்கி உருவாக்கிய தாஜ்மகால் ஓர் உலக அதிசயம் தான்.ஆனால் அதை கட்ட வைத்தது ஒரு மனிதனின் மிகப்பெரிய விருப்பம் தானே.
விருப்பங்கள் வெறுத்து ஒதுக்குவதற்கு உரியவை அல்ல.அவை போற்றுதலுக்கு உரியவை.அவையே உலகத்தை உருவாக்குகின்றன.அவையே உலகின் ஊடும் பாவுமாக உள்ளன.அவை நம்மை முழுமையாக வெளிபடுத்த உதவுகின்றன.நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் நம் ஆசைகளின் தாக்கம் இருக்கிறது.ஒரு செயலின் தொடக்கம் விருப்பத்தால் விளைகிறது.அது தொடர்வதற்கும் ஒரு பின்னடைவு ஏற்பட்டால் அதை எதிர் கொள்வதற்கும் ஊக்கம் பெறுவதற்கும் நம் விருப்பங்களே காரணமாக இருக்கின்றன.உலக இயக்கத்தின் உந்து சக்தியாக நம் ஆசைகள் இருக்கின்றன.மனித வாழ்வின் காரணத்தை அறிய இங்கே தான் ஆராய்ந்து தெளிவு பெற முயல வேண்டும்.எங்கிருந்து வந்தன என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியாத நம் விருப்பங்கள் தான் உண்மையில் மிகவும் அதிசயமானவை.அவை எப்படி நம்முள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன என்பது வியப்பாகவோ சில வேளை நெருடலாகவோ கூட இருக்கலாம்.ஆனால் உயிர் வாழ்வதற்கு காற்றை உடல் எப்படி ஏற்கிறதோ அதைப்போல நாம் நம் விருப்பங்களை ஏற்கிறோம்.மேலும் மனிதனின் குணங்களும் விருப்பங்களும் மரபணுக்களில் பதிவாகி இருப்பதால் நம் பிரயாசைகள் இயற்கையோடு நெருங்கிய தொடர்புடையவை என்பதை அறிகிறோம்.இயற்கையின் செயல்பாடுகள் பெரும்பாலும் சீரானவையே.சில சமயம் சூதாட்டம் போல தோன்றினாலும் கிடைத்த மாறுபாடுகளை வைத்துக் கொண்டு மேலும் ஒரு சீரான பாதையில் இயற்கை நகர முனைகிறது.பிரச்சனைகளுக்கான தீர்வை அது எப்போதும் தன்னுள்ளே வைத்திருக்கிறது.அது தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் ஆற்றலுடையது.இயற்கை தன் படைப்பில் ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் ஒரு தொடர்பையும் சார்புத் தன்மையையும் சேர்த்தே வைத்திருக்கிறது.ஆகவே நம் ஆசைகள் இயற்கையோடு மிக நெருங்கியவைகளாகவும் அர்த்தம் நிறைந்தவைகளாகவும் தென்படுகின்றன.இவை எங்கிருந்து இயங்குகின்றன?மனமே அவற்றின் ஆடு களமாக இருக்கிறது.மனம் என்பது நம் புலன்களின் வழியே செல்லும் நம் உயிரின் நீட்சியாகும்.மனிதன் உலகிற்கு வந்தவுடன் தன் புலன்களின் மூலம் கண்டும், கேட்டும், உணர்ந்தும், மனம் உருவாகிறது.அதற்கு பிறகு புலன்கள் ஒன்றை உணரும் போது மனம் அதை ஒப்பிட்டு வெட்டியும் ஒட்டியும் ஒரு பெரும் அமைப்பையே உருவாக்குகிறது.நமது ஆசைகள் விளையாடும் தளமாக மனம் இருக்கிறது.”பறவைக்கு வானம்/ மீனுக்கு நீர்/ ஆன்மாவுக்கு மனம்” என்பார் பிரமிள்.மனம் நமது விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு நம்மை நடத்திச் செல்வதோடு நின்று விடுவதில்லை.நம் விருப்பங்களின் உண்மையான தன்மையையும் நமக்கு விரிவாக காட்டுகிறது.மனம் என்பது புரிந்து கொள்வதற்கு மிகவும் சிக்கலாக இருக்கும் ஒன்று.நமது ஆசைகள் அதை மேலும் சிக்கலான ஒன்றாக மாற்றுகின்றன.வான வில்லின் வண்ணங்கள் போல அவை இருக்கின்றன.ஒரு ஒளிக் கதிரில் இருந்து பல வண்ணங்கள் வெளிபடுவதைப் போல, நம்மில் இருந்து பல ஆசைகள் விரிகின்றன.மேலும் அவை நிறமாலையின் வண்ணங்களைப் போல ஒன்றோடு ஒன்று நெருங்கி சற்றே கலந்து காணப்படுகின்றன.அதாவது விருப்பங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவைகளாக உள்ளன.சுருக்கமாகச் சொன்னால் விருப்பங்கள் ஒரு தொகுப்பாக இயங்குகின்றன.மேலும் ஒன்றை ஒன்று செம்மை படுத்திக் கொள்கின்றன.வானில் பயணிக்கும் பறவைக் கூட்டம் நெடுந்தொலைவு செல்கின்றன.ஒன்றாக சேர்ந்து பறப்பதோடு மட்டுமல்லாமல் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருக்கின்றன.திடீரென தளர்ந்து போகின்ற பறவையின் மிக அருகே சில பறவைகள் வருகின்றன. சிறகசைப்பின் மூலம் நிறைய காற்றைத் தள்ளி அது தொடர்ந்து பயணிக்க உதவுகின்றன.அதைப் போலவே நம் விருப்பங்களின் தொகுப்பும் செயல்படுகிறது.
மனம் மாறும் இயல்புடையதாக இருப்பதால் அதன் தன்மையை சரியாக கணிப்பது கடினமானது.சில விருப்பங்கள் சில காலம் மறைந்திருந்தாலும் மீண்டும் தோன்றும் இயல்புடையன.ஒரு நண்பர் சிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்.அவர் ஒரு பெரிய வேலையில் சேர்ந்தார்.அவர் முழு ஈடுபாட்டுடன் பணியில் பல காலம் இருந்ததால் தான் ஒரு விளையாட்டு வீரர் என்பதையே மறந்து போனார்.சற்றும் எதிர்பாராமல் ஒரு நாள் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.என்ன ஆச்சரியம் அவர் எதையும் மறந்து விடவில்லை.அவருக்கே உரிய முனைப்புடன் திறமையை வெளிப்படுத்தி விளையாடினார்.அவராலேயே அதை நம்ப முடியவில்லை.உடலிலும் உள்ளத்திலும் பரவிய ஆர்வத்தின் வெள்ளம் இத்தனை காலம் எங்கே மறைந்திருந்தது?எனவே எந்த ஒரு விருப்பமும் மனிதனைவிட்டு முற்றிலுமாக சென்று விடுவதில்லை.
ஆசைகளில் தலையாய ஆசை எது?ஒரு மனிதனின் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் விழுமம் தான் அது என்று எளிதாக சொல்லி விட முடியாது.விழுமம் என்ற முதன்மை நோக்கம் உள்ளே ஒரு வேராக இருக்கிறது.இலக்கை அடைவதற்கான எரிபொருளை தொடர்ந்து தருகிறது.ஒரு மலைச் சிகரத்தை அடைவது ஒரு நபரின் கனவு.அதற்காக சிறப்புப் பயிற்சி பெற்று ஆர்வம் குன்றாமல் முயன்று இறுதியில் வெற்றி பெறுகிறார். அவர் தன் லட்சியத்தை அடைவதற்காக உணவையும், உறக்கத்தையும், தன் காதலையும் மறக்கலாம்.ஆனால் அவர் ஆசைகளெல்லாம் அதனால் அவரை விட்டு மறைந்து போய்விடவில்லை.இப்போது ஒரு சிறந்த பணியில் அவர் இருக்கிறார்.குடும்பத்தாரோடு சுற்றுப்பயணம் செல்கிறார்.தன் தோட்டத்தில் உள்ள வெவ்வேறு வகையான மலர்கள் தன் பல வகை ஆசைகளைப்போல இருப்பதை கண்டு ரசிக்கிறார்.அவர் உள்ளத்தின் மையத்தில் கனன்று கொண்டிருந்த முக்கிய நோக்கம் நிறைவேறிவிட்டது.ஆனால் அவர் நெஞ்சத்தை ஆசைகள் இன்னும் சூழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.எனவே மனிதனின் ஆசைகளுக்கெல்லாம் முதன்மையானதாக மட்டுமல்லாமல் அடிப்படை ஆசையாக ஒன்று இருக்க வேண்டும்.மேலும் எல்லா மனிதர்களுக்கும் ஒரு பெரிய விழுமம் ஆழ்மனதில் இருக்கவேண்டிய அவசியமில்லை.முழு மனித இனத்திற்கும் பொதுவானதாக அந்த முதன்மை ஆசை இருக்க வேண்டும். நம் விருப்பங்களின் பட்டியலை வைத்து கொண்டு அவற்றை நமக்கு நினைவுபடுத்தும் வேலையையும் செய்கின்ற ஒன்றாக அது ஏன் இருக்கக்கூடாது?பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகளாய் நம் ஆசைகள் இருக்கின்றன.அவற்றை ஒருங்கிணைக்கும் ஒன்று நிச்சயமாக இருக்கவேண்டும். அதுவே நம் முதன்மை ஆசையாக இருக்கிறது.
நம் விருப்பங்கள் விழுதுகள் போல வளர்கின்றன.மண்ணில் வேர்விட்டு சில உறுதியானவைகளாக மாறுகின்றன.விழுதுகள் முளைத்த கிளைகளைக் கொண்ட மரம் முதன்மை ஆசையாக இருக்கிறது.அது எந்த விருப்பத்தையும் நீக்கி விடுவதில்லை.மரத்திலிருந்து தாதுப்பொருட்கள் பாய்ந்து விழுதுகளோடு அதன் தொடர்பு எப்போதும் தொடர்கிறது.விருப்பங்களின் தொகுப்பை வைத்திருக்கும் அது ஒவ்வொரு விருப்பதின் தனித்தன்மையையும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது.பல்வேறு விருப்பங்களுடனான இந்த முதன்மை விருப்பதின் தொடர்பு மிக உறுதியானது.அதனால் தான் மறந்து போன விருப்பங்களெல்லாம் நிரந்தரமாக மறைந்து விடுவதில்லை.
மேலும் நம் பல்வேறு விருப்பங்கள் எப்போதும் மிதந்து கொண்டும் இயங்கிக் கொண்டும் இருக்கின்றன.கையில் நிறைய கயிறுகளை பிடித்திருக்கிறோம்.அவை ஒவ்வொன்றின் முனையிலும் ஒரு பட்டம் பறக்கிறது.அவை பல்வேறு வண்ணமுள்ள பட்டங்கள்.அவை நம் வெவ்வேறு ஆசைகளை பிரதிபலிக்கின்றன.உயிர் நம் புலன்களின் வழியாக பட்டங்கள் போல பறந்து அவாவைப் பெருக்கி உள்ளத்தை உருவாக்குகிறது.பட்டங்கள் ஒவ்வொன்றையும் நாம் ரசிக்கிறோம்.எல்லாமே நமக்கு மகிழ்ச்சியை தருகின்றன.அனைத்தும் நமக்கு வேண்டும்.நாம் எதையும் இழக்கத் தயாராக இல்லை.அதனால் தான் நம் கரம் உறுதியாக கயிறுகளை பிடித்துக் கொண்டிருக்கிறது.பல்வேறு ஆசைகள் சேர்ந்து தான் நம் மனம் உருவாகி இருக்கிறது. அதே வேளையில் அவற்றில் எதுவும் நழுவிச்சென்று விடாமல் பிடித்து வைத்திருப்பதும் நம் மனதின் ஒரு பகுதிதான்.மனமே பலவண்ணப் பட்டங்களாக மிளிர்கிறது.அதுவே அவற்றை தொகுத்து வைத்திருக்கிறது.பொதுவாக மனம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டாலும் அதன் செயல்பாடுகள் நுட்பமான பல பகுதிகளிடையே நிகழ்கின்றன.அறியப்படாதவை நிறைய இருக்கின்றன.மனதின் தன்மைகளை மனதின் ஒரு பகுதியே தனியாக நின்று கவனித்து ஆய்வு செய்கிறது.அத்தகைய கவனிக்கின்ற மனதின் ஒரு பகுதி போன்றதே மற்ற ஆசைகளை யெல்லாம் பிடித்து வைத்திருக்கின்ற ஒர் ஆசை. ஆசைகளுக்கெல்லாம் ஆசையாக நம் முதன்மை ஆசையாக அது இருக்கிறது.இப்போது ஒரு சிறு ஐயம் எழுகிறது.ஆசைகளின் பட்டங்களை நாம் பறக்கவிடுகிறோமா அல்லது அவைகள் தான் நம்மை பட்டமாக காற்றில் மிதக்க விடுகின்றனவா?
நன்றி- புதுப்புனல் ஏப்ரல் 2010 இதழ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தனித்துவத்தளம்
தனித்துவம் என்பது தன்னை வேறுபடுத்திக் காட்டும் தன்மையை அல்லது தனித்து நிற்கும் தன்மையைக் குறிக்கிறது.மேலும் அது தனித்தன்மையை அதாவது தனி மனித சிறப்பு குணத்தையும் குறிக்கிறது.நடைமுறையில் தனித்துவம் என்பது ஒரு மனிதனிடமிருந்து வெளிப்படும் போது அவனுடைய பிரத்தியேக குணம், தன்னை வேறுபடுத்திக் காட்டும் தன்மை ஆகியவற்றின் கலவையாகவே வருகிறது.அந்த கலவையின் விகிதாச்சாரம் மனிதனுக்கு மனிதன் வேறுபடலாம்.தனித்துவம் மனிதனின் உண்மை தன்மையைக் காட்டுகிறது.அது எந்த மனிதனுக்கும் ஒரு சிறப்பு சேர்க்கிறது. சிலருடைய தனித்துவம் சுய இலக்குகளையும் மகிழ்ச்சியையும் மட்டுமே நோக்கமாக கொண்டு அமைகிறது.இன்னும் சிலர் அதையும் தண்டி கூட்டு அமைப்புகளில் நம்பிக்கையற்று எல்லாமே தனி மனித மகிழ்ச்சிக்காக வளைந்து கொடுக்க வேண்டும் என்ற கொள்கையோடு இருக்கிறார்கள்.அத்தகைய தனித்துவங்கள் பற்றி நாம் பேசவில்லை.
தனித்துவம் இயற்கையின் மிகப்பெரிய கொடை. இயற்கை உயிர்களை உலவ அனுமதித்ததன் அடிப்படைக் காரணமே அதுதான். நிலையானவற்றிலும் தனித்துவம் உள்ளது.ஆனால் உலவுகின்றவற்றில் இலங்குகின்ற தனித்துவம் அதனைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தது.
குழுவாக வாழ்ந்தாலும் அதில் உள்ள ஒவ்வொன்றும் தனக்காக தன் தேவைகளை பூர்த்தி செய்ய செயல்பட வேண்டும்.அப்போது தனித்துவம் வந்து செயல்பாட்டில் கலந்து விடுகிறது.ஒரு ஆண் மற்றொரு ஆணை வெற்றி கொண்டு கூட்டத்திற்கு தலைமை ஏற்கும் போது அதன் வலிமை தனிதன்மை வாய்ந்ததாக இருக்கிறது.சுதந்திரம் தனித்துவத்தை வளர்க்கிறது.குழு அமைப்பை விட குடும்ப அமைப்பே உண்மையில் விடுதலையை நோக்கி நகர்கிறது.எது தனியாய் இருக்க, தனித்துவம் துளிர அனுமதிக்கிறதோ அதுவே சுதந்திரத்தை வழங்குகிறது.குழுவில் இருப்பது போலியான சுதந்திரம்.அங்கே தனித்துவம் நசுக்கப்படுகிறது.சமுதாயத்தில் தனிமனித ஒழுக்கம் , அதனால் கிடைக்கும் நிம்மதி இவற்றைத் தவிர ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும் தனிதன்மையின் சிறப்பு உணரப்பட்டது. அத்தனித்துவம் மிளிர்வது ஒட்டு மொத்த சமுதாயத்திற்கே நன்மை விளைவிக்கும் என்பதை அறிந்தே மனிதன் ஆதிகாலந்தொட்டே குடும்ப வாழ்க்கையை விரும்பி தொடர்ந்து கடை பிடித்து வருகிறான்.பெரும் விஞ்ஞானக்கண்டு பிடிப்புகளெல்லாம் சில தனிமனிதர்கள் இடையூறுகளை தவிர்த்து தங்கள் தனித்துவத்தை வளர அனுமதித்ததன் காரணமாகக் கிடைத்தவை.மேலும் மென்மையான உணர்வுகள் அவற்றின் தன்மைகள் அகியவற்றை காண்பதிலும் அறிந்து கொள்வதிலும் தனித்துவம் பெரும் பங்கு வகிக்கிறது.பலவற்றை நம் நன்மைக்காக அறிந்து கொள்வதில் வாழ்வின் சுவை கூடுகிறதென்றால் அதற்கு மனிதனின் தனித்துவமே முக்கிய காரணமாய் இருக்கிறது.அது வெட்டப்படும் போது பல அரிய விஷயங்கள் வெளிப்படாமலேயே போய்விடும்.
தனித்துவம் சில எழுத்தாளர்களுக்கோ ஒவியர்களுக்கோ மட்டும் சொந்தமானது என்று எண்ணுவது முற்றிலும் தவறானது.ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவம் உள்ளது.அது சுவாசம் போன்றது.அது எல்லோருக்கும் தேவையானது.நான் பணிபுரியும் நிறுவனம் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.இருபது நாட்கள் நடை பெற்ற அதில் வகுப்புகள் கலந்துரையாடல்கள் எல்லாம் கலந்திருந்தன.அது நடைபெற்ற ஊர் ஒரு மலைப் பாங்கான இடம்.தங்குவதற்கு இடம் கொடுக்கப்பட்டும் நான் அதை விரும்பாமல் என் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கினேன்.நான் அப்போது தான் கார் ஓட்ட க் கற்றிருந்தேன்.புது இடமாக இருப்பதால் நான் தங்கி இருந்த இடத்தின் அருகே குடியிருந்த ஒரு ஓட்டுநனை அமர்த்திக் கொண்டேன்.அவன் பெயர் சிவா.காலையில் சரியாக ஒன்பதரை மனிக்கெல்லாம் வந்து விடுவான்.நெற்றி நிறைய விபூதியும் நடுவில் ஒரு பெரிய பொட்டும் இருக்கும்.நான் இன்னும் கால் மணி நேரம் கழித்துவந்தால் போதும் என்பேன்.ஆனால் அவன் கால்மணி நேரம் முன்னமே வந்து “கார் சாவியைக் கொடுங்கள்” என்பான். என்ஜின் எண்ணைய் குளிர்பானின் அளவு ஆகியவற்றை அக்கறையோடு சரியாக இருக்கின்றனவா என்று பார்ப்பான்.சிறிய பழுது ஏதாவது இருந்தால் அதை சரி செய்ய வேண்டும் என்பான்.அவன் சில சமயம் சற்று வேகமாக வண்டியைத் திருப்புவான்.மற்றபடி நன்றாகவே காரை செலுத்துவான்.அவன் பேசும் போது எப்போதும் மிகுந்த நிதானத்தோடு பேசுவான்.அவன் அதிகம் படிக்காதவனாக இருந்தாலும் படித்ததினால் கொஞ்சம் கௌரவம் எதிர்பார்க்கும் ஒரு நபர் போல இருந்தான்.அது பிறர் ரசிக்கும் படியாகவும் இருக்கும்.அவன் மேல் இருக்கும் நன்மதிப்பு அதனால் கூடியது. “ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய் வீதம் இருபது நாட்களுக்கு நாலாயிரம் தருகிறேன்.இப்போது ஆயிரம் ரூபாய் தருகிறேன்.பத்து நாட்கள் கழித்து கொஞ்சம் பணம் தருகிறேன்.கடைசியில் மீதமிருக்கும் பணத்தைத் தந்து விடுகிறேன்.” என்றேன். “ பணத்தை பற்றி எந்த பிரச்சனையும் இல்லை . நீங்கள் சொன்னவாறே கொடுங்கள்”என்றான்
கருத்தரங்கில் சில நாட்களில் என் கட்டுரைகளை வாசிப்பேன்.அதற்காக வீட்டிலேயே என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு தயாராய் இருப்பேன்.கருத்தரங்கம் தொடங்குவதற்கு சற்று முன்னதாகவே சென்று விடுவேன்.இரண்டு நாட்கள் சிவா சரியாக வந்தான்.மூன்றாம் நாள் தொலை பேசியில் தொடர்பு கொண்டு மிக முக்கியமான வேலைக்கு தன்னை ஒருவர் அழைத்துள்ளார் என்றும் அதனால் வேறு ஒரு ஓட்டுநனை அனுப்பியிருப்பதாகச் சொன்னான்.ஒரு முதியவர் வந்தார்.அன்றைய நிகழ்ச்சி நடந்து முடிந்தது.மறு நாளும் சிவா வரவில்லை.வேறு யாரையும் அனுப்பவுமில்லை.நானே ஒருவாறு காரைச் செலுத்தி அன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.அன்று மாலை சிவா வந்தான். “தாங்கள் கொடுத்த பணம் போதாது.மேலும் முழு பணத்தையும் முதலிலேயே கொடுக்காததற்கு என் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லாததே காரணம்”.என்றான். அவனுக்கு உடனடியாக பணம் தேவைப் படுகிறது என்பதை புரிந்து கொண்ட நான், அவனிடம் ஐநூறு ரூபாய் பணம் கொடுத்து “போய்வா” என்றேன்.மேலும் “நான் மாதச் சம்பளம்தான் பெறுகிறேன், காரயும் கொஞ்சம் கடனுக்குத்தான் வாங்கியிருக்கிறேன்” என்றேன்.நியாயமான கூலிதான் என்னால் கொடுக்க முடியும் என்றும் அதற்கு அவன் ஒப்புக்கொண்டதையும் நினைவு படுத்தினேன். இனி அவனுக்கு அன்றாடம் கூலி தந்து விடுவதாகவும் சொன்னேன்.அவனோ இன்னும் எனக்கு அவன் மேல் நம்பிக்கை வரவில்லை என்று கூறி விட்டு,நம்பிக்கை பற்றி ஒரு சிறு உரை நிகழ்த்தினான்.அவன் என் வேலையை சரியாக செய்ய விடமாட்டான் என்று எனக்கு தெளிவாகத் தெரிந்தது. இனி அவனை காரோட்ட அழைக்கக் கூடாது என்ற முடிவோடுதான் அனுப்பி வைத்தேன்.அதற்கு பிறகு வேறு ஒரு ஓட்டுநனை அமர்த்திக் கொண்டேன்.இரண்டு நாள் கழித்து தொலை பேசியில் சிவாவின் குரல் கேட்டது.நா தழு தழுத்த குரலில் என்னிடம் மன்னிப்பு கேட்பது போல் பேசினான். “இப்போதே நான் அதிகம் பெற்ற பணத்தை உங்களிடம் வந்து தந்து விடுகிறேன்.நான் தான் தவறு செய்து விட்டேன்”என்றான்.நான் சொன்னேன் “நீ அதிகமாக பெற்ற பணத்தை திருப்பி தர வேண்டாம்.மனதை குழப்பிக் கொள்ளாமல் இரு.மேலும் நாளை நீ காரோட்ட வர வேண்டாம்.தேவைப்பட்டால் நானே உன்னை அழைக்கிறேன்”.அடுத்த நாள் அரங்கம் செல்லும் வழியில் புது ஒட்டுநன் சிவாவைப் பற்றி பேசினான். “அவன் கையில் பணம் கிடைத்தவுடன் நன்றாக மது அருந்திவிட்டு எங்காவது சென்று உறங்கி விடுவான்.அதனால் தான் சில நாட்களில் அவன் வருவதில்லை”. அப்போது எனக்கு எல்லாம் தெளிவாகப் புரிந்தது.ஆனால் சிவாவின் மேல் எனக்கு கோபம் வரவில்லை.அதற்குக் காரணம் அவன் மனோபாவத்தையும் அதன் அடிப்படை காரணத்தையும் நான் உணர்ந்து கொண்டது தான். தான் பணி செய்யும் இடத்தில் ஒரு நேர்மையான மரியாதைக்குரிய மனிதனாக இருக்க அவனிடம் விருப்பம் ஆழமாக பாய்ந்து வேராகப் பரவி இருக்கிறது.அதுதான் அவனுடைய தனித்துவம்.அதே வேளையில் மற்ற சிலரைப் போல் ஓய்வாக இருக்கும் போது மகிழ்ச்சிக்காக குடிப்பவனல்ல அவன்.பணிக்கு இடையூறு வரும் அளவிற்கு அவனிடம் குடிப்பழக்கம் இருக்கிறது.அவனை பொறுத்தவரை குடிப்பழக்கம் அவன் தனித்துவத்திற்கு நேர் எதிராக உள்ளது.அவனுடைய சிறப்பியல்பு அவனுக்கு பெரும் நிறைவைத் தருகிறது.அதனால் தான் தன்னாலேயே அதற்கு பங்கம் வரும் போது அவன் மிகவும் வருந்துகிறான்.அவன் போராட்டம் தொடர்கிறது. தன் தனித்துவம் மிளிரவேண்டும் என்று விரும்புபவர்கள் அதற்கு தடையாய் இருப்பவற்றை நீக்குவதே ஒரே வழி.இதற்கு மற்றொருவர் உதவ முடியாது.
தன்னை தானே கூர்ந்து கவனிப்பதன் மூலம் ஒருவர் தன்னிடம் உள்ள அர்த்தமுள்ள நல்ல விளைவை ஏற்படுத்தும் தனித்துவத்தை கண்டறிய முடியும்.சுற்றி இருப்பவைகளை விட சிறிது காலம் நம்மை அதிகமாக கவனிக்க வேண்டும்.இல்லாவிடில் ஆரம்பத்தில் ஏற்படும் பயனற்ற எதிர் விளைவுகளை கவனித்து தவறாக ஒருவர் வழிநடத்தப்படலாம்.தனித்துவம் தடையின்றி பெருகி நிலைக்க ஒரு நிறைவு தோன்றும்.அது ஒரு அபூர்வமான உணர்வு. அதன் பிறகு செல்லும் வழி எளிதானதாக தென்படுகிறது.நாம் செய்யும் மற்ற எல்லா காரியங்களிலும் அதன் ஆக்க பூர்வமான தாக்கம் இருக்கும்.
பல நேரங்களில் தன் நேர்மையான அர்த்தமுள்ள தனித்துவத்தை நிலை நாட்ட சிலர் வெளி சூழலோடு போராட வேண்டியிருக்கிறது.தனித்தன்மை அனுமதிக்கப்பட வேண்டும் என்று கேட்பது ஒரு உரிமையல்ல.ஒருவர் உணவு, உடை ,உறைவிடம், சுதந்திரம் எல்லாம் மறுக்கப்படும் போது அவற்றை கேட்பது அவர் உரிமை.ஆனால் தனித்துவம் என்பது உரிமை சம்பந்தப்பட்டதல்ல.அது ஒருவர் தன்னைத் தானே நேசிப்பதால் மலர்கின்ற மலர்.தன்னை நேசிப்பதென்பது தன் தனித் தன்மையை தடையில்லாமல் சுவாசிக்க அனுமதிப்பது.தன் உடலுக்கு தேவையான உணவை உண்டு பேணிக்காப்பது துன்பம்மில்லாமல் இருப்பதற்குத்தான்.நேசிப்பதென்பது அதையும் கடந்திருப்பது.உங்களோடு நீங்கள் நெருக்கமாக இருக்க வேண்டும்.உங்களுக்குள் நீங்கள் செல்ல வேண்டும். சில நேரங்களில் தோன்றும் உங்கள் வினோதமான போக்கு எப்படி ஏற்படுகிறது என்று காண முற்படுங்கள்.அப்போது சில மெல்லிய களங்கமற்ற உணர்வுகள் உங்களுக்குள்ளும் இருப்பதை உணர்வீர்கள்.அலட்சியம் காரணமாகவும் அர்த்தமற்ற பிடிவாதம் காரணமாகவும் அவைகள் அழுத்தப்பட்டிருப்பதை காணலாம்.அத்தகைய தளைகளை வெட்டிவிடும் போது நறுமணம் போல தனித்துவம் உங்களை சூழ்ந்து கொள்ளும்.நீங்கள் சமுதாயத்தில் எந்நிலையில் இருந்தாலும் உங்கள் தனித்துவத்தை நிலை நாட்டுவது சற்று கடினமானதுதான்.அதற்கு சில காலம் காத்திருக்கத்தான் வேண்டும்.போலித்தனமற்ற தனித்தன்மை தான் உங்களுடையது என்று நீங்களே உணர்ந்து கொள்ளும் காலமும் அதில் அடக்கம். அக்கால கட்டத்தில் உங்கள் தனித்துவத்தை உங்களோடு நெருங்கி இருப்பவர்களும் பிறரும் எப்படிப் பார்ப்பார்கள் என்பது தெரியும்.பிறர் உங்களை வசை பாடிய போது எரிச்சலடைந்தீர்கள்.இப்போது உங்கள் தனித்துவம் நீங்கள் தெரிவு செய்த ஆடையின் வண்ணம் போல, வடிவம் போல மிக இயல்பானது என்று அவர்கள் அறிந்து கொள்ளும் படியாக புன்முறுவல் செய்வீர்கள்.புரிதல் என்பதன் உண்மையான பொருள் அதுதான். உறவுப்பாலத்தின் சரியான அடித்தளமாக அது அமைகிறது.உறவுகள் மேம்படுவதில் தனித்துவம் பெரும் பங்காற்றுகிறது.ஒத்துப் போவது தற்காலிக சமாதானம் .தனித்துவம் தெளிவாக தன்முனைப்பின் சாயலின்றி வெளிப்படுத்தபடும் போது மனித உறவுகள் பலப்படுகின்றன.
ஒரு காலகட்டத்தில் இகழ்ச்சிக்குள்ளான ஒருவரின் தனித்துவம் சரியான தருணத்தில் வியத்தகு செயல்களை எளிதாக நிகழ்த்துகிறது.நண்பர்கள் அனைவரும் இசையை ரசித்தபடியிருந்த கலையரங்கில் அவன் மட்டும் ஒலியமைப்பு இன்னும் சரியாக அமைத்திருக்க வேண்டும் அதனால் நிகழ்ச்சி மேலும் சிறப்பாக இருக்கும் என்றான்.சிலர் வெகுண்டெழுந்து அதை ஆட்சேபித்தார்கள்.உணவு விடுதியில் சரியான காப்பி தரப்பட வேண்டுமென்பான். கலவையில் சிறுமாற்றமிருந்தாலும் சுவை கெட்டுவிடும் என்று கூறி அதை உடன் சரிசெய்து காட்டுவான்.அவன் புகழுக்கு களங்கமாக இருந்த அவன் தனித்துவம் இன்று அவனை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.கலையழகோடு பல பயன் பாட்டுப் பொருட்களை வடிவமைக்கும் துறையில் அவன் இருக்கிறான்.விவாதத்திற்குரியதாய் இருந்த அவன் தனித்துவத்தை சரியாக மடை மாற்றம் செய்து உலக அளவில் புகழ் பெறும் வாய்ப்பைப் பெறுகிறான்.
பல சமயங்களில் தனித்துவம் பேராசை, சுயநலம் ஆகியவற்றோடு தவறாக சேர்த்து பார்க்கப்படுகிறது.உண்மையில் அது அவற்றிலிருந்து மாறுபட்டது.எந்த ஒரு தனித்துவத்திலும் அடிப்படை குணம் ஒன்று கலந்திருக்கும்.அதுதான் பிறர் உணர்வுகளை புரிந்து கொள்வதற்கு அப்பால் சென்று அவற்றை தன்னுள் எதிரொலிக்கச் செய்வது.ஒருவருடைய தனித்துவத்தில் அது சிறிதளவாயினும் கலந்திருக்க வேண்டும்.அது முற்றிலும் இல்லாத போது தனித்துவம் தன்னை மட்டும் முக்கியமாக கருதுகின்ற கர்வமாகிறது.ஏனென்றால் தனித்துவம் எப்போதும் நல்லுறவை நாடி அலைவுறும் மெல்லிய இழை போல இயங்குகிறது.அதனால் தான் அது எல்லோராலும் ரசிக்கும் படியாக இருக்கிறது.முழு சுயநலம் தன்னை தனித்துவம் என்று சொல்ல முனைவது இதனால் தான்.அது தன்னை மறைத்துக் கொள்வதற்கு தனித்துவம் என்ற ஒன்றை போர்வையாக பயன்படுத்துகிறது.ஆனால் அதற்கு புழுங்குகிறது. ஏனென்றால் அதற்கும் தனித்துவத்திற்குமான குணங்கள் எதிர்மறையானவை.இரண்டும் எதிர் திசைகளில் பயணிப்பவை.தனித்துவத்தை சுயநலம் என்று தவறாக கருதுபவர்கள் இதை உணர்ந்து கொள்ள வேண்டும்.தனித்துவம் பொது நலப்பரப்பில் தான் நன்றாக விளையத் தொடங்குகிறது.மேலும் மேலும் தன் சிறப்புகளை அது வெளிப்படுத்துகிறது.அவ்வாறு தான் இல்லாததால் சுயநலத்திற்கு பல புதிய ஒப்பனைகள் தேவைப்படுகின்றன.அடர்ந்த காட்டில் சில ராட்சத மலர்கள் இருக்கின்றன.அவை பல வண்ணங்களோடு தொலைவில் தெரிகின்றன.அவற்றை நெருங்கிச் செல்லும் போது அவை பரப்பும் துர்நாற்றமும் லேசாகத் தெரிகிறது.அதற்காகவே அவை புதுப்புது வண்ணங்களைக் காட்டுகின்றன. அவற்றினருகே சென்று தொட்ட போது உடைந்து நாறுகின்றன. ஒருவர் மற்றவற்றை விலக்கி தன் உண்மையான அர்த்தமுள்ள தனித்தன்மையைக் கண்டு நேர்மையால் அதை சூல்கொள்ளச் செய்ய வேண்டும். அப்போது வாழ்வின் பொய்க் கலப்பில்லாத நிறைவைக் காணமுடியும்.
வடிவங்களை எப்படி மாற்றியும் உண்மையான தனித்துவத்தை செயற்கையாக உருவாக்க முடியாது.அதுதான் தனித்துவத்தின் தனித்தன்மையா?
நன்றி : புதுப்புனல் பிப்ரவரி 2011 இதழ்
நம் எல்லோர் மனதிலும் ஒரு கேள்வி உண்டு.வாழ்வின் அர்த்தம் நாம் வாழும் வாழ்க்கைக்குள் புதைந்து கிடக்கிறது.பறவைகளும் விலங்குகளும் இதைப்பற்றி சிந்திப்பதில்லை. கேள்விகள் இயல்பாகவே தோன்றுகின்றன.அவையே நம்மை மற்ற உயிரினங்களில் இருந்து வேறுபடுத்துகின்றன.கேள்விகள் நம்மை செம்மை படுத்துவதோடு நம் வாழ்க்கை பயணத்திற்கும் உறுதுணையாய் இருக்கின்றன.கேள்விகளை புறக்கணிப்பது எதற்கும் தீர்வாகாது.கேள்விகளில் இருந்து யாரும் தன்னை விலக்கி வைத்துக் கொள்ள முடியாது.அவை நம் தாகமும் பசியும் போன்றவை.விடைகளை காண்பது முழுமையாக வாழ்வை ஏற்று அதன் இயல்போடு சற்று இயைந்து மகிழ்ச்சியை ருசிப்பதற்குத்தான்.
