குகை வாய் பயணம்
ஐயப்பாட்டின்
அகன்ற
குகை வாய்க்குள்
நுழையும்
ரயில்
வெளி
வந்த பின்னும்
விலகாத
இருள்.
அச்சம்
பரவி யிருக்க
பயணம்
தொடரும்.
ஆபத்தைத்
தாண்டிக் குதிக்க
இன்னும்
தென்படவில்லை
சேர
வேண்டிய
ரயில்
நிலைய நடைமேடை .
உராய்ந்தபடி நிற்கும் சக்கரங்கள்,
நெஞ்சை
நிறுத்திக் குலுக்கிய
வதந்தி
யொன்றை
மீண்டும்
மீண்டும்
நினைவு
படுத்தி
செவிப்பறையைக்
கிழிப்பவை.
வண்டிக்குள்
தாவுகின்ற
மோப்ப
நாயோடு
நுழைந்து
வெளியேறும்
குளிர்க்
காற்று
சந்தேகத்தைத்
துடைத்துச்
சென்று
விடுமென்று
ஏக்கத்தில்
விரியும் விழிகள்.
உள்ளங்களைச்
சிதறி விழச் செய்யும்
வாசனையை
நுகர
நாயின்
மூக்கு நீளும்.
அது
விடும் வெப்பக் காற்றை
விடாமல்
பற்றிக் கொண்டு
பெருமூச்சுகள்
தொடர்கின்றன.
மார்போடு
அணைத்த
குழந்தையின்
காதுகளில்
அதிரும்
நெஞ்சத்தைக்
கடந்து
செல்லும் நாய்
ரயில்
பெட்டியின் நடை பாதையெங்கும்
பதிக்கும்
கால் தடங்களில்
நம்பிக்கையின்
முத்திரை.
வேகமாய்
முன்னேறும்
நாயின்
இரைப்பொலி
பதற்றத்தின்
செவிகளைக்
கவ்விக்
கொண்டு செல்லும்.
ஐயத்தின்
தடித்த வாய் திறந்திருக்க
எச்சில்
ஒழுகும் நாவின் ஊசலில்
ஒரு
நூறு உயிர்கள்...
நன்றி : புதுப்புனல் ஏப்ரல் 2015
தோல் பாவை
[ I ]
முடிவும் தொடக்கமும்
முழுமையாக அறியப்படாத நாடகத்தில்
ஒரு காட்சி.
அதில் பூமி என்பது
நெருப்புக் கடல் கோளமாக
சுழல்கிறது.
அதற்கு சற்று முன்னரே
பூமி உருவான அதே
புழுதி, வாயு மேகப்
பெரும் பஞ்சு சமுத்திரத்தில்
பெரும்பாலன பகுதி
திரண்டு பற்றி
கதிரவன் என்று தன்னை
நிலை நிறுத்தி
எரிய ஆரம்பித்துவிட்டது.
ஒளிர் குழம்பு
பூமிக் கோளத்தின்
மேற்புறம் குளிர்ந்து
பாறை எலும்பு
மண்சதை என
பூமியின் உடல் உருவாகும்.
உள்ளே மூளையாக
இறுகிய பெரும் உலோக
மைய உருண்டை.
அதைச் சுற்றி
வேகமாக சுழல்கிறது
உலோகக் குழம்பு உயிர்.
மேலே அழகிய
உடல் அங்கங்கள் அமைந்தன.
மலைகள்,சமவெளிகள்
ரோமக்காடுகள்.
விண்வெளியிலிருந்து பார்க்கும்
போது
பூமியின் உடல் அங்கங்கள்
சிறிதாகிக் கொண்டே வந்து
திட்டுகளாய்த் தோன்றும்.
உறுப்புகள், வளைவுகள்
ஓரளவு தெரிய
பூமி என்ற தோல்பாவை
அசையும்
பெரும் சூரிய விளக்கு
ஒளியில்…
[II]
செத்த மிருகத்தின்
தோலை யுரித்து
கழுவி காயா வைத்துப்
பதப்படுத்திய பின்
வரையபட்ட ஓவியம்
திரையின் பின்னால்
உயிர் பெற்று அசைகிறது
தோல் பாவையாக.
பூமியெங்கும் பல கோடி
உயிர்கள்
ஓர் உடலோடு
கூத்தில்
நடிக்க வரும்.
மனிதன் ஒருவன் வாழ் நாளில்
காண்பது
மிகவும்
மாறுபட்ட ஒரு
தோல்பாவை கூத்து.
மனித உடலில்
இரத்தம் பாயும் வேகத்தில்
எண்ணங்கள் அலை மோதும்.
பிடிவாதங்கள்
தசைகளோடு இறுகி
வலிமை சேர்க்கின்றன.
ஆழ்மன லட்சியங்கள்
எலும்பாக வார்க்கப்பட்டு
நிமிரும் தண்டுவடம்.
இது முதல் பகுதி.
இரண்டாம்
பகுதியில்
என்றோ ஒரு நாள்
ஒரு நொடி
அவனோடு ஒட்டிக் கொண்டிருக்கும்
எண்ணங்களெல்லாம் மறந்து
தன்னுள் ஒடுங்கிப் போகும்
மனிதனிடம்
எஞ்சி இருப்பது
‘நான்’
என்ற
பிரக்ஞை மட்டும்.
மற்ற எல்லாம் சற்று
மறைந்து கொண்ட பின்
தோலாக மீந்து ஒட்டியிருப்பது.
அதுவே இப்போது
நடக்கவிருக்கும் கூத்திற்கான
அழகிய
தோல்பாவை.
[ III ]
படபடப்பு, ஆவேசம்
அபிலாசைகள்
அனைத்தும்
ஒருகணம்
- ஒரு கணம்
மட்டும் தான்
நின்று போகும் போது
‘நான்’
என்ற
தோல்பாவை கூத்து
தொடங்கும்.
இதுவரை உடலோடு சேர்ந்து
அனைத்திலும்
இயங்கியதுதான் அது.
ஆனால் இப்போது
‘நான்’
தனியா நடிக்கிறது.
தோல்பாவை உருவம்
அசைகிறது.
கண்கள் உருண்டு
பெரிதாகிறது.
வண்ணகள்
கூடிக் குறைந்து
மிரட்டும்.
குரல் கம்பீரமாக
பேசிப் பாடுகிறது.
இப்போது தான்
‘நான்’
உள்ளத்தின் திரையில்
ஆடிக்குதிப்பது மனிதனுக்கு
அழுத்தமாகத் தெரிகிறது.
பூமித் தோல்பாவை
தொடர்ந்து நடிக்கும்
கூத்தின் குட்டி வடிவம்
மனிதனின்
‘நான்’
தோல்பாவைக் கூத்து.
கூத்துக்கு ஒளி வேண்டும்.
மனிதனின் உடலுக்குள்
இருக்கும் உயிர்
அள்ளி வழங்குகிறது
அதற்குத் தேவையான
ஒளியை.
எல்லாம் ஒரு கணம்
துடைத்து நீக்கி
‘நான்’
என்ற தோலை
மட்டும்
அழகிய உருவமாக வெட்டி
வண்ணம் பூசி
அசைய விட்டுப்பார்ப்பது
போதத்தின் கூத்து.
[IV]
இதுவரை காணாத
அந்தக் கூத்தில்
உடல் கரைகிறது.
எண்ணங்கள்
வெள்ளத்தின் நுரையாக
காற்றில் ஆவியாகி
மறைகின்றன.
தன்னை இன்னும்
தனியாக பிரித்துக் காணும்
உணர்வு உள்ளத்தின்
ஒரு மூலையில்
இருக்கிறது..
அது மெல்லிய படலமாக
விரியும் போது
தோல் பாவை ‘நான்’
உருப்பெறும்.
இந்த தோல் பாவைக்
கூத்தில்
உடல் இருப்பதே தெரியவில்லை.
நினைவுகளுக்கு அங்கு
வேலை கிடையாது.
இது கனவுகளற்ற தூக்கமும்
இல்லை.
ஒரு பறக்கும் உணர்வு.
இதில் உள்ள நுட்பமான
அதிர்வாக
தான் ஒரு தனி
ஜீவன் என்ற விழிப்புணர்வு இருக்க
அது ‘நான்’ என்று கூறுவது
எங்கோ வெகு தொலைவில் ஒலிக்கிறது.
அதில் உள்ளது ஆணவத்தின்
எச்சங்கள்
மட்டும்.
மங்கலான ‘நான்’ என்ற படலம்
தோல் பாவையாக அசைவதை மனிதன் உணர்கிறான்.
அதில் ஆணவத்தின் புள்ளிகள் தோன்றி மறைவது
மெல்லிய திரையொன்று அசைவதை
நினைவுறுத்துவதற்காக.
இந்த தோல்பாவைக் கூத்து
சுவாரசியமாகிறது.
கம்பீரமாக குரலெடுத்து
பாடி நடித்து
குதித்தாடத் தொடங்கும் தோல்பாவை.
சற்று ஓய்ந்து மீண்டும்
அசைந்து தொடர்கிறது கூத்து.
அசைவுக்கும் ஓய்வுக்கும்
இடையில் இருப்பது
மிகக் குறுகிய கால
இடைவெளி.
அதில் கவனத்தை
வைக்க முனையும் மனிதன்.
நொடியின்
நுண் பகுதியில்
அசைவற்ற
‘நான்’
தோல் பாவையின் ஓரத்தில் தெறிக்கும்
உயிரின் ஒளிக்கற்றை.
‘நான்’
என்ற தோல்பாவை
உருவத்தின் ஓரம்
முழுவதும்
ஒளிக் கோடு ஓடி
அதன் வடிவத்தை
வரைந்து காட்டும்.
வெளிச்சத்தை
மறைத்துக் கொண்டிருக்கும் தோல்பாவை
இந்த ஒரு மிகச்சிறிய
கணம்
அசைவற்றிருக்கிறது.
ஓரத்தில் வழிந்த ஒளி
அதன் மேல் பரவ
தகிக்கிறது
தோல்பாவை.
அதன்
தோள்களில் குதிக்கும்
ஒளிப்போட்டான்கள்
நிகழ்த்துவது
கற்பனைக்கு எட்டாத
நின்றும் நில்லாத இயக்கம்…
நன்றி : புதுப்புனல் ஜனவரி 2014
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முகக்குறி
செத்த
மரத்துண்டைச்
செதுக்கி
உருப்பெரும்
முதல்
அச்சு.
கலை
உயிர் முளை விட்டு
உணர்வுகள்
துளிர்க்கும்.
அதை
வைத்து
அடுத்தடுத்து
கலைஞன் செய்யும்
வார்ப்புச்
சிலைகள்.
உணர்வுகள்
நெளியும் வளைவுகள்
உடலெங்கும்...
இயற்கை
சிற்பி
என்றோ
எப்போதோ
மனிதனின்
முகத்தை
கற்பனை
செய்து உருவாக்கியது
பரிணாம
அச்சு.
அதை
வைத்து
தொடர்ந்து
பல கோடி யாண்டுகளாக
அது
செய்த வார்ப்புகளில்
பல
நூறு மிருக முகங்களின் வரிசை...
தான்
தோராயமாக
நினைவில்
செதுக்கிய
மனித
முகத்தை யடைவது
இயற்கையின்
இலக்கு.
அதை
முழுமையாகக் காணும் வரை
மரபணு
மாற்ற மாயாஜாலங்கள் புரியும்.
பல்வேறு
இனக்கிளைகளில்
வார்ப்புக்
கொத்துகள்.
சளைக்காது
இயற்கை
வார்பு
வேலையைத் தொடரும்.
இறுதியில்
அகப்பட்டது
இதுவரை
அது தேடிக் கொண்டிருந்த
மனித
முகம்.
வார்ப்பில்
தெரிவது
என்றோ
ஆதியில்
இயற்கை
கற்பனை செய்த
ஒரு
மனித முகம்.
கலைஞன்
தன் படைப்பைக்
கைகளால்
தொட்டு
மகிழும்
வேளை.
இயற்கை
அதிர்ச்சியில்
சற்று
உறையும்.
வார்ப்பில்
கிடைத்த
முகத்திற்குள்
திரளும்
மற்றொரு
முகம்
பகுத்தறிவு.
பூமி
இதுவரை காணாத
புதிய
முகம்.
அதிலிருப்பது
சிரிப்பா
அல்லது துயரா என்ற புதிரை
அலட்சியம்
செய்யும் இயற்கை.
இன்னும்
வளர்கிறது அதன்
வார்ப்புக்
கலை ...
நன்றி : புதுப்புனல் மார்ச் 2013
வால் நட்சத்திரம்
அலுவலக பேட் மிண்டன் குழுவில்
மிகச் சிறந்தவர் அவர் தான்.
வாயில்லாப் பூச்சி.
ஆனால் விளையாடும் போது
புள்ளிகளைக் கொத்தும் பருந்தாகிறார்.
அவர் பந்தைத் திருப்பும் லாவகத்தை
எதிரணியில் உள்ளவர்கள் பார்த்து
மயங்குவதுண்டு.
ஆடத்தெரியாதவர்கள்
அவர் அடிக்கும் பந்தின்
முன்னும் பின்னும்
பாக்கு உமிழ்நீரை
துப்பிப்பார்த்தார்கள்.
அது ஒவ்வொரு முறையும்
பந்தோடு வந்து
அவர்கள் சட்டையில் படிகிறது.
மைதானத்தை
சரி பாதியாகப் பிரித்து
வலை கட்டுகிறார்கள்.
விளையாடும் போது
நான் கவனித்திருக்கிறேன்.
அவரையும் சிலர் இரண்டாகப்
பிரிக்கிறார்கள்.
அவர் சில வேளை அணிமாறி விளயாடுகிறார்.
அப்போது
தங்களைக் கைவிடமாட்டார் என்பது
சற்று முன்னர்
அவரைத் தூற்றியவர்களின் நம்பிக்கை.
இரண்டாகப் பிரிக்கப்பட்ட அவர்
ஒரு பகுதியில்
உமிழ்நீர் விளையாட்டுக்கு
உடன்பட வேண்டும்.
எதிர்ப்பைக் காட்டி
அந்த சண்டை விளையாட்டுச் சேற்றுக்குள்
அவரும் குதிக்க வேண்டுமென்று வரும் ஆவல்.
அவர் அணிமாறி
அவர்களோடு சேர்ந்து ஆட வரும் போது தோன்றும்
எதிர்பார்ப்பு வேறு.
அவருக்குள் இருக்கும்
இரண்டாம் பகுதி
எதிர் பக்கம் பந்தை விரட்டியடிக்கும் வேகத்தோடு
அவர்கள் மீது இப்போது
நேசத்தைப் பொழிய வேண்டும்.
அவர்களை அறியாமல்,
சற்று முன் கண்களுக்கு
எதிரியாக இருந்தவரின்
ஒரு பாதியை
இப்போது நேசிக்கிறார்கள்.
பந்து அடிக்கப்படும் போது
எப்பக்கமது மட்டையால் தொடப்படுமென்று
யாரும் அறியார்.
பந்து தன்னை இரண்டாகப்
பிரித்துக் கொள்வதில்லை.
பந்தைத் திருப்பி அடிக்கும் நாம் தாம்
வேறுபாடு காண்கிறோம்.
பந்தை மட்டை அடிக்கும் பக்கம்
நமக்கு வேண்டாத பக்கம்.
நம் கோபத்தின் விசையைப் பெற்று போவது.
பந்தின் அடுத்த பாதி
நாம் நினைத்த திசையில் சென்று
வெற்றியை
நமக்குக் காட்ட பாயும்.
அதனால் அது நம் பிரியத்திற்குரியது.
வாழ்வில் தொடரும்
நிகழ்வுகளின் ஆட்டத்தில்
முடிந்தவரை நேர்த்தியாகப்
பங்கேற்பவர்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் அடிக்கும் பந்து செல்லும் திசையை
சரியாக சிலர் அவதானிப்பது
ஆடுவதற்காக அல்ல
பந்தின் பின்னால்
உமிழ் நீரையும்
சில வேளை
பன்னீரையும் தெளிக்க.
விண்கற்களையும், தூசியையும்
இழுத்துக் கொண்டு
வானத்தில் செல்லும் வால் நட்சத்திரம்
பந்தாகப் பறக்கும் அவர்கள் ஆடுகளத்தில்...
நன்றி : புதுப்புனல் [ஆண்டு மலர்] ஜனவரி 2013
தொடர் ஓட்டம்
[1]
தொடர் ஓட்டப் பந்தயத்தில்
ஒரு குறுங்குழல் கைமாறும்.
ஓடி ஒதுங்கிக் கொள்பவன் தருவதை
அடுத்தவன் வாங்கிக் கொண்டு விரைவான்.
கை பற்றியிருக்கும் சிறு குழல்
ஓடும் கால்களின் வேகத்தை
நுழைந்து வெளியேறும்
காற்றில் வார்க்கும்.
தன் ஆயுள் கால நாள்களுக்குள்
நுழைந்து வெளியேறுபவன் மனிதன்.
காணும் அனைத்தும்
திரட்டிக் கொண்டதாக
எண்ணும் வேளை
உடன் முடிந்து விடலாம்.
மரணத்தில்
காற்றாக அவன் வெளிப்படுமிடம்
ஆயுள் முடியும் முனை.
துய்ப்பவை, சேர்ந்தவை எல்லாம் அப்போது
கலைந்து மறையும்.
வாழும் நாள் வீணாகாது.
காற்றாக மனிதன் புகுந்து வெளியேறும்
ஆயுள் குழலில்
வளர்ச்சியின் இசை கேட்கும்.
களைப்பு நீக்கும்
கலையல்ல அது.
விண்ணைப் பிளக்கும்
ரீங்காரம்.
பூமியின் மேலெழும்
வானுயர்ந்த கட்டடங்கள்
வளர்ச்சியின் அசுரக்கரங்கள்.
விண்ணில் தூக்கி எறிந்து விளையாடும்
சிறு பொருளாகத் தென்படுகிறது
விண்வெளி ஓடம்.
[2]
வளர்ச்சியின் தொடர் ஓட்டம்
என்றுமே நிற்காது.
புதிது புதிதாக
இலக்குகள் முளைக்கும்.
தொலைவிலிருக்கும் இலக்குகளின் வாசனையை
குறுங்குழலால் நுகர்ந்தபடியோடும் மனிதன்.
குழலை அடுத்தவனிடம் கொடுத்து விலகுபவன்
ஓட்டத்தின் முடிவை அறிவதில்லை.
வாழ் நாளுக்குள் அவன்
வளர்ச்சியின் ஓர் இலக்கைக்
காண்பான்.
அவன் மீதிக் கனவுகள்
அவனோடு மரிப்பதில்லை.
அவனிடம் குழல் பெற்றவன்
அதன் வழியே
அவை நிகழும் வழி காண்பான்.
இறந்தவன் பிறந்தால்
வாழ்க்கையின் தொடர் ஓட்டத்தில் இணைவான்.
அவனுக்கு இப்போது அது
புதிய ஓட்டம்.
பிறப்பு வைக்கும் ஒருமுற்றுப்புள்ளி
நினைவுகளின் சவப்பெட்டியிலறைந்த
கடைசி ஆணி.
அடைந்த பழைய இலக்குகளும்
அவை தந்த ஊக்கமும்
அவனோடு சாவில் மண்ணில் கலந்தன.
ஒரு வகையில் புதியவனாகப் பிறந்து
ஓட்டத்தில் கலந்த அவன்
உள்வாங்கும் மூச்சுக் காற்றோடு
புதுக் கனவுகள் நுழையும்.
அடைந்தவைகளில் தன் பங்கை யுணர்ந்து
அடுத்த இலக்கு நோக்கி விரையும் மனிதன்.
அவன் ஆயுள் லட்சியங்கள்
மீண்டும் கைமாறும் வரை
அவன் ஓட்டம்.
அந்தக் கால அளவில்
கிடைத்தவை அவன் எதிர் நோக்குபவை சேர்ந்து
அவன் வாழ்க்கை.
என்றும் முடிவறியப்படாத
தொடரோட்டம் ...
அணுமரம்
[1]
இந்தக் கப்பல்
மிதந்து செல்லும் கடல்
ஒரு கரைகளற்ற வெளி.
இது ஒரு நன்னீர்க் குளத்தை
சுமந்து கொண்டு சுற்றுகிறது.
கப்பலுக்குப் பெயர்
பூமி என்றார்கள்.
உயிர்கள் தளைக்குமிதன்
அபூர்வ நன்னீர்க் குளம்,
பெரும் வெளிக்கடலில் மிதந்து திரியும்
வேறு எந்தக் கோள் கப்பலிலும்
இருப்பதாகத் தெரியவில்லை.
நகர்ந்து செல்லும்
கப்பல் குளத்தில்
மீன்கள், நத்தைகள்
இன்னும் பல உயிரினங்கள்.
இவைகளோடு சில
தவளைகளும் வாழும்.
ஒரு நாள் தலை பெருத்து
தவளைகளுக்குப் பகுத்தறிவு
முளைத்தது.
கரையில் கிடப்பவை
தோலை நீரில் துவைக்கும்
காற்றில் காய வைக்கும்.
உணவைத் தேடி யோடும்.
இந்தத் தவளைகளுக்கு
இப்போது இலையாடை அலங்காரம்
அவசியமானவை.
நெடுந்தொலைவு செல்வதற்கு
சிறு மர வண்டி.
நேரம் இனிமையாகச் செல்வதற்கு
நார் தந்தி இசைக்கருவி மீட்டுபவை தவளைகள்.
குளத்தின் உயிர்களில்
பாதியைத் தின்று அழித்து
ஏப்பம் விட்ட தவளைகளில்
ஒன்று பாடியது.
“இந்தக்குளம்
தவளைகளுக்காகவே
வானிலிருந்து ஒரு நாள்
கிழே இறங்கியது.
இப்போதும் இது இருக்கும் பூமிக் கப்பலை
சில ராட்சதத் தவளைகள்
இந்த வெளிக் கடலில்
இழுத்துக் கொண்டு
திரிகின்றன.
குட்டி போடு
குடும்பத்தைப் பெருக்கு.
குளத்தைக் கூறு போடு.
ஒரு குடும்பத்துக்கு
ஒரு குட்டிக்குளம்”.
பூமியின் மொத்த இயற்கை வளம் தான்
அந்தப் பெரும்குளம்.
அதன் நீரை இறைத்து
வீட்டுக் குளத்தை நிரப்பும் போட்டியில்
பெரும் குளம் சூறையாடப்படும்.
குளத்தின் கரையில் பறக்கும்
முன்னேற்றத்தின் கொடிவரை தாவும்
தவளைகள்.
வளர்ச்சியில் உயரும்
புகைபோக்கிகள்.
பல வண்ணப் புகைகள் நெளிந்து
தவளைகளின் வெற்றியை அறிவிக்க
கொடிகளாயசைகின்றன.
[2]
ஒவ்வொன்றும் தன் வீட்டுக் குளத்தில்
நீரூற்று அமைத்துத் துள்ளி மகிழும்.
பல்லாயிரம் ஆண்டுக்கானது
மொத்தமாக உறிஞ்சி எடுக்கப்பட்டதால்
பெரும் இயற்கைக்குளம் சாக்கடையாகும்.
குறட்டை விட்ட தவளைகள் விழித்துக் கொண்டு
கத்துகின்றன
“இயற்கை அழிகிறது
உயிர்க்குளம் இல்லை யென்றால்
யாருக்குமிங்கு இடமில்லை”.
தவளைகள் புத்திசாலிகள்.
கொடியவை யல்ல.
உணர்வுகளின் அடிமைகள்.
பஞ்சத்தின் போது
குட்டிகளைத் தின்ன அனுமதிக்காத
நாகரிக பாரம் சுமப்பவை.
செல்லும் வழியெங்கும்
மகிழ்ச்சியை ஒவ்வொரு நொடிப் பொழுதும் துய்க்க
அவற்றின் பேராசைப் பாய்ச்சல் தொடரும்.
வளமான வாழ்வு நாடி
புகை போக்கி மரங்களை நட்டனர்
விஞ்ஞானிகளோடு சேர்ந்து
பல்துறை வல்லுனர்கள்.
அவர்கள் கொடுத்த
பெரும் கொடை
அணுமரம்.
அணுவைப் பிளந்து
வளத்தைப் பெருக்கி
தேவைகளைப் பூர்த்தி செய்வது
அணுமரம்.
இது ஒப்பற்ற செயற்கை வளத்தை
அள்ளித் தருவது.
புகை போக்கி மரங்கள்
நிலத்தைப் பெயர்த்து
புகை போர்வையால்
உயிர்களை யழுத்தும்.
அதிக தொந்தரவு தராதது
அணு மரம்.
இதனால் உலகுக்கு
மாசு இல்லா வளம் கிடைக்கிறது.
அதன் வேர்கள் பரவி
நிலத்தைப் பிளப்பதில்லை.
ஆனால் அவற்றின் இலைகளிலிருப்பது கொடிய விஷம்.
விழிப்புணர்வும், பாதுகாப்புமிருக்கும் வரை
எந்த ஆபத்துமில்லை.
உலகம் இயங்க
சக்தியைத் தொடர்ந்து வழங்குவது
அணுமரத்தின் இயல்பு.
முதல் அணுமரம் நட்டு
அரை நூறு வருடங்கள் கடந்து விட்டன.
ஆனால் அதற்கு முன்னரே
பல்வேறு வழிகளில்
குளத்தைச் சலித்தெடுக்கத் தொடங்கின தவளைகள்.
வளமெல்லாம் வடிகட்டி எடுத்தபின்
மீந்திருப்பது சிறுகுளம்.
அதில் மிதக்கின்றன
எழுநூறு கோடி தவளைகள்.
உயிர் வாழத் தகுதி இல்லாத வெளிக் கடலில்
மிதக்கிறது பூமிக் கப்பல்.
அறிவும், திறமையும்
நிலமையைத் தெளிவாகக் காணும்
பெரும் கண்களும் கொண்டவை
தவளைகள்.
தன்முனைப்புத் தளைகளில்
விரும்பி சிக்கிக் கொண்டு
உணர்வுகளின் சேற்றால் அவற்றை
மறைக்க முயல்பவை.
பல நூறு கோடி வாய்கள் - தினம்
உணவுக்குத் திறக்கும்.
உலகின் தேவைக்கும்
அதன் மொத்த வளத்தைக் குவித்துக் காட்டும்
குளத்தின் இருப்புக்கும்
எப்படிப் பார்த்தாலும்
எங்கோ உதைக்கிறது கணக்கு.
“குளம் அழிகிறது”.
கத்துகிறோம் நாம்
தவளைகளாக...
விழிக்கின்றன
சிரிக்கத் தெரியாத பறவைகள்.
நன்றி : காவ்யா - தமிழ் ஏப்ரல் 20
சுதை
கண்கள் முயன்று
மறைந்து கொண்ட போதும்
புன்னகை இழையில்
தோன்றி மறைந்தன
புதைந்திருக்கும்
மனச்சுதை சிலைகளின் புதிராய்
மாறும் அபிநயங்கள்.
அகாதம்
வியப்பின் தலைமேல் உயர்ந்த
போல்வால்ட் நெடுங்கம்பு முனையில்
துரும்பெனத்தெரியும்
தெளிவு.
ஒரு சிறு சலனம் தோன்ற சிலிர்த்தது
மேலே வெறித்து
அலுத்தோயும் பார்வை.
தரை இறங்க வரும் பயணத்தில்
எதிர் நோக்கும் ஆவலின்
அசுர விரைவு.
மார்பில் பாதம் பதிய
மூர்ச்சையானது
புதிர் அவிழ்ந்த கணம்.
வாழ்க்கை
உன் மீது
கல்லெறிகிறேன்.
மீண்டும் ஒரு
கல்லை வீசுகிறேன்.
நீ எரிச்சலடைகிறாய்.
தொடர்ந்து உன் மீது
கல் வீசுவேன்.
உன் காலடியில் இருக்கும்
தங்கக்காசை
நீ பார்க்கும் வரை...
முழுமை
அலைகளை வீசி
ஓய்வற்றிருக்கிறது
ஒரு கடல்.
எல்லாம் தன்னகத்தே வைத்து
விரிந்து பரவி
அசைவற்றுக் கிடக்கும்
மற்றொரு கடல்
முழு வானத்தையும்
வெறித்துப் பார்த்து
படம் பிடிக்கிறது.
அனைத்தும் கொண்ட
அதனோடு
இப்போது ஒரு
வானம்.
வரும் மனிதருக்கு
வழி சொல்ல
சிதற விட்டுச் செல்லும்
நம்பிக்கை கற்களில்
மூதாதையரின் பல்வேறு முகங்கள்.
பிரமாண்ட பிரமிட்டின் முனை சிதைந்து
காலமா யுருண்டு
தரைக்கு வரும் கல்.
அதை உற்று நோக்கும்
ஆய்வின் கண்களில்,
மேலே சிதைந்த பகுதியில் பட்டுச் சிதறும்
கதிரொளி.
காலத்தை குத்தி நிறுத்த
ஒரு மனிதன் எழுப்பிய
பிரமிட்டின் முனையில்
அவன் மூக்கு மழுங்கியதாய்
எண்ணி வருகிற சிரிப்பு
பாலைவனத்தில் எதிரொலிக்கும்.
குளிரூட்டப்பட்ட
பெரிய அறையில்
உலகப் பொருளாதாரத்தை
ஒரு நொடியில்
ஏற்றயும் இறக்கவும்
வலிமை கொண்ட கரங்கள் தொட வரம் பெற்ற
லேப் டாப்புகளின்
அணிவகுப்பு.
சொர்க்கத்தைக் காட்ட முனைந்த
பிரமிட்டின் முனையைத்
தோற்கடிக்கும் விரல்முனை கட்டும் திசையில்
உலகம் திரும்புகிறது.
மேசையின் மேல் ஒளிரும்
சிறு கண்ணாடிப் பிரமிட்
கூட்டத்தின் நிறைவில்
குடித்த நீரோடு சென்று
தொண்டையில் லேசாக
அடைத்து மறையும்.
வானுயர்ந்த பிரமிட்டின் பிரதிபலிப்பாய்
மண்ணில் புதைந்திருக்கு மெப்போதும்
மனிதகுல நம்பிக்கைகளின்
ஆணிவேர்.
- நன்றி : திண்ணை இணைய தள இதழ் ஜூன் 26 2011