இப்பக்கத்தில் துவாரகை தலைவனின் நூல்கள் பற்றிய தகவல்கள், விமர்சனங்கள் ஆகியவற்றைப் படிக்கலாம்.



துவாரகை தலைவனின் தோல் பாவை நூல் விமர்சனம் :
இலக்கியத்தைப் போற்றாத நாடு முன்னேறாது.அரசியலுக்கும், சினிமாவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் இக்காலத்தில் கவிதைத் தொகுப்பைக் கொண்டு வருவது வலி மிகுந்த ஒன்று. துவாரகை தலைவனின் முதல் கவிதைத் தொகுப்பு தொடங்கி அவர் கவிதைத் தொகுப்புகளை நான் வாசித்து வருகிறேன். அவற்றோடு பல கட்டுரை தொகுப்புகளையும் அவர் எழுதி வளர்ச்சி கண்டிருக்கிறார்.
இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் அனைத்ததும் ஒரே அமர்வில் தொடர்ந்து படித்து முடிக்கும் படியாக அமைந்துள்ளன.அவற்றுள் ‘அதிர்வலைகள்’ என்ற தலைப்பில் ஒரு பிணவறை தொழிலாளியின் அனுபவத்தைக் காட்டும் கவிதை அச்சத்தைத் தருவதாக இருந்தாலும் மனதை விட்டு அகல மறுக்கிறது.
உடல் கோணியைத் தைப்பவன்
கண்ணீர் விடாதவனல்ல
அதிர்ச்சியை,சோகத்தை
தனக்குள் ஒரு மூலையில் வைத்து தைத்து விட்டு
இரக்கமற்ற ஊசி முனையால்
தொழிலில் பின்னிக் கொள்கிறான்
மேலும் அந்த நெடுங்கவிதையின் பரிமாணம் விரிவடைகிறது.ஓரிடத்தில் வெடிகுண்டு வெடித்து மனித உடல்கள் சிதறிக் கிடக்கின்றன.
வெடி குண்டை வைத்துப் போனவன்
எந்தப் பதற்றமுமின்றி
தூக்கி வீசப்பட்ட
உடல்களின் எண்ணிக்கையை
யாரிடமோ சொல்லி முடிப்பான்....
உறவினர்களின் கனத்த உள்ளத்தை
மிதித்துத் திரும்பும் அவன் லட்சியம் ...
இன்னும் இந்தத் தொகுப்பில் உள்ள பல கவிதைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.’அணு மரம்’ என்ற கவிதை மனிதர்களின் வளர்ச்சியையும், அறியாமையையும் ஒரு சேர வெளிப்படுத்துகிறது.
ஒரு நாள் தலை பெருத்து
தவளைகளுக்கு
பகுத்தறிவு முளைத்தது.
ரெளத்திரம் வெளிப்படும் விமர்சனக் கவிதைகள் அழகியலோடு வந்திருக்கின்றன.கவிஞன் தன் நியாயமான கோபத்தை இதைவிட வேறு எப்படி வெளிப்படுத்துவது.அவன் தளம் கவிதை தானே.
- கவிஞர் அய்யப்ப மாதவன்
நன்றி : காவ்யா- தமிழ் அக்டோபர்- டிசம்பர் 2014 இதழ்
துவாரகை தலைவனின் இரு நூல்கள்: I தோல்பாவை II தோள் மேல் படகு வெளியீட்டு விழா ஏற்புரை :
இடம் : இக்சா அரங்கம்
நாள் : 08- 02- 2014
மனிதனின் நிலை
போர் வீரன் ஒருவன் அடைக்கலம் தேடி உங்களிடம் வருகிறான்.அவன் பல மையில் தூரம் நடந்து வந்த களைப்பில் இருக்கிறான். அவன் உடலில் பல இடங்களில் காயம்.அவன் நன்றாக சாப்பிட்டு நீர் அருந்தி இரண்டு நாள்கள் ஆகின்றன. அவனுக்கு காய்ச்சல் இருக்கிறது. இந்த நிலையில் அவனிடம் நீ யார்? எந்தப் போரில் கலந்து கொண்டு இங்கு வருகிறாய்? போரில் யார் வென்றார்கள்? என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க முடியாது.முதலில் அவன் காயங்களுக்கு மருந்து போட வேண்டும். அவனுக்கும் கொஞ்சம் உணவும், ஓய்வும் வேண்டும். அதற்கு பிறகு தான் முழுமையான விசாரணை நடத்த முடியும்.அந்தப் போர் வீரன் நிலையில் தான் நம் ஒவ்வொருவருடைய மன நிலையும் உள்ளது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆனால் உண்மை அதுதான்.நம்மிடம் எத்தனை விதமான நம்பிக்கைகள் உள்ளன.மதத்தைப் பின்பற்றுகிறோம், சிலர் நாத்திகம் பேசுகிறார்கள். அவர்களில் மிகுதியானவர்கள் உண்மையான கடவுள் மறுப்பாளர்கள் அல்ல.சிலருக்கு தங்கள் கொள்கையில் வெளியே காட்டமுடியாத நம்பிக்கையின்மை. ஆத்திகவாதிகளும் கட்சி மாறுபவர்கள் தாம் . அவர்களுக்கு தான் உண்மையிலேயே நம்பிக்கையின்மை வருகிறது.கலாசாரத்தை எப்போதும் உள்ளத்தின் ஆடையாக அணிந்து கொண்டிருப்பவர்கள் நாம்.அதிலும் உள்ளன பல்வேறு கலவைகள்; முரண்பாடுகள்.இவை எல்லாம் ஒரு வகையில் தனி மனித வாழ்வோடு தொடர்புடையவை. சமுதாயத்தை இயக்குகின்ற ஆட்சி முறை அதை செதுக்கும் சித்தாந்தம் ஆகியவை எல்லாம் கூட சிக்கல் நிறைந்த கலவைகளாகவே உள்ளன. ஜன நாயகம் நாம் விரும்பி ஏற்றுக் கொண்ட ஒன்று. பழைய காலத்தில் இருந்த குடியாட்சியின் போது உலகின் பல இடங்களில் வேர் விட்ட ஜன நாயக சிந்தனைகளயும் சேர்த்து தான் நான் சொல்கிறேன். சமதர்ம சமுதாயம் அமைக்க வந்த பொதுவுடமையாக கம்யூனிஸம் உள்ளது.நம் தேசத்தை செதுக்கியவர்கள் உருவாக்க முனைந்தது ஜனநாயக- சோஷலிஸம்; இப்போது அதையும் மாற்றி சந்தைப் பொருளாதாரம். இதில் லாபமும், பண வரவும் தாம் முக்கியம்.ஆதலால் எதனோடு எதுவும் சேரலாம்.இப்போது முதாளித்துவமே பன்னாட்டு நிறுவனங்களிண் வாயிலாக இங்கு பிரவேசம் செய்கிறது. இப்போது சொல்லுங்கள் நாடு எந்த வழியில் செல்கிறது? நம் வழி எவ்வழி? மற்றொரு உதாரணம் சொல்கிறேன். அவர் ஒரு நாடக நடிகர் அவர் வெவ்வேறு விதமான வேஷங்களைப் போட்டுக் கொண்டே இருக்கிறார்.தினம் தினம் வேஷம் போட்டு நடிப்பதுஅவர் வேலை. வேஷம் போட்டு போட்டு அவர் தன் உண்மையான முகத்தை மறந்து விட்டார்.அவர் நிலை போலத்தான் நம் உள்ளம் உள்ளது என்றால் நம்புவதற்கு உங்களுக்கு கடினமாக இருக்கும்.
தன்னிலை நோக்கி செல்வது :
நம்முடைய உள்ளம் ஒரு பெரிய கேன் வாஸ் துணி போல் உள்ளது. அதில் குறுக்கும் நெடுக்குமாக வண்ணக் கோடுகள் போடப்பட்டு இப்போது ஒரு துளி காலி இடம் கூட இல்லாத வகையில் அது பல நம்பிக்கைகளால், கொள்கைகளால் நிறைந்து கிடக்கிறது. ஒப்பனை போட்டு தன் முகத்தை மறந்த நடிகனைப் போலவும், ஒரு வகையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட ராணுவ வீரனைப் போலவும் நம் உள்ளம் உள்ளது.நம் உள்ளத்தினுள் நாம் கொட்டிக் கொண்டவைகளையும், வந்து விழுந்தவைகளையும் நீக்கினால் மட்டும் தான் நம் சுய ரூபம் நமக்குப் புலப்படும் .அப்போது தான் நாம் நாமாக இருப்போம்.உடனே எல்லாவற்றையும் விட்டு விடச்சொல்லவில்லை யாரும்.காதுகளில் மாட்டி இருக்கிற போனை சிறிது நேரம் கழற்றி விடுதலை அடைவதைப் போல் ஒரு நிமிடம் இருக்க முடிந்தால் அங்கே நாம் நம்மை பார்க்கலாம்.அதில் என்ன இருக்கிறது என்று கேட்டால், அனுபவம் வாய்ந்த ஞானியான ஜே .கிருஷ்ண மூர்த்தி கூறுகிறார் அங்கே உண்மையான புதுமை அனுபவம் கிடைக்கும் என்று.மனிதனுக்குள் மாற்றம் என்பது கலப்படம் இல்லாத தனித்தன்மையில் இருந்து தான் தொடங்கும்.பாரதி சொன்னார்
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா இறைவா இறைவா.
சித்தை அசித்துடன் இணைத்தாய் – அங்கு
அத்தனை உலகும் வண்ணக் களஞ்சியமாக
பலப்பல நல்லழகுகள் சமைத்தாய்...
அவர் உரக்கக் கூறுவது வெறும் உலகில் உள்ள மகிழ்ச்சிகளின் பரப்பைப் பற்றியது அல்ல. அது தினம் தினம் மாறி புதுமைகள் விளையும் பூமியைப் பற்றிய சிந்தனை.அந்த வரி தன்னிலை உணர்ந்த ஒர் ஆன்மாவின் வெளிப்பாடு.உலகம் எப்போதும் இயங்கி புதுமைகள் படைத்தபடி இருக்கிறது.இமய மலையில் 6000 அடி உயரத்தில் ஒரு குரங்கை ஆய்வாளர்கள் பார்க்கிறார்கள். இது வரை எதிலும் பதிவாகாத ஓர் இனம் அது. இன்னும் எத்தனையோ கண்டுபிடிக்கப்படாத பறவை இனங்கள் இருக்கலாம்.இது இயற்கையின் இயக்கம். இது நில்லாமல் தொடர்வது.இந்த இயக்கத்தைக் காண தெளிவான தன்னிலையை உணர வேண்டும்.அதுவே புதுமையைக் காணும் மகிழ்ச்சி.
மதமும் கலாசாரமும் :
கலப்படமும் குழப்பமும் நீக்கப்பட்ட உள்ளத்தில் தன்னிலை உணர்ந்த மனிதனுக்கு புதுமைச் சோலையின் கதவுகள் திறக்கின்றன என்று நாம் நம்புவோம். இப்போது சித்தாந்தங்களைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவை இல்லை. உலகம் அதன் தேவைக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்கிறது.ஆனால் தனிமனிதனிடம் உள்ள நம்பிக்கைகளும் அவன் வாழ்க்கை முறைகளும் அவனுக்குள் அதிகமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்கின்றன.அவற்றைத் தாண்டி தன்னை தரிசிக்க ஒருவனால் முடியுமா என்பதே இப்போது முக்கியமான கேள்வி.மனிதனின் உள்ளத்தை நிறைத்தவைகளில் மதம், கலாசாரம் ஆகியவற்றின் பங்கே அதிகம்.
எழுத்தாளர் சல்மான் ருஷ்டி இந்தியா வந்த போது ஆற்றிய நீண்ட உரையின் இடையே, மனித வரலாற்றில் முதலில் தோன்றியது மதமா? அல்லது கலாசாரமா? என்ற கேள்வி எப்போதும் பதில் காணமுடியாமல் தொடரும் ஒன்று என்று கூறி விட்டு பூன்னகை பூத்தார். அந்த புன்முறுவல் பொருள் பொதிந்த ஒன்று என்று அவர் பேச்சை கவனமாகக் கேட்டவர்கள் அறிவார்கள். இரண்டில் எது முதலில் வந்தது என்ற கேள்வியை விட அவை இரண்டும் ஆதிகாலம் தொட்டு மனிதர்களின் உள்ளத்தில் வழி வழியாக வந்து இன்றும் எவ்வாறு இயங்குகின்றன என்ற கேள்வி சற்று முக்கியமானதாக எனக்குத் தோன்றுகிறது.மதமும்,கலாசாரமும் மனிதர்களுக்குள் ஓர் ஒத்திசைவோடு ஒன்றை ஒன்று செழுமைப்படுத்தி வாழ்வை வளப்படுத்துகின்றன என்பதே உண்மை.
இப்போது நம்முடைய நோக்கம், பல விதமான எண்ணங்கள், குழப்பங்கள், பல நிறங்களாக நெளியும் கேன்வாஸ் துணி போல இருக்கும் நம் உள்ளத்தில் இருந்து அவற்றை நீக்கி வெண்மையாக்க வேண்டும் என்பது தான். அப்போது தெளிவாக நாம் யார், நாம் உண்மையில் எப்படி இருக்கிறோம் என்பதைக் காண முடியும்.அதையே நாம் விரும்ப வேண்டும்.ஏனென்றால் அங்கே தான் உண்மையான புதுமை விளைகிறது.நம் சமுதாய வாழ்க்கைக்கு ஒழுக்க நெறிகள் போதும். இந்த மதம் இருக்கிறதே, அது தான் குழப்பத்தை விளைவிக்கிறது.ஆதலால் அதை முற்றிலுமாக நீக்கி ஒரு கப்பலைக் கடலில் செலுத்துகின்ற தலைவன் போல, சமுதாயத்தில் சில நன்னடத்தை நெறிகளை வலியுறுத்துவதன் மூலம் மக்கள் நிம்மதியாக வாழலாம் என்று கி.மு ஆறு, ஐந்து ஆகிய நூற்றாண்டுகளில் சீனாவில் வாழ்ந்த தத்துவ ஞானி கன்பூசியஸ் கருதினார். ஒழுக்க நெறிகளை வகுத்து மக்களைக் கடைபிடிக்க சொன்னார். மதம் அதில் கலக்கக் கூடாது என்றார். ஆனால் அவர் காலத்துக்குப் பிறகு அவர் கொள்கைகளில் மதம் இயல்பாகக் கலந்து விட்டது.எனவே மனிதன் தவிர்க்க முடியாத அந்த மதத்தைப் பற்றி நாம் பேசியே ஆக வேண்டும்.நம் பயணம் தொடங்கி விட்டது.’ தோள் மேல் படகு’ அதைப் பற்றி தான் பேசுகிறது.
மதம் பற்றி பேசுவோம் :
நான் பேச நினைக்கும் மதம் படாடோபம் அற்றது.மதம் என்றவுடன் நம் மனக்கண் முன்னே தோன்றுபவை உயரமான கோபுரங்கள்,மடாலயங்கள் இன்னும் எத்தனையோ.அதை விட முக்கியமாக மதம் என்றவுடன் அது இந்து மதம், பெளத்தம் அல்லது வேறு எந்த மதமாக இருந்தாலும் கொட்டிக்கிடக்கின்ற மத நூல்கள் நம் கண் முன்னே வருகின்றன. வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் இவைதாம் நம் கண்களில் நிழலாடுகின்றன. பரிணமவளர்ச்சி காரணமாக விலங்கிலிருந்து மனிதன் வந்த போது அவனுள் புதிதாக ஒன்று முளைத்தது. அது தான் பகுத்தறிவு.உலகில் உள்ள அனைத்தின் தன்மைகளையும் அவற்றின் கூட்டு விளைவுகளையும்,உயிர்களின் மன இயக்கங்களையும்,ஆய்வின் மூலமாக புரிந்து கொள்வது பகுத்தறிவு. மேலும் அவற்றை நிரூபித்துக் காட்ட ஏதுவான வழி முறைகளையும் அதைத் தரும் அறிவாற்றலையும் பகுத்தறிவு குறிக்கிறது. இது பொதுவான ஒரு விளக்கம். மனிதன் ஒருவன் தன்னை உலகில் உள்ள மற்ற உயிருள்ள, உயிரற்றவைகளிலிருந்து பிரித்து உணரும் பிரஞ்கையைத் தாண்டி உலகோடு தன்னை முழுமையாக இணைத்துக்காணும் உணர்வின் வெளிப்பாடு அவன் ஆறாவது அறிவை குறிப்பதாக இருக்கும்.அதாவது மனிதன் ஒருவன் தன்னை இந்த உலகோடு அல்லது பிரபஞ்சத்தோடு இயங்குவதை உணரும் அறிவை அது குறிக்கிறது.அதை ருசித்த ஆதி மனிதனின் உள்ளத்தில் மதத்தின் வித்து விழுந்தது.அப்போது பண்பாடும் அதனோடு கலந்து மரமாக வளர்ந்தது.அது மேலும் மேலும் பரவி காடாக மாறியது. வளமான அந்தக் காடுதான் இப்போது மக்களின் முன்னே இதிகாசங்களாக, புராணங்களாக குவிந்தது கிடப்பவை.அந்தக் காட்டில் வழி தடுமாறி நம்மில் பலர் இருப்பதையும் நாம் பார்க்கிறோம். இப்போது மதத்தைப் பற்றி பேசும் நமது நோக்கம் அந்தப் பெரும் காட்டை உருவாக்கிய மூல விதையை அறிந்து கொள்வது தான்.இருந்த போதும் நூல்களின் வடிவில் மதங்களில் இவ்வளவு கதைகளும், விளக்கங்களும், விவாதங்களும் எப்படிப் பெருகின என்பதும் ஒரு முக்கியமான கேள்வி.மத உணர்வு ஆதியில் எளிமையாக சுருக்கமாகத் தான் வெளிப்பட்டிருக்கும்.ஏனென்றால் மதங்கள் என்பவை குறிப்பாக இந்து மதம், பெளதம் போன்றவை நூல்களில் அடங்கி சிலர் சிந்தனைகளில் உலாவரும் தேற்றங்கள் அல்ல. அவை வாழ்க்கை முறைகள் - மக்கள் நடை முறைப்படுத்த வேண்டியவை. ஆதியில் மத வித்தை தனக்குள் விதைத்து மக்களின் உள்ளங்களில் அது கிளைத்து அவர்களுக்கு நிழல் தர எவனோ ஒருவன் முயன்றிருக்க வேண்டும். முதலில் எளிமையாக இருந்தது. சமுதாயம் விரிவடைய விரிவடைய மனிதனின் தேவைகள் கூடியதோடு கூட்டு வாழ்வில் அது சிக்கல் நிறைந்ததாகவும் மாறிக் கொண்டே வந்திருக்க வேண்டும் .ஒருவன் காலையில் எழுந்து நீராடி, ஆடை உடுத்தி, உணவு உண்டு தன் வேலைகளைச் செய்து, தன் குடும்பத்தினர் தேவைகளையும் கவனித்து, உறங்கும் வரை பல விதமான காரியங்களில் ஈடுபடுகிறான். ஒருவன் உண்மையை அறிந்த ஞானியாக இருந்தாலும் உலகில் பிறந்த படியால் உடலாலும், உள்ளத்தாலும் அனைத்தையும் செய்தாக வேண்டும்.எல்லோருக்கும் வழிகாட்ட முனைந்த ஒருவனைச் சுற்றி சமுதாயத்தின் தேவைகள் எல்லாம் இருந்திருக்கும்.ஞானத்தைப் பற்றி பேசிய அவன் அவற்றைப் பற்றியும் பேசி ஆக வேண்டும்.ஒருவன், தான் இரண்டு நாள்கள் பட்டினி என்பான்.மற்றொருவனோ மலையில் இருந்து பறவை போல் பறக்கவேண்டும் என்பான்.எல்லோருக்கும் அவன் ஏதாவது சொல்ல வேண்டும். இயல்பாகவே மனிதன் நிறைய சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.வழி வழியாக நிறைய சொல்லப்பட்டன.எழுதும் முறை வந்த போது நூல்கள் மலை மலையாகக் குவிந்தன.இது தான் விதை ஒன்று மரமாகி காடாகி மக்கள் உள்ளங்களைச் சூழ்ந்த விதம்.
மூல விதை :
அந்தக் காடு கிழக்கில் இருந்தாலும், மேற்கிலிருந்து பரவினாலும் முல விதை ஒன்று தான். அதனால் தான் ராம கிருஷ்ண பரமஹம்சர் இந்து வாக, இஸ்லாமியராக இன்னும் பல மதத்தவராக உள்ளத்தை ஒடுக்கி வாழ்ந்து பார்த்துவிட்டு எல்லாம் ஒன்று என்றார்.அது ஞானத்தின் பார்வை.நாம் காண விழைவதோ அவற்றின் மூல வித்தை.பொதுவாக மதத்தைப் பற்றி பேசும் போது பலரும் புராணங்களைப்பற்றியும், இதிகாசங்களைப்பற்றியும் பேசுவதை நாம் காண்கிறோம். அவற்றை ஆராய்வதையும் நாம் பார்க்கிறோம். அது அவர் அவர் விருப்பம். ஆனால் மதத்தின் தோற்றுவாயாக இருக்கும் அந்த மூல விதையைப் பற்றிய சிந்தனையை தவிர்த்து அவற்றை ஆராய்வது, நிகழ்காலத்தைக் காண்பதையே ஒரு நெருடலாக உணர்வது போன்றது.அதாவது, அது ஒவ்வொரு முறையும் வெயிலையும், மழையையும், புயலையும் சன்னலைச்சாத்தி விட்டு தொலைக்காட்சியில் பார்ப்பது போன்ற செயலாக இருக்கும்
எனவே உள்ளம் என்பது கதைகள்,கருத்துகள்,கற்பனைகள் வண்ணக்கோடுகள் போட்டு நிரப்பி வைக்கப்பட்ட வெள்ளை நிற கேன்வாஸ் துணி. அதை மீண்டும் வெறும் திரையாக்கி நம்மைக் நாம் காணும் அற்புதத்தை நிகழ வைப்பது தான் மதத்தின் நோக்கமாக இருக்க முடியும். அதற்கு உதவ நடைமுறையில் கலாசாரம் கரம் கோர்க்கிறது.நமக்குள் சென்று நம்மைக் காண்பதில் தான் நம் வாழ்வின் பொருள் உள்ளது. நம்மையே நாம் கண்டு தன்னிலையை உணர்வது தான் பிறப்பின் நோக்கம்.அவ்வாறு எல்லாம் விலக்கி தன்னை மனிதன் ஒருவன் காணும் போது அல்லது, அவ்வாறு முயலும் போது கிடைக்கும் நிறைவு ஓர் ஓவியமாக அந்தத் திரையில் உயிர் பெற்று அசைகிறது.அந்த உணர்வை கவித்துமாக வெளிப்படுத்தி வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள நான் விழைந்த போது வளர்ந்தது தான் இந்த ‘ தோல்பாவை’ நூல்.
2014 இல் முரண் களரி படைப்பாக்கம் வெளியிட்டிருக்கும் இரண்டு புதிய நூல்கள்
கவிதைத் தொகுப்பு

கட்டுரைத் தொகுப்பு



2012 ஜனவரியில் வெளியாகி இருக்கும் புதிய கவிதைத் தொகுதி.
துவாரகை தலைவனின் மிதக்கும் பாதைகள் கவிதைத் தொகுப்பு – நூல் விமர்சனம்
- திரு. சுந்தர மூர்த்தி
வருடல்கள், கீறல்கள் தோன்றும் தருணங்களை உணர்தல், இதமானதே இம்சையாகும் விஷயத்தை விளக்குதல் ஆகியவை, அவர் அவருக்கு ஏற்படும் அனுபவங்களைப் பொறுத்து மாறுபடும்.இந்த அனுபவங்கள் பற்றிய தெளிதல் உள்ளவர்களே கவிதையைப் புரிந்து கொள்வதற்கும்,உணர்ந்து கொள்வதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை விளங்கிக் கொள்ள முடியும்.
வழிந்தோடும் வார்த்தைகளுக்குப் பின்னே அகராதியைத் தூக்கிக் கொண்டு ஓடுவதால் மட்டுமே கவிதையின் கனத்தைக் கண்டுவிட முடியாது.அதன் ஆழப்பகுதியின் இறுக்கத்தில் கவிதை கட்டுண்டு கிடக்கலாம்.
கம்பீரமாய் எழுந்து நிற்கும் மலைப்பாறைகளில் மட்டுமல்ல அழகின் வெளிச்சம். பாறை இடுக்குகளில் துளிர்க்கும் புல் இதழ்களில் கூட அது மின்னக்கூடும். அது போல துவாரகை தலைவனின் வார்த்தைகள் உயர்ந்து நிற்கும் போது அவற்றின் இடையில் கூட கவிதை கண்சிமிட்டுகிறது.
கடலை கரையில் நின்று ரசிக்கலாம்,நீருக்குள் நின்று கொண்டு ரசிக்கலாம், படகில் மிதந்து சென்று ரசிக்கலாம்,நீரில் குதித்து அதிக ஆழம் வரை நீந்திக் குளிக்கலாம். இவருடைய கவிதைகள் நம்மை ஆழத்திற்கு அழைத்துச் செல்லும் ரகம்.
பொங்கி வரும் வார்த்தை வெள்ளத்தில் சிக்கி,கரையேற நாம் பிடிக்கும் கட்டையில் கவிதையின் அழகு நம்மை ஆட்கொள்கிறது. வார்த்தைகளையும், வரிகளையும் தாண்டி நம்மை ஏதோ ஒன்றை நோக்கி அழைக்கின்றன துவாரகை தலைவனின் படிமங்கள்.
மலையின் நடுவே
பொங்கி வரும்
நீண்ட நதியின் நாவு
கரையின் உதடுகளை
உரசி எழுந்து மொழிவது
“இதோ உன்னதம்.”
முகத்தில் அறைந்த
குளிர்க் காற்றோடு
உடல் கரைந்து
வெள்ளத்தின் நுரையாக
மிதந்து போகும்.
என்ற வரிகளில் கவிஞர் காட்ட நினைப்பது வெறும் அழகியலை மட்டுமா?அது வாசகனின் அனுபவத் திவலைகளுக்கு ஏற்ப புதிய அர்த்தங்களை எழுப்பிச் செல்கின்றன.
சம்பவங்களுக்கும் அவை ஏற்படுத்தும் அதிர்வுகளுக்கும் இடையே நிகழும் வித்தைகளை வார்த்தைகளால் சொல்லி விட முடியுமா? என்ற கேள்விக்கு பதிலாகவும், சாட்சியாகவும் இருக்கின்றன துவாரகை தலைவனின் கவிதைகள்.
தொடர்ந்து
உலகைப் பிறாண்டுபவை
போரின் கைகள்.
அவை மனித உடல்களைப் பிழிந்து
பூமியின் மேல் பூசிய பூச்சில்
எப்போதும் மறைந்திருக்கும்
ஏதோ ஒன்று.
அதுவே மனிதனின் பேராசையோடும்
பொங்கி வந்து
பசுமைக் குடில் எரிக்கிறது.
போன்ற வரிகள் வாசகனை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.மரத்தின் கிளைகள் பிரிதலின் சித்திரத்தை ரசிக்கும் வாசகனை, வேர்கள் வரையும் ஓவியத்தில் ஒன்ற வைக்கும் வித்தையை தன் கவிதைகள் மூலம் நிகழ்த்தி இருக்கிறார் கவிஞர்.
நடப்பது மட்டுமல்ல இருப்பே ஒரு பயணம் தான் என்பது, மிதக்கும் பாதைகள் கவிதையில் வரும் புல்டோசர் வெளிப்படுத்தும் விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது.நவீனக் கவிதைகள் மலிந்து வரும் இவ்வேளையில் நவீனக் கவிதைகளின் நல்ல அம்சங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதாக அமைந்திருக்கிறது துவாரகை தலைவனின் மிதக்கும் பாதைகள் கவிதைத் தொகுப்பு.
நன்றி: ஜெயா பிளஸ் தொலைக் காட்சி


2012 ஜனவரியில் வெளியாகி இருக்கும் புதிய கட்டுரைத் தொகுதி.
தன்னிலையைக் கண்டு எழுதும் இவரது எழுத்து இயல்பாகவும் இனிதாகவும் உள்ளது.
‘அறிவுலக அர்த்தங்கள்’ பல தளங்களில் இயங்குகின்றன.வாங்கி வாசியுங்கள்
வாழ்க்கையை நேசியுங்கள்...
காவ்யா சண்முகசுந்தரம்
[பதிப்புரை]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
துவாரகை தலைவனின் ‘அன்பு- சிவம்- அறிவுலக அர்த்தங்கள்’
நூல் விமர்சனம்
- திரு.சுந்தர மூர்த்தி
இந்த நூலில் ஆழம் காணமுடியாத மனித குலப் பிரச்சனைகள் குறித்து ஆக்கபூர்வமான, சிந்திக்கத் தூண்டும் கருத்துகளை முன் வைக்கிறார் துவாரகை தலைவன்.
மனிதனின் நம்பிக்கைகள், அதன் போக்குகள்,இன்பம், துன்பம், கடவுள் பற்றிய கருத்துகள், அன்பு, அதன் பரிமாணங்கள், போர், பகை,அமைதி,தேடல்கள் என்று செல்கிறது ஆசிரியர் பார்வை.ஆழமான கருத்துகளில் ஊன்றி நின்று மேலும் அகழ்ந்து செல்லும் ஆசிரியரின் வார்த்தைகள் வாசகனை புதிய சிந்தனை சுழலுக்குள் இழுத்துச் சென்று மூழ்கடிக்க முயல்கின்றன.மூழ்கிக் குளிக்க ஆசைப்பட்டால் மூச்சுத் திணறும் நிலைக்கு இழுத்து விடுகிறார் ஆசிரியர்.
அமைதியோடு கொள்ளும் விழிப்புநிலை அறிவார்ந்த தத்துவத் தேடல், உலக அரசாங்கம்,உலக அமைதிக்கான போர், வல்லரசுகளிடம் அடிமைப்படுதல், விடுதலையடைதல், இல்லாத உலகத்தில் மனதை அலைய விட்டு நிகழ் காலத்தைத் தவறவிடும் மனிதனின் பாங்கு என பல புதிய தளங்களுக்கு வாசகனை அழைத்துச் செல்லும் இவரின் கருத்துகள், நூல் என்பது பொழுது போக்கிற்காக அல்ல,பொழுதை அர்த்தமுள்ளதாக ஆக்குவது என்பதை சுட்டிக் காட்டும்படி உள்ளன.
நாடுகளின் தோற்றம்,மொழியின் தொடக்கம்,அவற்றின் மீதான கருத்துகள், தேசப்பற்று, மொழிப்பற்று ஆகியவற்றில் மனிதர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என விரிகின்றன நூலாசிரியரின் கருத்தோட்டங்கள்.தாய் மொழிப்பற்று,தாய்நாட்டுப்பற்று தொடர்பான பிரச்சனைகளில் சிக்கிய ஜின்னா பற்றிய இவரின் விளக்கங்கள் நல்ல வரலாற்று ஆவணம் எனலாம்.
அமைதிக்கான போர், ஆயுதக் குவிப்பு, அமைதி ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் தோய்ந்து அழகாக எழுதியிருக்கிறது ஆசிரியர் பேனா.தேடல் உள்ளவர்கள் தேடிப் படிக்க வேண்டிய நூல்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~``````நற்றிணை இதழில் வெளியான விமர்சனங்கள்
துவாரகை தலைவனின் மிதக்கும் பாதைகள் கவிதைத் தொகுப்பு - நூல் விமர்சனம்
- திரு.போப்பு [ பொறுப்பாசிரியர்- நற்றிணை]
கவிஞர்களுக்கு உரித்தான இயற்கை மீதான காதல்,மனித சமூகம் அறிவியலின் பெயரால் நிகழ்த்தும் இயற்கை சுரண்டல்,மனித வாழ்க்கையின் மீதேறிய அர்த்தமில்லா படபடப்பு ,அதன் மீது தான் கொண்டிருக்கும் சுயதத்துவ உறுதியில் இருந்து மெலிதாக வெளிப்படும் எள்ளல் அல்லது புன்னகை இவை தான் வார்த்தைகளின் திரட்சியாக கவிதைகளாகின்றன துவாரகை தலைவனுக்கு.
இத்தத்துவ தரிசனங்களையும் தனக்குள் புடம் போட்டுக் கொள்ளும் தெளிவற்ற உருட்டலாகவன்றி அவர் விரித்துச் செல்லும் காட்சிகள் வழியாக அவரது தத்துவம் நமக்கு வண்ணங்களாக வெளிப்படுகிறது.
தனது கற்பனைக்குள் கருக் கொண்ட அசாதாரணமான காட்சிகளையும் இலகுவான வார்த்தைகளால் நிதர்சனமான காட்சிகளாக மாற்றுகிறார். ‘போர் பித்தன்’ என்ற தலைப்பிலான கவிதையின் இப்பகுதி அதற்குத் தேர்ந்த ஆதாரமாக இருக்கிறது.
அந்தப் பெரும் போரில்
பிளந்து வெடித்தது உலகம்.
அதிகார வெறியின்
தீ விரித்த
அகன்ற திரை
பூமியைப் போர்த்தியது.
பல நாட்டுக் கொடிகள்
அனைத்தும் தெரிந்த
நெருப்புத் திரையில்,
பேராசை மடிப்புகள்
ஒளிர்ந்து மறைந்தன...
குளிர் காய மூட்டிய
தீ ஜூவாலையின்
முனையில் மிதக்கும் புகை நூல்
அப்போர் வீரனின்
கடைசி கால வாழ்க்கை…
தனக்குத் துணையாய் வந்த எலிக்குத்
தந்த இருப்பிடம்
ஒரு இரும்புப் பெட்டி...
நவீன மனிதனின்
அறிவாற்றலும், மனப்பிறழ்ச்சியும் இணைந்தே
ஆயுதக் கிடங்குகளில்
குவியும்...
அறிவின் உடல் பெருத்து உலவும்
மனித இனம்
பெருமையின் ரோமக் கால்கள் சிலிர்க்க
நீட்டுவது
போர் வெறியின் பற்கள்...
ஒரு சிறு ரொட்டித் துண்டைக் கொறிக்க
வயிறு வரை நீட்டுகிறது எலி – தன்
கோரமான முன் பற்களை…
மூன்று பக்க நெடிய கவிதையில் அற்புதமான காட்சிப் படிமத்தில் நம் காலத்தின் மனித குல சரிவை, இழிவை வாசிக்கும் எவர் மனதிலும் நளினமாகவும் அழுத்தமாகவும் பதியச் செய்கிறார்.
வார்த்தைகளில் ஜோடனை இல்லை.அழகில் ஏகாந்தம் இல்லை.சமூக எதார்த்தத்தை கண்முன் நிறுத்தி காலத்தின் பயங்கரத்தை வாசகர்கள் உணரும் படி கவிதைக் காட்சிகளை அடுக்கிக் கொண்டு போகிறார்.
தனக்கான கவி நோக்கை,கவிதை மொழியை ஆத்மா நாம்,பிரமிள் போன்ற தமிழின் ஆதாரக்கவிஞர்களிடம் ஆதர்சமாகப் பெற்று தற்கால சமூக நிகழ்வுகளை முன்வைப்பது துவாரகை தலைவனின் கவிதைப்போக்காக இருக்கிறது.
ஒரே தலைப்பில் பல்வேறு கவிதைகள்[பல் வேறு பரிமாணங்களில் இருந்து]சொல்லிப் பார்ப்பது இவரது தனித்துவமாக இருக்கிறது.
மிதக்கும் பாதைகள் - நான்கு கவிதைகளாக எழுதியும் முடிவுறாத பயணமாக நீள்கிறது கவிஞனின் பார்வை.அந்த நெடும் பாதையில் ஏற்படும் நில அதிர்வை கவிமனசு கொண்டு இவர் அளக்கும் அளவை நுட்பம் வேறுஎந்த மானிகளும் அளக்க முடியாதது.
தகவல் யுகம் என்று பகட்டு காட்டுகிற இக்காலத்தில் ஜீவனற்ற பரிமாறல்களும்,பொய்மையும் பெருகிப்போனதை சொல்லாமல் சொல்கிறது அஞ்சல் தலைகள் கவிதை.குகைவாய்,பறக்கும் குதிரை,பட்டுப்போர்வை போன்ற யாரும் தொடாத கவிதைப் பக்கங்களை நம் முன் நிறுத்தும் இக்கவிதைத் தொகுப்பு வாசிப்பை வெறும் வாசிப்பாகவன்றி அனுபவமாகச் செரிப்போர் வாசிக்க வேண்டிய ஒன்று.
பெரும் தாக்கத்தை நிகழ்த்த வல்லவர் கவிஞர் துவாரகை தலைவன்.அதற்கான சாத்தியங்களை நாம் இத்தொகுப்பில் காண முடிகிறது.
காவ்யா பதிப்பகத்தாரின் தயாரிப்பு சற்றே மெருகேறியிருப்பதாகச் சொல்ல முடியும் இத்தொகுப்பின் வாயிலாக.
துவாரகை தலைவனின் அன்பு –சிவம் –அறிவுலக அர்த்தங்கள் நூல் விமர்சனம்
- போப்பு [பொறுப்பாசிரியர் - நற்றிணை]
இலகுவான மொழி நடை. அழுத்தமான கருத்துகள். அதை நிறுவும் திண்மையான சான்றுகளோடு சிரத்தையாக எழுத்திச் செல்கிறார்.
சொல்ல வந்த கருத்துகள் முன்னுந்திச் செல்கின்றன.எடுத்துக் கொண்ட பொருளின் அனைத்து ஆழ அகலங்களுக்கும் ஊடிப் பயணிக்கிறார்.
குட்டி குட்டிக் கதைகளை எடுத்துக் காட்டுகளாகப் பயன்படுத்தியிருப்பது சொல்ல வந்த பொருளுக்கு வலுசேர்ப்பது மட்டுமல்லாமல் வாசிப்பு சுகானுபவத்தையும் அதிகரிக்கிறது.
கட்டுரைகளில் இவர் கொள்ளும் உலகப் பொதுமை வரலாற்று நீட்சி ஆகியவை கட்டுரை செய்பவர்கள் யாரும் மனங்கொள்ளத்தக்கது.அநாயாசமாக சொல்ல வந்த பரப்பை விரித்துக் கொள்ள முடிகிறது இவரால்.
உலகத் தலைவர்கள்,ஏடறிந்த ராஜ குடும்ப வரலாறுகள் ஆகியவற்றில் நிகழ்ந்த சம்பவங்களை தனது கருதுகோளுக்கு சாதகமாகப் பயன்படுத்துவதில் இருந்து இவரது பன்முகப்பட்ட வாசிப்பும், நினைவாற்றலும் நம்மை பிரமிக்க வைக்கின்றன.எந்தக் கட்டுரைக்கும் ஆதார நூற்பட்டியல் போட்டு நம்மை மிரட்டவில்லை.வாசிப்பு வழியே நாம் துவாரகை தலைவனுக்கு மிக நெருக்கமானவர்கள் ஆகிவிடுகிறோம்.
மொழி,இனம் போன்ற இன்றளவும் உணர்வு பூர்வமான அம்சங்களின் தோற்றுவாய் என்ன?அவற்றை அறிவுத் தளத்தில் இயங்குபவர்கள் எப்படிப் புரிந்து கொள்வது என்பன போன்றவற்றையும் வலியுறுத்தல் இன்றி நம்மையறியாமல் படியச்செய்கிறார்.
மனித மனங்களின் நுட்பமான உணர்வுகள் சில சமயங்களில் எத்தனை பெரிய விளைவுகளுக்கு துவக்கப்புள்ளியாக அமைந்துவிடுகின்றன என்பதை நுட்பமாக இதுவரை யாரும் பார்க்காத கோணத்திலிருந்து பார்க்கிறார்.
நன்றி : நற்றிணை ஜூலை - செப்டம்பர் 2012


2011 புதுப்புனல் வெளியீடு.


2011 கட்டுரைத் தொகுதி புதுப்புனல் வெளியீடு.


2007 கவிதைத் தொகுதி இளந்திரை பதிப்பகம் வெளியீடு